சங்க காலங்களில் ஓலைச்சுவடிகளில் தமிழ் எழுதப்பட்டது, கல்வெட்டுகளில் தமிழ் செதுக்கப்பட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டிஜிட்டல் சாதனத்தின் விசைப்பலகையில் தமிழ் தட்டச்சு / உள்ளிட / எழுதப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மற்றும் மேக் சாதனங்களுக்கு இயங்குதள அப்டேட்களை அறிமுகம் செய்ய, அதன் ஊடாக புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதில் பயனர்களுக்கு குட் மற்றும் பேட் அனுபவமாக அமைந்துள்ளது. நல்ல செய்தி என்னவென்றால், தமிழ் உட்பட 10 இந்திய மொழிகளில் அந்த சாதனைகளின் பயனர்கள் கமெண்ட் கொடுக்கவும், மெனுக்களை பார்க்கவும் முடியும்.
அதே நேரத்தில் தமிழ் உட்பட 10 இந்திய மொழிகளின் எழுத்துருவும் (Font) மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, அதன் தரத்தை பயனர்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழ் எழுத்துகளுக்கே உரிய அழகியல் புதிய எழுத்துருவில் இல்லை என்பது அவர்களது சங்கடம். இது தொடர்பாக தங்களது எதிர்வினையை சமூக வலைதள பயனர்கள் மூலம் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு அளிக்கும் அனைத்து சேவைகளிலும் தரத்தை பின்பற்றுவது வழக்கம். அந்த நிறுவனத்தின் சக்ஸஸுக்கு அதுவும் ஒரு காரணம். அதனால்தான் 1976-ல் கராஜில் தொடங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம், இன்று உலக நாடுகளில் சுமார் 535 ஆப்பிள் ஸ்டோர்களை கடை விரித்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட ஆப்பிள் ஸ்டோர்கள் அமெரிக்காவில் உள்ளன.
இது ஆப்பிளின் கதை: ஸ்டீவ் ஜாப்ஸ், ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் (1976) ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினர். முதலில் கம்யூட்டரை வடிவமைத்தார்கள். படிப்படியாக ஆப்பிள் நிறுவனம் பல்வேறு டிஜிட்டல் டிவைஸ்களை அறிமுகம் செய்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனம். இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பை என இரண்டு ஆப்பிள் ஸ்டோர்கள் இயக்கத்தில் உள்ளன. சென்னை உட்பட சில நகரங்களில் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த நிறுவனத்தின் கணினி, ஸ்மார்ட்போன் மற்றும் இன்னும் பிற சாதனங்களுக்கு தனி டிமாண்ட் உள்ளது. தனித்துவமான பயனர் அனுபவம், பாதுகாப்பு உள்ளிட்டவை இதற்கு அடிப்படை காரணங்கள். அதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களிடத்திலும் ஆப்பிள் சாதனங்களுக்கு மவுசு இருக்கிறது. அதுவே சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உலகின் நம்பர் 1 நிறுவனமாக ஆப்பிளை நிலைநிறுத்தி உள்ளது.
அப்படிப்பட்ட நிறுவனம் தங்களது பயனர்களை கவரும் வகையில் இயங்குதளம் சார்ந்து புதுப்புது அப்டேட்களை வழங்கும். அப்படி அந்த நிறுவனம் அண்மையில் வழங்கிய இயங்குதள அப்டேட் தான் இப்போது பயனர்களை சோதனைக்கு ஆளாக்கி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் எப்போதும் அதன் சாதனங்களில் எழுத்துருவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். வெறும் ஆங்கிலம் என்று இல்லாமல் உலக மொழிகள் அனைத்துக்கும் அந்த முக்கியத்துவம் சம அளவு கொடுக்கப்படும். இந்த நிலையில் தான் புதிய இயங்குதள அப்டேட்டில் அதன் எழுத்துரு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தமிழுக்கும் அப்ளை ஆகியுள்ளது. அது அதன் பயனர்களை அப்செட் ஆக்கியுள்ளது. இது குறித்து ஆப்பிள் சாதன பயனர்கள் தங்கள் கருத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
தமிழ் எழுத்துருவுக்கு ஏன் இந்த நிலை? – “தமிழ் எழுத்துருவுக்கு ஏன் இந்த நிலை? இன்று கணினியிலும் கைபேசியிலும் தமிழ் இருக்கிறதென்றால் அதற்கு பல்வேறு தனிநபர்களின் முயற்சிதான் காரணம். ஆனால், ஆங்கிலத்தை ஒப்பிடும்போது தமிழ் எழுத்துருக்கள் எப்போதும் விகாரமாகவும், பெரிதாகவும், எழுத்துகளுக்கிடையே போதிய இடைவெளியற்றும் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டின் இயல்பு எழுத்துருக்கள் (Default Fonts). ஆப்பிள் மென்பொருளில் எழுத்துருக்கள் ஓரளவுக்கு நன்றாக இருக்கின்றன. அதில் தமிழ் எழுத்துருக்கள் அழகாக இருக்கின்றன என்பதற்காகவே ஆப்பிள் கணினிக்கு மாறியவர்கள் பலர். தமிழ் எழுத்துருக்களின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்று எண்ணியிருந்தோம். திடீரென்று ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
புதிதாக வந்த ஆப்பிள் மென்பொருளில் இயல்பு எழுத்துருவை மாற்றியிருக்கிறார்கள். எழுத்துருவின் அழகியலில் சிக்கல் இருக்கிறது. தமிழின் இயல்பான வளைவு நெளிவுகளும் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. ண, நூ போன்ற எழுத்துகள் மிகவும் நீளமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
எழுத்துகளுக்கிடையே போதிய இடைவெளி இல்லை. துணைக்கால், புள்ளி போன்றவை கண்ணுக்குத் தெரியாத அளவு சிறிதாக இருக்கின்றன. எழுத்துகள் ஒட்டும்போது வடமொழி போன்ற தோற்றம் கொடுக்கிறது. அநேகமாக தமிழ் தெரியாதவர்கள்தான் இந்த எழுத்துருவை உருவாக்கியிருக்க வேண்டும். தமிழ் எழுத்துக்களின் தன்மையை அறிந்தவர்களே உருக்களை உருவாக்குவதுதான் இதற்குத் தீர்வாக இருக்க முடியும்” என ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார்.
“நான் ஏன் பூஜா ஹெக்டேவை ரசித்தேன்? நான் ஏன் லாவண்யா அபிஷியலை ரசிக்கிறேன்? வழக்கத்துக்கு மாறானதொரு மேம்பட்ட அம்சம் ரசிப்புக்குரியதாக அவர்களிடம் இருப்பதாக எனக்குத் தோன்றுவதால் ரசிக்கிறேன். நான் ரசிப்பதை உலகம் ரசிக்க வேண்டுமென்பதில்லை. அவ்வண்ணமே, உலகப் பொது ரசனைகளுடன் நான் ஒத்துப் போக வேண்டியதுமில்லை.
இதுவேதான் மக்கிண்டாஷ் கணினியை நான் ரசிப்பதற்கும் அடிப்படை. நிகரற்ற பயன்பாட்டு எளிமை, அனைத்து அம்சங்களிலும் மினிமலிசம், எழுதுபவனுக்கு எல்லா விதமான சொகுசுகளையும் அள்ளித் தரும் கருவி. பிராந்திய மொழிதானே என்று விண்டோஸ், ஆண்ட்ராய்டினைப் போலக் காணச் சகிக்காத எழுத்துருக்களை அள்ளிக் கொட்டாமல், கண்ணை உறுத்தாத, வாசிப்பு வேகத்தைத் தடுக்காத, அநாவசிய அலங்காரங்களற்ற, பார்க்கப் பார்க்க விரும்பச் சொல்லும் சிஸ்டம் ஃபாண்ட் அதன் சிறப்பம்சமாக இருந்தது.
நேற்று வந்திருக்கும் 18.4 / 15.4-இல் அதைத் தூக்கிவிட்டு, படிக்கவே முடியாத ஏதோ ஒரு ரகத்திலிருந்து தேர்ந்தெடுத்து ஓர் எழுத்துருவை நிறுவியிருக்கிறார்கள். ஃபேஸ்புக் உள்பட எந்த இணையத்தளத்திலும் இரண்டு வரிகளுக்கு மேலே கண் நகர மறுக்கிறது. எங்கிருந்து இப்படியொரு அசகாய யோசனை கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை. உலகத்தர திராபை.
பூஜா ஹெக்டேவாகட்டும் லாவண்யா அபிஷியலாகட்டும் மக்கிண்டாஷ் கணியாகட்டும் இன்னொன்றாகட்டும். அனைத்தும் குருதிப்புனல் சின்ன சுவாமிஜி பொறுப்பில் இருப்பவை. அவ்வளவுதான். அந்தப் பதவி என்றும் இருக்கும். சுவாமிஜிகள் மாறக்கூடியவர்கள். இப்போதைக்கு என் கணினியில் என் விருப்பத்துக்குப் பழைய எழுத்துருவினை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறேன். கணினியில் முடிவது போல இது மொபைலில் முடியுமா என்று தெரியவில்லை. முடியவே முடியாது என்றால் அடுத்து வாங்குவது ஆப்பிள் போனாக இருக்காது.
ஒருவேளை இது இந்த அப்டேட்டின் bug ஆக இருக்குமானால், அடுத்ததில் அவர்களே சரி செய்துவிடக் கூடும். பொறுத்திருந்து பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வருகிறேன்” என எழுத்தாளர் பா.ராகவன் ஃபேஸ்புக் பதிவில் பதிவிட்டுள்ளார்.
“எனது சாதனத்தை ஐஓஎஸ் 18.4-க்கு அப்டேட் செய்தேன். சிஸ்டம் மொழியாக தமிழை பார்க்கும் ஆர்வத்தில் இதை செய்தேன். ஆனால், அதன் தமிழ் எழுத்துரு மிகவும் மோசமாக உள்ளது. எனக்கு ஏமாற்றம் தந்தது. நான் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த காரணமே அதன் தமிழ் எழுத்துரு தான். ஏனெனில் தமிழ் எழுத்துருவில் அதிக கவனம் செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனம் ஆப்பிள் தான். இப்போது அது இறந்த காலம் ஆகியுள்ளது.
தமிழ் மொழியை அறவே அறியாதவர்கள் ஆப்பிளின் இந்த புதிய எழுத்துருவை உருவாக்கி உள்ளார்கள் என எண்ணுகிறேன். ஏதோ தேவநகரி போல உள்ளது. அந்த பாஷையின் அடிப்படையில் தான் இப்போதைய தமிழ் எழுத்துரு உள்ளதாக கருதுகிறேன். காற்புள்ளி, புள்ளி, துணைக்கால் போன்றவற்றின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் தனித்துவமானது.
இந்த பதிவு சிலருக்கு வேண்டாத ஒன்றாக இருக்கலாம். தமிழ் உட்பட பல்வேறு பிராந்திய மொழிகளை டிஜிட்டல் தளத்துக்கு கொண்டு வந்ததன் பின்னணியில் அசாத்திய உழைப்பும், முயற்சியும் உள்ளது. ஒரு மொழியின் இயக்கம் மட்டுமில்லை அதன் அழகியலும் அப்படியே இருக்க வேண்டும். இது தொடர்பாக ஆப்பிளுக்கு மெயில் செய்துள்ளோம். பொது வெளியில் பகிர்வது நல்ல பலனை தரும். இயன்றவரை பகிருங்கள்” என ரஞ்சித் என்ற சமூக வலைதள பயனர் தனது பதிவில் கூறியுள்ளார்.
நிச்சயம் ஆப்பிள் நிறுவனம் இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.