தற்போது அதிகரிகப்பட்டுள்ள மின் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கான கணக்கீடுகள் தற்போது நடைபெற்று வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
கடந்த அக்டோபரில், 18 சதவீதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
அதில் சுமார் 50% வீதத்தை குறைக்க முடியும் என்பதை தற்போதைய கணக்கீடுகள் உறுதிப்படுத்தியுள்ளன என்றார்.
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனைகள் எதிர்வரும் 15ஆம் திகதி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொறியியலாளர் நோயல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பான அறிவிப்பை நேற்று (08) பிற்பகல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக கையளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும், இதுவரையில் அவ்வாறான பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.