சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்துள்ளது. முன்னதாக நேற்று தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை அதிகரித்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.67,280-க்கு விற்பனையானது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று பவுனுக்கு ரூ.1200 அதிகரித்துள்ளது. இதனால் இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2680 வரை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.102-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி 22 காரட் ஒரு பவுன் தங்கம் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், தொடர்ந்து அதிகரித்து, கடந்த 3-ம் தேதி ரூ.68,480 என புதிய உச்சம் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்தது. இதனால், சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.
ஆனால் அந்த நிம்மதி நீடிக்காமல், தங்கம் விலை நேற்று ஒரே நாளில் நேற்று 2 முறை அதிகரித்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.67,280-க்கு விற்பனையானது. இன்றும் நகை விலை உயர்ந்துள்ளது.
காரணம் என்ன? – ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு குறிப்பாக சீனா மீதான அதிக வரி விதிப்பு தான் தங்கம் விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பை பல்வேறு நாடுகளுக்கும் தற்காலிகமாக நிறுத்திவைத்தாலும் கூட சீனாவுக்கு 125% வரி விதித்துள்ளார். ட்ரம்ப் அறிவிப்பால் உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வந்தாலும் கூட அமெரிக்காவில் கடன் பத்திரங்களின் விற்பனை சுணக்கம் கண்டுள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்கள் மீது உலகளவில் இரண்டாவது பெரிய முதலீடு செய்த நாடாக சீனா இருக்கிறது. ட்ரம்ப்பின் 125 சதவீத வரி விதிப்பால் சீனா அமெரிக்காவில் உள்ள கடன் பத்திரங்களை விற்றுவிட்டு தங்கத்தின் மீதான முதலீட்டில் கவனத்தை திருப்பியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் தொடரும் என்றே கூறப்படுகிறது.