திருச்சி: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள், திருச்சியில் நடத்திய சோதனை 10 மணி நேரத்துக்குப் பிறகு நிறைவடைந்தது.
சென்னையில் 10 இடங்களில்… – தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பரலூர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் அமைச்சரின் சகோதரி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் திங்கள்கிழமை காலை தொடங்கி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் மட்டும் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்தது. கோவையில் அமைச்சரின் சகோதரர் மணிவண்ணனுக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் இருப்பதாகவும், அது தொடர்பாக சிங்காநல்லூர், அவினாசி சாலை, மசக்காளி பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.
திருச்சி இல்லத்தில் சோதனை: திருச்சி தில்லைநகர் 5-வது குறுக்குத் தெருவில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டுக்கு காலை 6.45 மணியளவில், 5 கார்களில் துணை ராணுவ பாதுகாப்புப் படையினருடன் வந்த 10-க்கும் அதிகமான அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். தற்போது, சட்டப்பேரவை நடைபெறுவதால் அமைச்சர் நேருவும், அவரது துணைவியாரும் சென்னையில் உள்ளனர். அதேபோல, அவரது மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவும் டெல்லியில் உள்ளார். வீட்டில் சமையலர் மற்றும் உதவியாளர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மட்டுமே இருந்தனர்.
இதையடுத்து, பாரதி நகரில் வசிக்கும் நேருவின் மகள் ஹேமா, அவரது கணவர் ஆனந்த் ஆகியோரை அமலாக்கத் துறையினர் அழைத்து வந்து சோதனையை தொடங்கினர். அப்போது, வீட்டில் இருந்தவர்களிடம் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்ட அமலாக்கத் துறையினர், வீட்டிலிருந்து யாரும் வெளியேறக் கூடாது என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் வந்த காரிலிருந்து ‘பிரின்டர்’, சூட்கேஸ் ஆகியவற்றை அடுத்தடுத்து வீட்டுக்குள் எடுத்துச் சென்றனர்.
இதேபோல, 10-வது குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரரான மறைந்த தொழிலதிபர் ராமஜெயத்தின் வீட்டிலும், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராமஜெயத்தின் மனைவி லதா மட்டும் வீட்டில் இருந்தார். இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
வரி ஏய்ப்பு புகார்: அமைச்சர் கே.என்.நேருவின் மற்றொரு சகோதரரான கே.என்.ரவிச்சந்திரன் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். 1997-ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் மூலம் கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் மூலம் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஏற்கெனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
10 மணி நேர சோதனை நிறைவு: அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் காலை தொடங்கிய அமலாக்கத் துறை சோதனை 10 மணி நேரம் நடந்தது. பின்னர், அதிகாரிகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றனர். சோதனை நடந்த பகுதியில் காலையில் இருந்து திமுக தொண்டர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், சோதனை முடிந்த அதிகாரிகள் புறப்பட்டுச் சென்ற நிலையில், அமைச்சரின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.