அல் அக்ஸா பள்ளிவாசல் முஸ்லிம் உம்மத்தின் அடையாளம்

அக்ஸா
பாலஸ்தீன புனித மண்ணில் அமைந்துள்ள பைத்துல் மக்திஸ்- அல்மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளிவாசல் பரக்கத் செய்யப்பட்ட தேசம், நபிமார்களின் பூமி, என்றெல்லாம் சிறப்பாக அறியப்படுகின்ற பலஸ்தீன் மண்ணில் அமையப் பெற்றுள்ளது.

உலகில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸாவாகும். புனித கஃபா கட்டப்பட்டு நாற்பது வருடங்களின் பின் மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பல இஸ்லாமிய வரலாற்று அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி மஸ்ஜிதுல் அக்சா நபி ஆதம் (அலை) அவர்களால் கட்ட ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் நபி இப்ராஹீம் (அலை), மற்றும் இஸ்மாயில் (அலை) அவர்களால் மஸ்ஜிதுல் அக்சா புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. அதன் பின் நபி தாவூத் (அலை) அவர்களால்  மஸ்ஜிதுல் அக்சா மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.

இறுதியாக நபி சுலைமான் (அலை) அவர்களால் மஸ்ஜிதுல் அக்சா கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

முஸ்லிம்களின் உத்தியோகபூர்வ முதல் கிப்லாவாக மஸ்ஜிதுல் அக்சா பதினாறு மாதங்கள் செயலில் இருந்து வந்து, அதன் பின்னர் மறுமை வரை மக்காவிலுள்ள புனித கஃபாவே தொழுகைக்கான திசையென மாற்றப்பட்டது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் புனித மக்காவிலிருந்து “புராக்” எனும் வாகனத்தின் மூலம் மஸ்ஜிதுல் அக்சாவை அடைந்து, பின்னர் அங்கிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்களின் உதவியோடு ஏழாம் வானத்திற்கு சென்று அங்கு அர்ஷில் இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஏக இறைவன் அல்லாஹ்வை திரைமறைவாக உரையாடி விட்டு, சுவர்க்கம், நரகம் நபிமார்களை பார்த்து விட்டு மக்கா திரும்பினார்கள் என்பதை இஸ்லாமிய வரலாற்றில் படித்திருக்கின்றோம்.

ஹதீஸ்களின் வாயிலாக மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புகள்

அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களிடம் எந்த மஸ்ஜித் முதன் முதலாக நிர்மானிக்கப்பட்டது என கேட்ட போது அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபா இருக்கும் மஸ்ஜித்) என்றும் அதற்குப் பின் எது என்று கேட்ட போது மஸ்ஜிதுல் அக்சா என்றார்கள். இந்த இரண்டு மஸ்ஜிதுகளுக்கும் இடைவெளி எத்தனை வருடங்கள் என கேட்ட போது 40 வருடங்கள் என்றார்கள். (ஆதாரம் புகாரி)

அபூ ஹுறைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று மஸ்திகளைத் தவிர (நற்காரியங்களை செய்யும் எண்ணத்தில்) பிரயாணம் செய்யாதிர்கள்: மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்சா. (ஆதாரம் புகாரி)

தபுக் போரின் போது மறுமை நாளின் ஆறு அடயாளங்ளை நபியவர்கள் குறிப்பிட்டார்கள்; அவற்றில் எனது வபாத், பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுவது…. என்றார்கள். ஆதாரம் புகாரி

தஜ்ஜால் நுழைவதற்கு தடுக்கப்பட்டுள்ள இடங்களில் மஸ்ஜிதுல் அக்சாவும் ஒன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் அஹ்மத்.

யூத சக்திகள் மஸ்ஜிதுன் அக்ஸாவை அழித்துவிட்டு அவ்விடத்தை கையகப்படுத்த முயற்ச்சித்து வருகின்றனர். எங்கள் ஒவ்வொரு தொழுகையிலும் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் துவா செய்வோம். ஆமீன்.

Leave a Reply