வடக்கு காஸா பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை முற்றுகையிட்ட ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய ஆயுதப் படைகள் தற்போது அதற்குள் நுழைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
இங்கு 650 நோயாளிகளும் 500 மருத்துவ ஊழியர்களும் 5,000 முதல் 7,000 பொதுமக்களும் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காஸா சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் முஹிர் அல் பார்ஷ்யின் கருத்துப்படி, அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்திற்குள் ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் மேற்கிலிருந்து நுழைந்துள்ளதுடன் மருத்துவமனைக்குள் பல வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் மருத்துவமனையின் உள்ளே நுழைந்து அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சேவைகள் பிரிவுகளை சோதனை செய்ததுடன், மருத்துவமனையின் அடித்தளத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அடாவடியாக ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் உள்ளே நுழைந்தால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்திலும் பீதியிலும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹமாஸ் போராளிகள் அல் ஷிஃபா மருத்துவமனையில் நிலைகொண்டிருப்பதாக கூறி ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் அங்கு நுழைந்துள்ளது. மேலும் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணயக் கைதிகள் அங்கு அடைத்து வைக்கப்பட்டுளார்கள் என்ற சந்தேகமும் இருப்பதாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகக் கூறும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல், ஹமாஸ் உறுப்பினர்களை சரணடையுமாறு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அல் ஷிஃபா மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பின் கட்டளை மையம் என்று குற்றம் சாட்டும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம், இப்போது அதன் தரை தளத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுகளை வீசி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
காசா பகுதியில் , நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் அல் ஷிஃபா மருத்துவமனை இந் நாட்களில் அதன் அனைத்து விநியோகங்கள் மற்றும் செயல்பாடுகள் சீர்குலைந்துள்ளதால் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் குறைமாத குழந்தைகளை வைத்திருந்த இன்குபேட்டர்கள் வேலை செய்யாததால், குழந்தைகளை போர்வைகளால் போர்த்தப்பட்டு, சூடான படுக்கைகளில் வரிசையாக கிடத்தப்பட்டிருப்பது யாருடைய மனதையும் பதற வைக்கும் காட்சியாக இருந்தது.
குறைமாத குழந்தைகளை பராமரிக்க பேட்டரியில் இயங்கும் மொபைல் இன்குபேட்டர்களை வழங்குவதாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அரசு ஊடகங்களுக்கு அறிவித்த போதிலும், யுத்த டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை மட்டுமே மருத்துவமனை வளாகத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இறுதியாக மீண்டும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் கருத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம், அல் ஷிஃபா மருத்துவமனை ஹமாஸ் அமைப்பின் செயல்பாட்டு மையமாக பயன்படுத்தப்படுவதை அமெரிக்க புலனாய்வு அமைப்புகளும் உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளது.
ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளுக்கு ஜோ பைடனும் ஒரு செய்தியை அளித்துள்ளார். ”இருங்க – நாங்கள் வருகிறோம். “Hang on there – we are” என்று பைடன் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்திற்குள் ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் நுழைந்தன.
அமெரிக்காவின் அறிக்கையானது ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் நுழைவதற்காக பச்சை கொடி காட்டியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் ஜோ பைடன் நிர்வாகம் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனினும் ஹமாஸின் இந்த அறிக்கைக்கு பின்னர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், அப்பாவி மக்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இருக்கும் அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் ஒரு ஆயுத மோதலை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் உயிருக்கு ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாலஸ்தீனிய அதிகார சபையின் சுகாதார அமைச்சர் மை அல்-கைலா கூறியுள்ளார்.