ஆணின் வெற்றிக்கு மார்க்கமுடைய பெண்ணே காரணமாக இருப்பாள்

ஆணின் வெற்றிக்கு மார்க்கமுடைய பெண்ணே காரணமாக இருப்பாள்
ஆணின் வெற்றிக்கு மார்க்கமுடைய பெண்ணே காரணமாக இருப்பாள்  – நபி நாயகம் (ஸல்) அவர்கள்

இஸ்லாம் மார்க்கம் எமது வாழ்க்கையை அழகிய முறையில் அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு காட்டித்தந்துள்ளது.

எமது ஒவ்வொரு செயல்களையும் அழகான முறையில் செய்து கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு கற்றுத் தந்துள்ளது.

இன்று நம் இஸ்லாமிய பெண்களின் நிலை மார்க்கத்திற்கு உட்பட்ட வகையில் உள்ளதா என்று நோக்கும் போது அவ்வாறு அமையவில்லை என்றே கூறலாம்.

பெண் ஒரு குடும்பத்தின் அடையாளமாக கருதப்படுகிறாள். அவளுடைய செயல், நடவடிக்கைகள் அந்த அடையாளத்தை நல்லதாக அல்லது கெட்டதாக அமைக்கிறது.

“ஒரு மனிதன் சேமிக்கின்ற சொத்து செல்வங்களில் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?”  என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு   “அது நல்ல பெண்மணியாகும்”  என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் – நுல் : அபுதாவுத் 1417)

ஆணின் வெற்றிக்கு மார்க்கமுடைய பெண்ணே காரணமாக இருப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பெண் சிறந்த பெண்ணாக திகழ வேண்டும் எனில் அவள் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

ஹிஜாப் அணிதல்:  பெண்களுக்கு முகத்தையும், மணிக்கட்டு வரையான இரு கைகளையும் பாதத்தையும் வெளிப்படுத்துவதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு.

இதை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் அந்நிய ஆண்களிடமிருந்து மறைக்க வேண்டும். அவ்வாறு மறைக்கக் கூடிய ஆடையை ஹிஜாப் என்று அழைப்பார்கள்.

நம்பிக்கை (ஈமான்) கொண்ட பெண்களுக்கு தங்களது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தங்களது கற்புகளை பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக!

அவர்கள் தங்களது அலங்காரத்தில் வெளியே தெரியக் கூடியவற்றைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

தங்களது கணவர், தங்களது தந்தை, தங்களது கணவரின் தந்தை, தமது புதல்வர்கள், தமது கணவரின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை பற்றி அறியாத குழந்தைகள், தவிர ஏனையவர்களிடம் தமது அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம்.

அவர்கள் மறைத்திருக்கும் தமது அலங்காரம் அறியப்பட வேண்டும் என்பதற்காக தமது கால்ளை அடித்து நடக்க வேண்டாம்.

நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றிடையவீர்கள்.
(அல் குர்ஆன் 24: 31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவிமாருக்கும், உமது புதல்வியருக்கும்; (ஏனைய) ஈமான் கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளை தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கள்ள பெண்கள் என்று) அறிந்து கொள்வதற்கும் தொல்லைப்படுத்தப் படாமல் இருப்பதற்கும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிக்க கூடியவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்
(அல்குர்ஆன் 33:59)

இன்று இந்த ஹிஜாப் விடயத்திலும் பெண்களின் நிலைமை மோசமாகவே உள்ளது. தமது அழகை பார்க்க கூடாது என்பதற்காகவே ஹிஜாப் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் இன்று இந்த ஹிஜாபிலும் மிகவும் இருக்கமான மற்றும் பல டிஷைன்களில் அலங்காரங்களுடன் கூடிய ஹிஜாப்களை அணிந்து ஆண்களின் பார்வைகளை பெண்கள் தன் பக்கம் இழுக்கின்றனர்.

அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளில் இரண்டு கூட்டத்தினரை நான் (இன்னும்) பார்க்கவில்லை.

(அவர்களுள் ஒரு கூட்டத்தினர்) மாட்டினது வாலைப் போன்ற சாட்டைகளை கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பவர்கள். (மற்றொரு கூட்டத்தினர்) ஆடையணிந்தும் நிர்வாணமாக (காண்போரை) தம் பக்கம் கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தினது சாய்ந்த திமிலைப் போல் தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இத்தகையவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையை கூட நுகர மாட்டார்கள்.
(அறிவிப்பாளர் : அபூ-ஹுரைரா (ரழி) – நுல் : முஸ்லிம்-3971)

முகத்தை மறைப்பதில் தவறில்லை :

பெண்கள் தமது முகத்தை மறைத்துக் கொள்வதில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹஜ்ஜிக்காக இஹ்ராம் அணிந்துள்ள பெண் முகத்திரையை அணியக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) – நுல் : புகாரி 1838)

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள காலத்தில் இதற்கு தடை செய்யப்படவில்லை.

இஹ்ராமின் போது அணியக் கூடாது எனும் போது அவர்கள் காலத்தில் முகத்திரை அணிந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. எனினும் முகத்தை மறைப்பது கட்டாயமில்லை.

முகத் திரை அணிவது மார்க்கத்தின் நிலைப்படி தடையில்லை என்றாலும் இன்று அதன் மூலம் பல தவறான செயல்களும் நடக்கின்றது. சில பெண்கள் தவறான வழிகளுக்கும் இந்த முகத்திரையை பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஒரு பெண் முழுமையாக தமது முகத்தை மறைத்து கொண்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற நிலை வரும் போது அவள் ஒழுக்கம் தவறுவதறி செல்வதற்கான துணிவை பெற்று விடுகின்றாள்.

கணவரிடம் அனுமதி :

பெண்கள் தமது வீட்டை விட்டு வெளியே செல்லும் போது தங்களது கணவர்களிடம் அனுமதி பெற வேண்டும். பெண்கள் தமது கணவனின் அனுமதியைப் பெற்று வெளியில் செல்வது மார்க்கத்திற்கு உட்பட்ட விடயம் என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது மனைவியர் மஸ்ஜிதுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) – நூல் : புகாரி 5238)

கடை வீதி்க்கு செல்லலாமா?

நீங்கள் உங்களது வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும்; உங்களை முழுமையாக பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகின்றான்.
(அல்-குர்ஆன் 33:33)

அறியாமைக் காலத்தில் வெளியில் சுற்றி அலைந்ததைப் போல் சுற்றித் திரியக் கூடாது என்று நான் உன்னிடத்தில் உறுதிப் பிரமாணம் வாங்கிக் கொள்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ருகைகா (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரழி) – நூல் : அஹ்மத் 6554)

‘பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டியவள். அவள் வெளியே சென்றால் (வழிகெடுப்பதற்காக) ஷைத்தான் அவளை நோக்கி வந்து விடுகின்றான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரழி) – நூல் : திர்மிதி 1093)

பெண்கள் எந்த தேவைகளுமின்றி அநாவசியமாக வெளியே செல்லக் கூடாது. ஆனால் இன்று பெண்கள் ஆண்களைப் போல் சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றித் திரிகின்றார்கள்.

கடை வீதிககளில், கண்காட்சிக் கூடங்களில், பூங்காக்ளில்,  சினிமா தியேட்டர்களில் என்று அனைத்து இடங்களிலும் மாற்று மத பெண்களை விட நமது இஸ்லாமிய பெண்களையே அதிகமாக காணக் கூடியதாக உள்ளது.

இதற்கு ஆண்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள். வீட்டில் தமது பெண்களை கண்டிப்பது கிடையாது. வீட்டிற்கு அவசியமான பொருட்களை வாங்கி கொடுப்பதிலும் அலட்சியம்.

இதனால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க பெண்களே கடைத் தெரு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதை ஆண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனியாக பயணம் செய்ய முடியுமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஈமான் கொள்ளக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஒர் இரவு தொலைவுடைய பயணத்தை மஹ்ரமான (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் செல்ல வேண்டாம். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) – நூல் : புகாரி 1088)

பெண்கள் ஒரு நாளைக் கடந்து விடாத தொலைவிற்குள் பயணம் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டு. ஆனால் ஒரு நாளை விட அதிகமாகும் என்றால் தனியாக பயணம் செய்யக் கூடாது.

இது போன்ற சந்தர்ப்பத்தில் திருமணம் முடிக்கத்தகாத நெருங்கிய உறவினருடன் சேர்ந்து தான் பயணம் செய்ய வேண்டும். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன புனித யுத்தத்தில் கலந்து கொள்வதற்கான (வீரர்கள் பட்டியலில்) எனது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எனது மனைவி ஹஜ் செய்ய விருக்கிறாள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ”நீங்கள் திரும்பிச் சென்று உங்களது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்”    என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) – நூல் : புகாரி 3061)

Assalamu Alaikkum!
Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply