இத்தாலியில் டீப்சீக் ஏஐ பயன்பாட்டுக்கு தடை – பின்னணி என்ன? | Italy blocks DeepSeek AI access to protect user data

மிலன்: சீன தேசத்தின் ஏஐ சாட்பாட் ‘டீப்சீக்’ பயன்பாட்டை இத்தாலி முடக்கி உள்ளது. பயனர்களின் தரவை பாதுகாக்கும் நோக்கில் இந்த நகர்வை கையில் எடுத்துள்ளது இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம். அதுமட்டுமல்லாது டீப்சீக் சாட்பாட் பின்னணியில் உள்ள நிறுவனங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டீப்சீக் பயன்படுத்தும் பயனர்களிடம் இருந்து என்ன மாதிரியான தரவுகள் சேகரிக்கப்படுகிறது, அது எங்கு சேமிக்கப்படுகிறது மற்றும் அது குறித்த அறிவிப்பு பயனர்களுக்கு எப்படி தெரிவிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் டீப்சீக் சாட்பாட் வடிவமைப்பாளர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக கிடைத்த பதில், தரவு பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுவே இந்த முடக்கத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

டீப்சீக் தரப்பில் தங்களது நிறுவனம் இத்தாலியில் இயங்கவில்லை என்றும், ஐரோப்பிய யூனியனின் சட்ட விதிகள் தங்களுக்கு பொருந்தாது என்றும் இத்தாலி ஆணையத்துக்கு பதில் கூறப்பட்டுள்ளதாக தகவல். டீப்சீக் ஏஐ பாட் அறிமுகமான சில நாட்களில் மில்லியன் கணக்கான பயனர்கள் அதை டவுனோல்ட் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டீப்சீக் சாட்பாட்? – கதை, கட்டுரை, கவிதை, கணக்கு உள்ளிட்டவற்றை விரைந்து நொடி பொழுதில் தரும் திறன் கொண்டுள்ளது சீனாவின் டீப்சீக் ஏஐ. இப்போதைக்கு இதில் டெக்ஸ்ட் வடிவில் மட்டுமே பயனர்கள் உரையாட முடிகிறது. டீப்சீக்-வி3 வெர்ஷனை வெறும் 5.58 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் அதிக செயல்திறன் கொண்ட பாட் என இது அறியப்படுகிறது.

ஏஐ உலகில் முன்னோடியாக உள்ள சாட்ஜிபிடி-யை அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது டீப்சீக். பல கோடி முதலீட்டில் கூகுள், மெட்டா, எக்ஸ் மாதிரியான டெக் நிறுவனங்களும், சாட்ஜிபிடி-யின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஏஐ முயற்சியினை வெறும் சில ஆண்டுகளில் தகர்த்துள்ளது டீப்சீக்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!