இயற்கை 360° – Dinakaran

நன்றி குங்குமம் தோழி

பூசணிக்காய்

நமக்கு இது திருஷ்டிக்காய். ஆனால் வெளிநாட்டவருக்கு ஹாலோவீன் காய்..! திருஷ்டிக்காகக் கூட குறைவாகத்தான் அவற்றை நாம் உடைப்போம். ஆனால் ஹாலோவீன் சமயத்தில், திரிசங்கு நிலையில் சுற்றும் பேய்களை மகிழ்விக்க, இந்தக் காய்களில் அச்சுறுத்தும் முகங்களை வரைந்து, ‘ஜாக்-ஓ-லான்ட்டர்ன்’ என விளக்குகளை அதற்குள் ஏற்றி, பின்னர் லட்சக்கணக்கான காய்களை அப்படியே தூக்கியெறிவார்கள் அமெரிக்கர்கள்.

இப்படி வெட்டியாக மண்ணில் வீசிஎறியப்படும் இந்தக் காயை, ‘மண்ணுக்குள் வைரம்’ என்றும் ‘தங்கச் சுரங்கம்’ என்றெல்லாம் போற்றுகிறார்கள் நம் அறிவியலாளர்கள். அதுகூடப் பரவாயில்லை. இதன் முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில், ‘தேசியக் காய்’ (National Vegetable) என்று கொண்டாடுகிறது ஒரு தேசம்.! அது எந்த நாடு? உண்மையிலேயே இது மண்ணுக்குள் வைரமா, தங்கமா? இதன் வரலாற்றுப் பின்னணி என்ன? இதன் ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் என்ன? ‘ஒரு திருஷ்டிக் காய், தேசியக் காய்’ ஆன கதையுடன் இதைத் தெரிந்துகொள்வோம்.

பரங்கிக்காய், அரசாணிக்காய், மஞ்சள் பூசணிக்காய், சர்க்கரைப் பூசணி என்று பற்பல பெயர்களில் வழங்கப்படும் இந்த திருஷ்டிக்காயின் தாவரப் பெயர், Cucurbita pepo. தோன்றிய இடம்,
வட அமெரிக்கா மற்றும் மெக்சிகோ. தாவரப் பெயரில் உள்ள ‘பெப்போ’ எனும் சொல், கிரேக்கத்தின் ‘பெப்போனி’லிருந்து (Pepon) பெறப்பட்டதாம். பெரிய பூசணி என்று பொருள்படும் இந்த பெப்போன் மருவி, ‘பாம்பான்’ (pompon) என ஃப்ரெஞ்சிலும்,‘பம்பியான்’ (pumpion) என ஆங்கிலத்திலும் வழங்கப்பட, அதுவே பிற்காலத்தில் பம்ப்கின் (pumpkin) என்றானது என்கிறது வரலாறு.

பொதுவாக, குளிர்காலத்தில் விளையும் கொடிவகைத் தாவரம் என்பதால், இதை Winter squash என்றும், அதன் அடர்த்தி ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறம் காரணமாக, Orange/Red gourd என்றும் அழைக்கிறார்கள் அமெரிக்கர்கள். நம்மிடையே வழங்கப்படும் பூசணி என்ற பெயருக்கான காரணத்தை விளக்கும் மொழி ஆர்வலர்கள், பூசணியின் கொடியிலும் இலையிலும் மென்மையான சுனைகள் இருக்கும் என்பதால் ‘பூசுனைக்கொடி’ என முதலில் வழங்கப்பட்டதே பின்னர் பூசணிக்கொடி என மருவியது என்கிறார்கள். பூழியபழம், சக்கர கும்பலா என மலையாளத்திலும், கும்பலிக்காய் என கன்னடத்திலும், கும்மடிக்காய என தெலுங்கிலும் கட்டு (gaddu) என வடமொழியில் அழைக்கின்றனர். இந்தப் பதிவில் நாம் அரசாணி எனும் பரங்கிக்காய் குறித்து மட்டும் முழுமையாகத் தெரிந்துகொள்வோம்!

மூன்று முதல் ஐந்து கிலோ எடைவரை உள்ள இந்த பரங்கிக்காய்களின் பட்டை, சதைப்பற்று மற்றும் விதைகள் என அனைத்தும் ஊட்டச்சத்து நிறைந்தவை என்கிறார்கள் ஊட்டவியல் நிபுணர்கள். ஒவ்வொரு 100 கிராமிலும் 26 கலோரிகள் கிடைக்கப் பெறுவதுடன், அதன் குறைந்த மாவுச்சத்து (6.5 கி) மற்றும் புரதச்சத்து (1 கி), அதிக நீர்த்தன்மை (91%), அதிகளவிலான கனிமச் சத்துகள் குறிப்பாக பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம், காப்பர், செலீனியம் உள்ளிட்டவையும், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் பல அத்தியாவசிய சத்துகளும், நார்ச்சத்தும் பரங்கியை ஒரு முழுமையான உணவாக்குகிறது.

பரங்கியின் பீட்டா கரோட்டீன், ஜியா-சாந்தின் மற்றும் லூட்டின்கள் நமது அன்றாட வைட்டமின் ஏ தேவையை 200 மடங்குக்கும் அதிகமாக பூர்த்தி செய்கிறது என்பதுடன், அதன் ஆல்ஃபா மற்றும் காமா டோகோ-ஃபெரால்கள் வைட்டமின் ஈ தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது. அதேசமயம் காலிக் அமிலம், வெனிலிக் அமிலம், குளோரோஜெனிக் அமிலம் உள்ளிட்ட ஃபீனாலிக் அமிலங்களும், ரூட்டின், பெக்டின், குவர்செடின், டெர்பனாயிட்கள் உள்ளிட்ட தாவரச்சத்துகளும் பரங்கியின் பல மருத்துவ குணங்களுக்குக் காரணமாக உள்ளன. பரங்கியின் பட்டை மற்றும் விதைகளில் இச்சத்துகள் கூடுதலாகவே இருக்கிறது. குறிப்பாக இதன் விதைகளில் பொட்டாசியம், மாங்கனீஸ், மெக்னீசியம் சத்துகளும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக மாற்றுகின்றன.

பரங்கிக்காய சர்க்கரை நோய்க்கு அருமருந்து என்கிறது அறிவியல். நாம் அன்றாடம் உண்ணும் மாவுச்சத்தை செரிமானம் செய்யும் ‘ஆல்ஃபா குளுக்கோசைடேஸ்’ எனும் குடலில் உள்ள நொதியை, பரங்கி கட்டுப்படுத்தி, கார்ப் செரிமானத்தைக் குறைப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோய் சார்ந்த சிறுநீரக, கண் மற்றும் நரம்பு பாதிப்புகளையும் பரங்கி கட்டுக்குள் வைக்கிறது. இதன் பெக்டின்கள், உடல் பருமனைக் கட்டுக்குள் வைப்பதுடன் ரத்தத்தின் எல்டிஎல், ட்ரை-கிளசரைடுகள் உள்ளிட்ட கெட்ட கொழுப்புகளையும் குறைப்பதால், தமனி அடைப்பு நோய்களான மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கிறது. இதனை ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ள விஞ்ஞானிகள் பரங்கி அதிகம் சேர்க்கப்படும் மெடிட்டெரேனியன் வகை உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு தமனி அடைப்பு நோய்கள் குறைவாகவே காணப்படுகிறது என்கின்றனர்.

பசியைத் தூண்டி, செரிமானத்தைக் கூட்டுவதால் நாள்பட்ட குடல் அழற்சி நோய்களிலிருந்து காக்கும் பரங்கி, மலச்சிக்கலையும் போக்கி, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்பட்டு, சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரக நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது. இதன் ஆன்டி-ஆக்சிடெண்டுகள் ஆக்சிஜனேற்றம் மற்றும் செல் அழற்சியைக் கட்டுப்படுத்துவதால், ப்ராஸ்டேட், பெருங்குடல் மற்றும் கல்லீரல் நோய்களையும் அவற்றில் ஏற்படும் புற்றுகளையும் தவிர்க்க உதவுகிறது.

ரத்த சோகைக்குக் காரணமான இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் குறைபாட்டையும் நிவர்த்தி செய்வதன் மூலமாக, இளம்பெண்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பரங்கிக்காய் பெரிதும் உதவுகிறது. மேலும் தூக்கமின்மையைப் போக்கி, மன அழுத்தத்தையும் குறைப்பதுடன், நரம்பியல் நோய் மற்றும் முடக்குவாத நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. நல்ல கலோரிகளை வழங்கி, நோயெதிர்ப்பைக் கூட்டி, எலும்புகள், தசைகள் மற்றும் தசைநார்களுக்கு இதன் விதைகள் வலிமை சேர்ப்பதால் வளரும் குழந்தைகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பூசணி விதைகள் பெரிதும் பயனளிக்கிறது. அதேசமயம் குழந்தைப்பேறின்மையிலும் மாதவிடாய் நிறுத்தத்தின் போதும், இவ்விதைகள் நன்மைகளை கூட்டுகின்றன.

பொதுவாக ஆண் பூ, பெண் பூ என்று தனித்தனியாக இருக்கும் பரங்கிப்பூக்கள், தேனீக்களின் மகரந்த சேர்க்கை மூலம் கனியாகின்றன. ஆண் பூக்களைத்தான், மார்கழி மாதக் கோலங்கள் மீது வைத்து பெண்கள் அலங்கரிக்கிறார்கள். இதன் மஞ்சள் நிறத்திற்குக் காரணமான கரோட்டின் கண் மற்றும் சருமம் சார்ந்த பாதிப்புகளைத் தவிர்ப்பதுடன், தலைமுடி பிரச்னைக்கும் தீர்வாகிறது. பரங்கியின் சாற்றை தீப்புண், கட்டி, சிரங்கு, விஷக்கடிக்கு தடவும் வழக்கம் கிராமப் பகுதிகளில் இன்றும் காணப்படுகிறது.

ஆனால் இதன் காய் மற்றும் விதை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிறுநீரக, இதய மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. குழம்பு, கூட்டு, பொரியல், அல்வா, சூப் என பயன்படும் பரங்கிக்காய், சாலட், ஸ்ட்யூ, கட்லெட், ஸ்மூத்தி, மிஸ்டி, கீர், கஸ்டர்ட், பராந்தா எனவும் வடக்கில் மாறுகிறது. பச்சையாக, வேகவைத்து, வறுத்து என பயன்படுத்தும் மேற்கத்தியர்கள், பம்ப்கின் பிரெட், பம்ப்கின் பை, மாஷ்ட் பம்ப்கின், ஸ்பெகெட்டி, பம்ப்கின் ப்யூரீ, பம்ப்கின் ஜாம் என பல வகையான உணவுகளுடன் தங்களது தேங்க்ஸ் கிவிங் (Thanksgiving) நாளையும் ஹாலோவீனையும் கொண்டாடுகின்றனர். அதேசமயம் ஹோபக் ஜுக், காபமா, பண்டேவரா, டட்லிசி, பிக்கரோன்ஸ் என கொரியா, செர்பியா, துருக்கி, தாய்லாந்து, பாலினேசியா க்யூசின்களில் பரங்கி இடம்பெறுகிறது.

‘பம்ப்கின் ஆலே’ பரங்கியில் தயாராகும் மதுபானம், 17ஆம் நூற்றாண்டு முதலே அமெரிக்கர்களிடம் வெகுபிரசித்தம். அதேசமயம் விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் உணவுகளுக்கு சுவையூட்டியாகவும், அதிலிருந்து கிடைக்கும் புண்ணாக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.

உலகிலேயே அதிக எடையுள்ள பரங்கிக்காய் 1200 கிலோ எடையில் அமெரிக்காவில் விளைவிக்கப்பட்டதாம். சமயங்களில் இது 8 முதல் 10 கிலோ எடைவரை கூட இருக்கும். அதேபோல் காய்ப்புக்கு வந்து பல மாதங்களுக்கு கெடாமலும் இருக்கும் என்பதால், தனியே பாதுகாக்கத் தேவையில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு. வருடம் முழுவதும் காய்க்கும் பரங்கியை சாகுபடி செய்வதும் சுலபம் என்கிறார்கள் வேளாண் வல்லுநர்கள். விதைகளிலிருந்து வளரும் இதன் கொடி விதைத்த ஒரு வாரத்தில் முளைத்து, மூன்று மாதங்களில் காய்ப்புக்கு வந்துவிடும். சற்றே வறண்ட மண் பரப்பில் குறைந்த நீரில், குளிரில் என எதிலும் எளிதாக வளரும் தன்மை கொண்டது பரங்கி.

சீனா, இந்தியா, உக்ரைன் மற்றும் அமெரிக்க நாடுகள் பரங்கியை அதிகம் உற்பத்தி செய்கின்றன. அதிலும் ஹாலோவீன் நாளில், அமெரிக்கா இதைப் பெரிதும் பயன்படுத்துகிறது.
அச்சமயத்தில் கழிவாக பூமிக்குள் போகும் காய்களின் அளவு மட்டும், ஒரு வருடத்தில் ஒரு பில்லியன் பவுண்ட் அளவைத் தாண்டுமாம். பங்களாதேஷில், Pumpkin against Poverty அதாவது, ஏழ்மையை போக்கிடும் பரங்கி என இயக்கமாகப் பயிரிட்டு ஏற்றுமதியும் செய்கின்றனர். இதனை ஜிம்பாப்வே மற்றும் உகாண்டா நாடுகளும் பின்பற்றுகின்றன.

கார்பன் தடம் எனப்படும் சுற்றுச்சூழல் மாசையும் இது குறைப்பதால், இந்த மந்திரக் காயை ‘எதிர்காலத்தின் இன்றியமையாத உணவு’, ‘புரட்சிகர வேளாண்பயிர்’, ‘மண்ணுக்குள் வைரம்’, ‘தங்கச் சுரங்கம்’ என்றெல்லாம் அறிவியலாளர்கள் போற்றுகின்றனர்! எல்லாம் சரி..! இது எந்த நாட்டின் தேசியக்காய் என்று கேட்டிருந்தோமல்லவா..? பரங்கி நமது இந்திய நாட்டின் தேசியக் காய்தான்..! பரங்கியின் அனைத்து மகிமைகளையும் கொண்டாடும் வகையில் இதனை தேசியக்காய் என்று இந்தியா மகுடம் சூட்டியதுதான்,‘ஒரு திருஷ்டிக் காய், தேசியக் காய்’ ஆன கதை.நீர் வளம், மண் வளம், ஆரோக்கிய வளம் என வளமனைத்தையும் அள்ளித்தரும் பரங்கிக்காயை திருஷ்டிக்காகவோ வெறும் நம்பிக்கைக்காகவோ உடைத்தல் தகுமோ என்ற கேள்வியுடன் நமது இயற்கை பயணம் நீள்கிறது..!

டாக்டர்: சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்

நன்றி

Leave a Reply

error: Content is protected !!