காஸா நெருக்கடியை மையமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னதாக துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதன் போது, இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக புறக்கணிப்பது, நெருக்கடிக்கான மனிதாபிமான தீர்வுகள் மற்றும் நீடித்த அமைதியை நோக்கிய முயற்சிகள் குறித்து சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் சர்வதேச போர் சட்டங்கள் மற்றும் மனிதாபிமான கொள்கைகளை தொடர்ந்து மீறுகிறது என்பதை ஜனாதிபதி எர்டோகன் வலியுறுத்தியுள்ளார். மேலும் சர்வதேச சட்டத்திற்கு முன் இஸ்ரேல் அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உரையாடலில், காசா தாக்குதலில் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகள் சபை வீரர்களுக்கு அதிபர் எர்டோகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஃபா எல்லைக் கடவைக்கு குட்டெரெஸின் தனிப்பட்ட விஜயமானது காஸாவின் நிலைமைகள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்று கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் இந்த விஜயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.