எட்டில் ஒரு குழந்தைக்கு ஏன் ஆஸ்த்மா வருகிறது?

Medical, தடுப்பூசி, ஆஸ்த்மாகார் போக்குவரத்தினால் ஏற்படும் காற்று மாசை விட மோசமான மாசு, எரிவாயு அடுப்பில் இருந்து வெளிவரும் நச்சுப் பொருட்களால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் இதனால் எட்டில் ஒரு குழந்தைக்கு ஆஸ்த்மா நோய் ஏற்படுகிறது என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு எச்சரிக்கிறது.

இந்நிலையில் பன்னாட்டு எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு பயன்பாடே உணவு சமைக்க மிகச் சிறந்த வழி என்று பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் எரிவாயு அடுப்புகளையே பயன்படுத்துகின்றனர்.

எரிவாயு அடுப்புகளில் இருந்து புற்றுநோய் போன்ற தீவிர வாழ்நாள் நோய்களை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் அடுப்பு எரியாமல் அணைக்கப் பட்டிருக்கும்போதும் வெளிவருகின்றன.

இதனால் அமெரிக்க நிர்வாகம் எரிவாயு அடுப்புகளை சமைக்கப் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்வது பற்றி யோசித்து வருகிறது.

இது வீட்டுக்கு வெளிப்புறத்தில் இருக்கும் கனரக தொழிற்சாலை மற்றும் வாகனப் போக்குவரத்து மூலம் ஏற்படும் காற்று மாசை விட மோசமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

gas stove அடுப்பில் இருந்து வெளிவரும் நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற மாசுகளால் 12.7% குழந்தைகள் ஆஸ்த்மா நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த மாசினால் அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் குழந்தைகள் ஆஸ்த்மா நோயால் அவதிப்படுகின்றனர்.

18 வயதிற்குள் இருக்கும் 650,000 குழந்தைகள் விரைவில் இந்நோயால் பாதிக்கப்படுவர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவர்கள் பிறகு வாழ்நாள் முழுவதும் மருந்து அடங்கிய உறிஞ்சிகளைப் பயன்படுத்த வேண்டிய பரிதாபம் ஏற்படும் என்று ஆய்வுக் குழு எச்சரிக்கிறது.

இரண்டாம் நிலை புகை பிடித்தல்

இரண்டாம் நிலை புகை பிடித்தலால் (secondhand smoking) ஏற்படும் ஆஸ்த்மா நோய்க்கு இது சமமானது.

வீடுகளில் எரிவாயு அடுப்புகளின் பயன்பாட்டை தடுத்து நிறுத்தினால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான குழந்தைகள் இந்த நோய் வந்து பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும் என்று யு எஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தொற்றுநோய் நிபுணர்களுடன் இணைந்து இந்த ஆய்வுகளை நடத்திய ஆர் எம் ஐ என்ற அமைப்பின் கார்பன் இல்லா கட்டிடங்கள் ஆய்வுப்பிரிவின் மேலாளர் பிரெடி சீல்ஸ் (Brady Seals) கூறுகிறார்.

வீட்டுக்குள் உருவாகும் காற்றுமாசு

எரிவாயு அடுப்புகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று யு எஸ் நுகர்வோர் பாதுகாப்பு கமிஷனின் ஆணையர் ரிச்சர்ட் டிரம்க்கா (Richard Trumka) கூறுகிறார். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களில் எரிவாயு அடுப்பு முக்கிய இடம் பெற்றுவிட்டது.

ஆனால் உலகில் இதுவரை எந்த நாட்டிலும் வீட்டுக்குள் உருவாகும் காற்று மாசைக் குறைக்க உதவும் விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை. குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் எரிவாயு அடுப்பையே சார்ந்துள்ளதால் இவற்றை முற்றிலும் தடை செய்வது கடினம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மின் தூண்டல் அடுப்பு

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு அடுப்பிற்கு பதில் புதிய மின் தூண்டல் அடுப்பைப் பயன்படுத்த 840 டாலர் மான்ய உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் காலநிலை மாற்றத்திற்குக் காரணமாக இருக்கும் புதைபடிவ எரிபொருட்களில் இருந்து கிடைக்கும் எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க முடியும். ஏற்கனவே நியூயார்க், ஒஹாயோ, ஆக்லஹாமா, லூசியானா நகரங்கள் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் எரிவாயு வழங்குவதைத் தடை செய்து விட்டது.

பல உலக நாடுகளில் இது பற்றிய ஆய்வுகள் நடந்தபோது அணைக்கப்பட்ட அடுப்பில் இருந்தும் நச்சு மாசுகள் வெளிவருவது கண்டுபிடிக்கப்பட்டது.

நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் இதனால் உமிழப்படும் மற்ற மாசுகள் அமெரிக்க சூழல் முகமை (EPA) வரையறை செய்துள்ள அளவையும் விட பல மடங்கு அதிகம் என்று கடந்த ஆண்டு ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. இந்த பாதிப்பு சிறிய சமையலறைகளில் அதிகமாக உள்ளது. இது பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னும் உலக மக்களிடையில் ஏற்படவில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மின் சமையல் உபகரணங்களுக்கு மாறுவோம்

ஜன்னல்களைத் திறந்து வைத்து சமைப்பது, தண்ணீரை சூடுபடுத்த மின் கெட்டில்களைப் பயன்படுத்துவது போல சமையல் உபகரணங்களை மின்மயமாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த மாசைக் குறைக்க முடியும். உலகின் தென் கோளப்பகுதியில் மக்கள் பரவலாக இன்னமும் விறகுகளையே எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். ஆரோகியத்திற்கு அது கேடானது. பல ஆண்டுகளாக எரிவாயுவே மிகச்சிறந்த சமையல் எரிபொருள் என்று நம்பப்பட்டு வந்த நிலை இந்த ஆய்வு முடிவின் மூலம் மாறியுள்ளது.

அடுப்பெரிக்கும் கரியில் இருந்து மனிதன் எரிவாயுவிற்கு மாறினான். இந்நிலை நீடிக்கக்கூடாது. சூழல் சீரழிவால் கொரோனா போன்ற புதிய நோய்களால் அச்சுறுத்தப்படும் மனிதகுலம் எரிவாயு பயன்பாட்டினால் மேலும் நோயாளிகளின் உலகமாக மாறி விடக்கூடாது என்றால் விரைவில் மின்சாரம் சமைக்கப் பயன்படும் எரிபொருள் மூலமாக மாற வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/jan/06/us-kids-asthma-gas-stove-pollution

– சிதம்பரம் இரவிச்சந்திரன்

நன்றி


Discover more from SARINIGAR

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

error: Content is protected !!