ஒரு பெண்ணுக்குத் துணையாக சுவர்க்கத்தில் என்ன கிடைக்கும்.?

ஒரு பெண்ணுக்குத் துணையாக சுவர்க்கத்தில் என்ன கிடைக்கும்.?
[ நபி (ﷺ) அவர்களிடம் ”சுவர்க்கத்தில் ஆண்களுக்கு துணையாக அழகிய கண்களையுடைய பெண்கள் கிடைப்பார்கள் எனில் – சுவர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப் பெறுவார்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது – ”சுவர்க்கத்தில் பெண்கள் எந்த மனித கண்களும் கண்டிராத – மனித காதுகள் எதுவும் கேட்டிராத – மனித உள்ளங்கள் எதுவும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றினைப் பெறுவார்கள்” என்று நபி (ﷺ) அவர்கள் பதிலளித்தார்கள்.]

கேள்வி – திருமறை கூற்றுப்படி ஒரு ஆண் சுவர்க்கத்தில் ‘ஹுர்’ என்னும் பெண்ணைத் துணையாகப் பெறுவான். அப்படி என்றால் சுவர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?.

    பதில்: 01. ‘ஹுர்’ பற்றி அல் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

திருமறை குர்ஆனில் ‘ஹுர்’ பற்றி நான்கு இடங்களில் கூறப்பட்டுள்ளது.

• அத்தியாயம் 44 சூறத்துத் துகானின் 54வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது.

‘..மேலும் அவர்களுக்கு ஹுருல்ஈன்களை நாம் மணம் முடித்து வைப்போம்.’.

• அத்தியாயம் 52 சூறத்துத் தூரின் 20வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது.

‘..மேலும் நாம் அவர்களுக்கு நீண்ட கண்களையுடைய (ஹுருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.’.

• அத்தியாயம் 55 சூறத்துர் ரஹ்மானின் 72வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது.

‘..ஹுர் (என்னும் அழகானவர்கள்) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.’.

• அத்தியாயம் 56 சூறத்துல் வாகிஆவின் 22வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது.

‘(அங்கு இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களையுடையவர்கள்) இருப்பர்’.

    02. ‘ஹுர்’ என்ற அரபி வார்த்தைக்கு ‘அழகிய கன்னியர்’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அல் குர்ஆனை மொழிபெயர்பு செய்த பல மொழி பெயர்பாளர்கள் – குறிப்பாக உருது மொழியில் மொழி பெயர்பு செய்த மொழிபெயர்ப்பாளர்கள் ‘ஹுர்’ என்ற அரபு வார்த்தைக்கு ‘அழகிய கன்னியர்’ என்று மொழியாக்கம் செய்துள்ளனர்.

‘ஹுர்’ என்ற அரபு வார்த்தைக்கு ‘அழகிய கன்னியர்’ என்று பொருள் கொடுக்கப்பட்டாள் – அது ஆண்களுக்கு மட்டும் தான் என்று ஆகிவிடும். அப்படியாயின் சுவர்க்கத்தில் பெண்களுக்கு என்ன கிடைக்கும்?.

    03. ‘ஹுர்’ என்ற அரபி வார்த்தையின் பொருள்.

ஹுர்’ என்ற அரபி வார்த்தை ‘அஹ்வார்’ மற்றும் (ஆண் பாலாருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) ‘ஹவ்ரா’ என்கிற அரபி வார்த்தைகளுக்கு (பெண் பாலாருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) உரிய பன்மை (Plural) வார்த்தையாகும்.

குறிப்பாக சுவர்க்கத்தில் இருக்கக் கூடிய அழகிய கண்களையுடைய ஆண் அல்லது பெண் பாலினரையோ குறிப்பிடுவதற்கு மேற்படி வார்த்தையை பயன்படுத்துவார்கள்.

அல் குர்ஆன் வேறு சில வசனங்களில் சுவர்க்கத்தில் நீங்கள் ‘முத்தஹ்ரதுன்’ தூய்மை மற்றும் புனிதமிக்க ‘அஸ்வாஜ்’ – இணை, ஜோடி அல்லது  துணையினைப் பெருவீர்கள் என்று குறிப்பிடுகின்றது.

‘முத்தஹ்ரதுன்’ என்ற அரபி வார்த்தைக்கு புனிதம் மற்றும் தூய்மை  என்று பொருள் கொள்ளலாம்.

அல் குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 25வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

‘(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்காரியங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக: என்றும் ஓடிக் கொண்டிருக்கும் நதிகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு: அவர்களுக்கு உண்பதற்கு அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் போதெல்லாம் ‘இது இதற்கு முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கின்றது’ என்று கூறுவார்கள்: ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதை தான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன: இன்னும் அவர்களுக்காக அங்கு தூய துணைகளும் உண்டு: மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்-குர்ஆன் 2:25)

அதே போன்று அல் குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 57வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு நற் காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனத்தில் புகுத்துவோம். அவற்றின் கீழே நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்: அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பர்: அங்கு அவர்களுக்காக பரிசுத்தமான துணைகளும் உண்டு: அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம். (4:57)

மேற்படி அல் குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் கற்றறிவது என்னவெனில் ‘ஹுர்’ என்ற அரபி மொழி வார்த்தை குறிப்பாக எந்த பாலினரையும் (ஆண்பால் அல்லது பெண்பால்) குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப் படவில்லை என்பது தான்.

அல் குர்ஆனை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்த முஹம்மத் அஸாத் ‘ஹுர்’ என்ற அரபி வார்த்தைக்கு Spouse (கணவருக்கு மனைவியும் – மனைவிக்கு கணவரும்) என்று மொழியாக்கம் செய்துள்ளார்.

அல் குர்ஆனை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்த யூசுப் அலி ‘ஹுர்’ என்ற அரபி வார்த்தைக்கு Companions (இணை அல்லது துணை ) என்று மொழியாக்கம் செய்துள்ளார். இன்னும் பல மார்க்க அறிஞர்களினது கருத்துப்படி – சுவர்க்கத்தில் ஒரு ஆணுக்கு அழகிய கண்களையுடைய பெண்ணும், ஒரு பெண்ணுக்கு அழகிய கண்களையுடைய ஒரு ஆணும் துணையாக அல்லது ஜோடியாக கிடைப்பார்கள்.

    04. பெண்கள் இந்த உலகில் கிடைக்கப் பெறாத ஒன்றை, சுர்க்கத்தில் கிடைக்கப் பெறுவார்கள்.

அல் குர்ஆனில் ‘ஹுர்’ என்ற அரபி வார்த்தை பெண்பாலை குறிப்பிடத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சில மார்க்க அறிஞர்கள் உறுதியாக நம்பி வருகின்றார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஹதீஸ் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நபி (ﷺ) அவர்களிடம் சுவர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களை உடைய பெண்கள் துணையாக கிடைப்பார்கள் என்றால் – சுவர்க்கத்தில் பெண்களுக்கு எது கிடைக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது – சுர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும் காணாத – மனித காதுகள் எதுவும் கேட்காத – மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றினைப் பெறுவார்கள் என்று நபி (ﷺ) அவர்கள் பதிலளித்தார்கள்.

மேற்படி பதில் சுவர்க்கத்தில் பெண்கள் – மிகவும் சிறப்பான ஒன்றினைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

Follow us to get more useful articles like this soon. Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply