மும்பை: ட்ரம்ப் தொடங்கிவைத்த வரி யுத்தம், பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தைகளிலும் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் சரிந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பு, உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது. அத்துடன், உலக வர்த்தகத்தையே உலுக்கி வருகிறது. அதேபோல், சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு பதிலடியாக வரி உயர்வை அறிவித்திருப்பது பொருளாதார போரை துவக்கி வைத்துள்ளது.
இந்த வரிவிதிப்பு யுத்தத்தின் தாக்கமாக, ‘ரெசஷன்’ எனப்படும் பொருளாதார மந்தநிலை அச்சம் வலுத்துள்ளதால் சர்வதேச பங்குச் சந்தைகள் வரலாறு காணாத தடுமாற்றத்தைக் கண்டுள்ளன. இந்தப் போக்கு, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.
சென்செக்ஸ் சரிவும் மீட்சியும்: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 3984.80 வீழ்ச்சி கண்டு 71,379.89 ஆக இருந்தது. அதேவேளையில், நிஃப்டி 1,146.05 சரிந்து 21,758.40 ஆக இருந்தது. அதன்பின் வர்த்தக நேரத்தில் தடுமாற்றம் நீடித்து, பின்னர் ஓரளவு வீழ்ச்சியில் இருந்து மீளத் தொடங்கியது.
இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறைவைடையும்போது, சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் (2.95%) சரிந்து 73,137.90 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 742.85 புள்ளிகள் (3.24%) சரிந்து 22,161.60 ஆகவும் நிலை கொண்டது. இது, கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இதனால், இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரணம் என்ன? – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி வைத்த வரிவிதிப்பு யுத்தத்தின் விளைவும், அதன் தாக்கத்தால் உலக அளவில் பொருளாதார மந்தநிலை அச்சம் கூடியதன் எதிரொலியாகவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஆசிய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகளிலும் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது.
எனினும், சர்வதேச பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது, இந்தியப் பங்குச் சந்தைகளின் சரிவு என்பது சற்றே குறைவுதான் என்று வர்த்தக நிபுணர்கள் ஆறுதல் தகவல் அளித்துள்ளனர். அதேவேளையில், இந்திய பங்குச் சந்தைகளில் அனைத்து நிறுவனப் பங்குகளும் பெரும் சரிவைக் கண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 38 பைசா குறைந்து 85.82 டாலராக உள்ளது. அத்துடன், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில், பங்குச் சந்தை வீழ்ச்சிப் போக்கு தொடரலாம் என அஞ்சப்படுகிறது.