காஸாவில் போரை போர் நிறுத்தத்துடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டத்தை எகிப்து முன்வைத்துள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவு திட்டத்தில், காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறும், ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து கைதிகளும், மற்றும் பல பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், மேலும் அப்பகுதியில் போருக்கிப் பின்னரான ஒரு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பாலஸ்தீன அரசாங்கம் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாருடன் இணைந்து உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இந்த திட்டத்தில், சிறைபிடிக்கப்பட்ட மற்றும் கைதிகள் பரிமாற்றம் பல சுற்றுகளில் நடைபெறும் என்று டெல் அவிவிலிருந்து அல் ஜசீராவின் பெர்னார்ட் ஸ்மித் தெரிவிக்கிறார்.
முதல் கட்டமாக, 7-10 நாட்கள் போர் நிறுத்தத்தின் மூலம் இஸ்ரேல் வசமுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காஸாவில் ஹமாஸ் அனைத்து சிவிலியன் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.
இரண்டாவது கட்டத்தின் போது, அதாவது மற்றொரு வார கால போர்நிறுத்தத்தின் போது, இஸ்ரேலால் விடுவிக்கப்படும் அதிகமான பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸ் அனைத்து பெண் இஸ்ரேலிய சிப்பாய்களையும் விடுவிக்க வேண்டும்.
இறுதி கட்டத்தில், “விடுவிக்கப்படும் [பாலஸ்தீன] கைதிகளுக்கு ஈடாக ஹமாஸ் வசம் உள்ள அனைத்து இராணுவ வீரர்களையும் விடுவிப்பது மற்றும் இஸ்ரேல் காசாவை விட்டு திரும்புவது குறித்து விவாதிக்க ஒரு மாத பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட 8,000 பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் அல்லது தண்டனைகளின் பேரில் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட போர் நிறுத்த காலப்பகுதியில், பாலஸ்தீனிய பிரிவுகளான ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய ஆணையத்தை மீண்டும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு எகிப்து தலைமை தாங்கும், பின்னர் எதிர்கால தேர்தல்களுக்கு முன்னதாக மேற்கு கரை மற்றும் காசாவை நிர்வகிக்க நிபுணர்கள் அரசாங்கத்தை கூட்டாக நியமிக்கும் என்று தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவிக்கிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறையில் காஸா மீது அதன் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, 12 மணி நேரத்திற்குள் குறைந்தது 100 பாலஸ்தீனியர்களைக் கொன்ற போதிலும், இஸ்ரேலின் போர் அமைச்சரவை திங்களன்று இந்த முன்மொழிவு குறித்து விவாதிக்கவிருந்தது.
மீதமுள்ள கைதிகளை தாயகம் அழைத்து வர கடுமையான அழுத்தத்தில் இருக்கும் அமைச்சரவை பிளவுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் மோதல் தீர்வு பேராசிரியரான முகமது செர்கௌய் அல் ஜசீராவிடம் கூறுகையில்,
“பாலஸ்தீனியர்கள் முழு அளவிலான போர் நிறுத்தம் குறித்து பேசி வருகின்றனர். இஸ்ரேலியர்கள் ஒரு “போர் இடை நிறுத்தத்தை” கேட்கிறார்கள்.”
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஹமாஸை ஒழிக்கும் பணியில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று செர்கௌய் மேலும் கூறினார்.
“ஒருபுறம் [நெதன்யாகு] இன்னும் ஹமாஸுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார், ஆனால் அதே நேரத்தில் அவரது முக்கிய கனவு ஹமாஸை ஒழிப்பதாகும்.”
“அவர் இரண்டு வெவ்வேறு உலகங்களில் வாழ்கிறார், அவற்றை அவர் ஒருங்கிணைக்க வேண்டும்” என்று செர்காவ் கூறினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மேற்கத்திய இராஜதந்திரி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறுகையில், நெதன்யாகுவும் அவரது கடுமையான அரசாங்கமும் முழு முன்மொழிவையும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கூறினார்.
இதற்கிடையில், ஹமாஸ் மற்றும் அதனுடன் இணைந்த இஸ்லாமிய ஜிகாத் அமைப்பினர் காஸா பகுதியில் அதிகாரத்தை கைவிடும் முன்மொழிவை நிராகரித்துள்ளதாக எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.