ஹமாஸ் அமைப்பினர் காஸா பகுதியின் கீழ் பயன்படுத்திய சுரங்கங்களை நீரில் மூழ்கடிக்க பயன்படுத்தக்கூடிய பெரிய பம்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் சுரங்கப்பாதைகளை மூட இஸ்ரேல் “ஸ்பன்ச் குண்டுகளை” பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக முந்தைய பத்திரிகை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.
ஹமாஸ் வசம் உள்ள பனயக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கு முன்பு இந்த பம்புகளைப் பயன்படுத்துவது குறித்து இஸ்ரேல் பரிசீலிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த அறிக்கை கூறியுள்ளது,
சுரங்கங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திட்டம் குறித்து ஐ.டி.எஃப் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளதுடன் “பல்வேறு இராணுவ மற்றும் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி ஹமாஸை நிராயுதபாணிகளாக்க ஐ.டி.எஃப் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அவரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கோ அல்லது அதை நிராகரிப்பதற்கோ இஸ்ரேல் இறுதி முடிவை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை, ஹமாஸ் பயன்படுத்தும் சுரங்கங்கள் தனித்துவமானவை என்று இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் எலான் லெவி விவரித்துள்ளார்,
அதே நேரத்தில் ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாள் மற்றொரு அதிகாரியை மேற்கோள் காட்டி காசா சுரங்கங்களை அழிப்பது அறிவியல் புனைகதை போன்றது என்று கூறியுள்ளது.
சுரங்கப்பாதை எதிர்ப்பு தொழில்நுட்பங்களுக்காக 320 மில்லியன் டாலர் அமெரிக்க உதவியை டெல் அவிவ் பெற்றதாகவும், ஆனால் எந்த பயனும் இல்லை என்று பிரிட்டிஷ் செய்தித்தாளான பைனான்சியல் டைம்ஸ் இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
காசா சுரங்கங்களை அழிப்பது அறிவியல் புனைகதை போன்றது, இந்த இலக்கை அடைவதற்கான தீர்வுகளைக் கண்டறிய இஸ்ரேலிய அரசாங்கம் வளங்களை செலவழித்த போதிலும் எந்த பயனும் இல்லை.
காஸா பகுதியின் கீழ் ஹமாஸ் கட்டியது “சுரங்கங்களின் விளக்கத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் நிலத்தடி நகரங்களைப் போன்றது” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
காஸாவில் உள்ள ஹமாஸின் சுரங்கப்பாதைகளின் பின்னல் லண்டன் நிலத்தடியை விட பெரியது என்று இஸ்ரேலிய இராணுவம் மதிப்பிட்டுள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில் சுரங்கங்களை குண்டு வீசி தகர்ப்பதன் மூலமோ அல்லது புல்டோசர்களைப் பயன்படுத்துவதன் மூலமோ அழிக்க இஸ்ரேல் பல முறை முயற்சித்துள்ளது, இருப்பினும் ஹமாஸால் ஒவ்வொரு முறையும் அவற்றை மீண்டும் சக்திமிக்கதாக கட்டமைக்க முடிந்துள்ளது.
இந்நிலையில் தான், காஸா பகுதிக்கு அடியில் ஹமாஸ் பயன்படுத்தும் சுரங்கங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்க பயன்படுத்தக்கூடிய ஒரு பெரிய பம்புகளை இஸ்ரேல் உருவாக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய தரை நடவடிக்கை தொடங்கியதிலிருந்து காசா பகுதியில் 800 க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகளைக் கண்டறிந்ததாக ஆக்கிரமிப்புப் படைகள் கூறியது.
அதில் சுமார் 500 சுரங்கப்பாதைகளை வெடிபொருட்கள் மூலம் அழித்ததாகவும், பல கிலோமீட்டர் சுரங்கப்பாதைகளை அழித்ததாகவும் ஆக்கிரமிப்புப் படைகள் கூறியது குறிப்பிடதக்கது.