கோட்டாபய ராஜபக்ஷ – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 7வது ஜனாதிபதி

Sarinigar Gotabaya 01லெப்டினன்ட் கேர்ணல் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ (Lieutenant Colonel Nandasena Gotabaya Rajapaka, )

  • முழுப் பெயர் – நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ
  • பிறந்த திகதி – 20 ஜூன் 1949
  • பிறந்த பிரதேசம் – தென் மாகாணம், மாத்தறை, பாலட்டுவ
  • கல்வித் தகைமை – பாதுகாப்பு கற்கைகளில் முதுமாணிப் பட்டம் – சென்னை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா
  • பெற்றோர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டி.ஏ.ராஜபக்ஷ மற்றும் தண்டின சமரசிங்க திசாநாயக்க
  • உடன்பிறப்புகள் – சமல் ராஜபக்ச, ஜயந்தி ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, சந்திர ராஜபக்ச, பசில் ராஜபக்ச, டட்லி ராஜபக்ச, பிரீத்தி ராஜபக்ச, காந்தினி ராஜபக்ச
  • மனைவி – அயோமா ராஜபக்ச
  • மகன் – மனோஜ் ராஜபக்ஷ

இவர் தனது ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியை கொழும்பு ஆனந்தா கல்லூரியில் பயின்றார்.

1971 ஏப்ரல் 26 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்த அவர் 1972 மே 25 அன்று இரண்டாவது லெப்டினன்டாக தனது கடமைகளைத் தொடங்கினார். பின்னர் இலங்கை லயன் ரெஜிமென்ட் மற்றும் ரஜரட்ட ரைபிள்ஸ் ஆகியவற்றில் பணியாற்றிய அவர், 1983 ஆம் ஆண்டில் கஜபா ரெஜிமென்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

1983 முதல் 1990 வரை, அவர் படிப்படியாக இராணுவத்தில் உயர் பதவிகளுக்கு நகர்ந்தார், மேலும் 1990 இல் “ஸ்ட்ரைக் ஹார்ட்” மற்றும் “முப்படை” நடவடிக்கைகளின் தளபதியாக பணியாற்றினார்.

இரானுவத்தில் பணியாற்றிய காலத்தில் ரண விக்கிரம பதக்கம், ராணா சுரா பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார். 1992 ஆம் ஆண்டில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் லெப்டினன்ட் கர்னல் மற்றும் தளபதி பதவியை வகித்த கோத்தபாய அதே ஆண்டில் ஓய்வு பெற்று அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் கணினி ஒருங்கிணைப்பாளராகவும் யுனிக்ஸ் சோலாரிஸ் இயக்க முறைமை நிர்வாகியாகவும் பணியாற்றினார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரரும் ஜனாதிபதி வேட்பாளருமான மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக 2005 இல் இலங்கை திரும்பினார். 2005 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்குப் பிறகு, கோத்தபய 2005 நவம்பரில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 1, 2006 அன்று கொழும்பில் தமிழ்ப் புலிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார். எனினும் இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததுடன், 14 பேர் காயமடைந்தனர்.

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான “போர் நாயகன்” என்ற அவரது சிறந்த அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் கொழும்பு பல்கலைக்கழகம் 2009 செப்டம்பர் 6 அன்று கோட்டாபயவுக்கு முனைவர் பட்டம் வழங்கியது. அத்துடன், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தார்.

2009 ஆம் ஆண்டில், தமிழ் புலிகள் போராளிகளை தோற்கடிப்பதன் மூலம் இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ தெற்கில் சிங்கள பெரும்பான்மையினரிடையே ஒரு முக்கிய நபராக உருவெடுத்தார்.

2015 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாக மற்றும் அரசியல் அரங்கில் இருந்து விலகி இருந்தார், மேலும் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டார்.

2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிஐடி விசாரனைகள் நடைபெற்றது.

த சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே பொறுப்பு என லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன் ‘அவன்ட் கார்ட்’ மிதக்கும் ஆயுதக் கிடங்கை அங்கீகரித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பல பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலையை நிர்மாணிப்பதற்காக 33.9 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. விமானப்படைக்கு மிக் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை கோத்தபய ராஜபக்ச தொடர்ந்து மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை 19 வது திருத்தம் அரசியலமைப்பு ரீதியாக தடுத்துள்ள நேரத்தில் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான மக்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் அரசியல் ரீதியாக, 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றும் போது கோட்டாபய ராஜபக்ஷ முதல் முறையாக ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடத் தயாராக இருப்பதாக சூசகமாகக் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக 2019 ஆகஸ்ட் 11 அன்று, மஹிந்த ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ஷவை முன்மொழிந்தார்.

2019 நவம்பர் 16 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இராணுவ அதிகாரி ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாவது தடவையாகவும், ஜனாதிபதி பதவிக்கு முன்னர் வேறு எந்த அரசியல் பதவியையும் வகிக்காத ஒருவர் அந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

அவர் தனது பதவிக் காலத்தின் ஆரம்பத்தில் இருபதாவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை பெரிதும் பலப்படுத்தியதுடன், ராஜபக்ச குடும்பத்தின் பெருந்தொகையான உறுப்பினர்களை அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு நியமித்தார்.

உலகளாவிய கோவிட் -19 தொற்று நோயுடன் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா துறை மற்றும் உற்பத்தி, ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரத்தின் வீழ்ச்சி காரணமாக, ராஜபக்ஷ ஆட்சி ஆழ்ந்த சிக்கலில் இருந்தது.

எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. அத்துடன் குடும்ப அரசியல், ஏகாபத்திய அதிகாரப் போக்கு, ஊழல் மோசடிகள் போன்ற பல்வேறு காரணங்களினால் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தியை வௌிப்படுத்தினர்

இதன் விளைவாக, மார்ச் 2022 இல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் பகிரங்க மக்கள் போராட்டங்கள் வெடித்தன.

2022 ஜூலை 13 அன்று கோட்டாபய ராஜபக்ச தனது மனைவி மற்றும் இரண்டு காவலர்களுடன் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார். அத்துடன் ஜூலை 14 அன்று தான் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அவரின் இராஜினாமாவை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதியாக பதியேற்றார்.

தகவல் – sarinigar.com

Follow us to get more useful articles like this soon. Subscribe to our Sarinigar website. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!