சமகால சூழலில் தனிமனித அறத்தின் சமூக நிலைப்பாடு

முன்னுரை

மனித வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கான நல்வழியைக் காட்டி தீமையை அறுத்தெரிவது அறம் என்பதாக பொருள்படும். மனிதர்கள் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறை தொகுதிகளின், முழுநிறை வடிவமே அறம். தனிமனித அறம் என்பது சமூகளாவிய நிலையில் ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட ஒழுக்க பிரதிபலிப்புகளின் நெறிப் பாடாகும் மற்றும் சக மனிதர்கள் ஒவ்வொருவரின் உள்மனதைப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் வாழ்க்கையின் நோக்கம், வழிமுறைகள் மற்றும் தனிப்பட்ட உறவுகளுக்கான தர்மத்தை வகுப்பது தான் தனிமனித அறம் ஆகும்.

பழங்காலத்தில் தமிழர்கள் பொருள் ஈட்டி அறம் செய்து இன்புற்றனர்.இவ்வாழ்க்கையை அற வாழ்க்கையாக கொண்டனர் மேலும் தன்னலம் துறந்து பொதுநலத்தை உயிரினும் மேலாக கருதினர், தம்மிடம் வந்து இரந்த எளிய மக்களுக்கு இல்லை என்று கூறும் அவ சொல்லை கூறுவதை தாழ்வாக கருதினர்..

இப்படி எல்லாம் அறவாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தவர்கள்தான் தமிழர்கள் என்பதனை நாம் சங்க இலக்கியங்கள் முதலாக கொண்டு அறியலாம். ஆனால் சமகால சூழலில் தனிமனித அறம் காக்கப்படுகின்றதா என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகதான் உள்ளது. ஏனென்றால் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம், இன்றைய சமூக சூழல், அரசியல், பண்பாடு வாழ்வியல் சூழல் மற்றும் சமூக மதிப்பீடு போன்றவைகள் தனிமனித அறக்கோட்பாட்டின் மீது தீவிரமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சமகால சூழலில் தனிமனித அறத்தின் சமூக நிலைப்பாடு எத்தகையது என்பதே இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்

தனிமனித அறம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம்

சமூகம் நல்வழி பெறுவதற்கும், அமைதியை நோக்கி நகர்வதற்கும் இங்கு சட்டங்கள் இயற்றப்பட்டு அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து விட்டது ஆனால் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை மாறாக அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

கள்ளக்காதலுடன் சேர்ந்து கொண்டு தன் கணவனையே கொலை செய்வது, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் 10 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்வது. பட்டப் பகலில் நடுரோட்டில் பெண்ணின் தாலிச் செயினை பறித்துச் செல்வது, பணத்திற்காக கொலை செய்வது, நூதனமான முறையில் இணைய வழியில் மூலம் பணத்தினை கொள்ளையடிப்பது. இது போன்ற அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை செய்தித்தாள்களின் மூலம் படிக்கும்போது நெஞ்சம் பதபதகின்றது. இங்கு ஒவ்வொரு மனிதரும் தன் கடமையை சரியாக செய்தாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும். மேலை நாடுகளில் எல்லாம் தன் கடமையை மீறுவதற்கு தான் லஞ்சம் வாங்குகிறார்கள் ஆனால் இங்கே தன் கடமையை செய்வதற்கே லஞ்சம் வாங்குகிறார்கள் முன்பெல்லாம் படிக்காத நபர்கள் தான் தவறு செய்பவர்கள் என்று கூறுவார்கள் ஆனால் இன்று படித்த நபர்கள் தான் அதிகமாக தவறுகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த தனிமனித அறம் காக்கப்படுவதன் மூலம் ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை தரம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் சமூக மேம்பாட்டிற்கும், சமூக அமைதிக்கும் மற்றும் சமுதாய நல்லிணத்திற்கும் உதவியாக இருக்கும்.

இன்றைய சமூக சூழல்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர வளர மனிதர்களுடைய பிரச்சனைகளும் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன இதனால் மனித உறவுகள் சிதைந்து கொண்டேதான் செல்கின்றன. மனிதர்கள் சக மனிதனுடன் நேரம் செலவழிப்பதில்லை. அதிகமான நேரம் இயந்திரங்களுடன்தான் செலவு செய்கிறார்கள் அதாவது கைபேசி, தொலைக்காட்சி, கணினி போன்றவைகளுடன். அதிகம் உறவாடுகிறார்கள். மனிதர்கள் பணம் சம்பாதிப்பதிலும் பொருள் சேர்ப்பதிலும் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள் மேலும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பொருளாதாரத் தேவைகளின் பயன்பாடு என்ற நிலையை கடந்த பண்பாட்டு சீரழிவாகும், ஆன்லைன் ரம்மி போன்ற நவீன சூதாட்டங்களில் பொருளை இழந்தவர்கள் தற்கொலை செய்கிறார்கள். பப்ஜி விளையாடு உடல் திறனுக்கும் செயல் திறனுக்கும் எதிராக இளைஞர்களை காட்சி போதைக்கு ஆட்படுத்தப்படுகின்றன.

 முன்பெல்லாம் எதுவுமே இருக்காது ஆனால் மக்கள் சந்தோஷமாக இருந்தார்கள் ஆனால் இன்றைய சூழலில் அனைத்துமே இருக்கின்றன ஆனால் சமூகப் பொறுப்பு, மகிழ்ச்சி, நிம்மதி எதுவும் இல்லை. கூட்டமாக வாழ்கிறார்கள் ஆனால் ஒவ்வொருவரும் தனி தீவாகவே ஒற்றுமையின்றி இருக்கிறார்கள், ஒரு போலியான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது முன்பெல்லாம் மனிதர்கள் இயல்பாக இருப்பார்கள் போலியாக நடிப்பதற்கு அவசியம் இருக்காது. ஆனால் இன்றைய பண்பாட்டு சீரழிவால் வாழ்க்கை வெறும் நடிப்பாகிவிட்டது இன்னும் துல்லியமாக சொல்வதனில் இருப்பவன் இல்லாதவனைப் போல் நடிக்கிறான் இல்லாதவன் இருப்பவனை போல் நடிக்கிறான்.

வாழ்வியல் முறைகள்

முன்பெல்லாம் ஆடம்பரமாக இருந்த பொருட்கள் எல்லாம் இன்று அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டன எடுத்துக்காட்டாக குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, கைப்பேசி, கணினி, சலவை எந்திரம், இரு சக்கர வாகனங்கள் போன்ற முந்தைய ஆடம்பரப் பொருட்கள் இருந்தால்தான் சமூகத்தில் ஒரு மதிப்பு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இலவசமாக கிடைக்கக்கூடிய மருத்துவம், கல்வியும் இன்று வியாபாரமாக மாறிவிட்டது இன்றைய சூழலில் ஒரு தரமான மருத்துவமோ ஒரு கல்வியை கிடைக்க வேண்டுமானால் அதற்கு அதிகமாக பணம் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலை சமாளிப்பதற்காக குடும்பத்தில் கணவன், மனைவி இரண்டு நபர்களும் வேலைக்கு செல்லக்கூடிய ஒரு கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது எனவே பணம் சம்பாதித்தால் மட்டும் தான் இனி வரும் சந்ததிகளை காப்பாற்ற முடியும் அப்படி பணம் சம்பாதித்து, பணத்தை சேர்த்து வைத்தால் தான் வரும் சந்ததிகள் நம்மை மதிப்பார்கள் என்று ஒரு சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய லாபவெறி பண்பாட்டு சீரழிவில் கல்வியும் மருத்துவமும் கடைச்சரக்குகளாக ஆகிவிட்டன. இந்நிலை வாழ்வியல் முறைகளில் நிகழ்ந்துள்ள ஆகப்பெருங்கடாக திகழ்கின்றது.

இன்றைய இளைஞர்களின் நிலை

இன்றைய இளைஞர்கள் எந்த படிப்பினை தேர்வு செய்தல் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும், மேலை நாடுகளில் சென்று செட்டில் ஆக முடியும் என்றுதான் சிந்திக்கிறார்கள். அதேபோல கல்வி முறைகள் அதிகமாக பணம் சம்பாதிக்க கூடிய படிப்புகளை தான் ஏற்படுத்திகிறார்கள் அதற்குத் தான் அதிகமாக விளம்பரம் செய்கிறார்கள்.

 இன்றைய இளைஞர்களின் ஒரு பகுதி மது போதைக்கு ஆட்படுகிறார்கள் முன்பெல்லாம் ஏதாவது ஒரு போதைக்கு தான் அடிமையாக ஆவார்கள் ஆனால் இன்று ஒரே நேரத்தில் மது அருந்துவது, போதை மாத்திரை எடுத்துக் கொள்வது, போதை ஊசி போட்டுக் கொள்வது என்று ஒரே நேரத்தில் பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள் இவர்களுடைய உடல் நலம் என்ன ஆவது, எதிர்காலம் கேள்விக்குறியாகிறது இதுபோக இன்னும் சிலர் கைபேசிக்கு அடிமை ஆகிறார்கள் தொடர்ந்து நான்கு ஐந்து மணி நேரம் கைபேசியினை பயன்படுத்துகிறார்கள் அதன் மூலம் அவர்கள் ஏதும் கற்றுக் கொள்வதில்லை ஆனால் காட்சி போதைக்கு துரிதமாக ஆட்படுகிறார்கள், இப்படியாக இன்று இளைஞர்களின் கவனம் திசை மாறி செல்கிறது. ஆனால் இன்றைய கல்வி முறையில் அறம் தொடர்பான பாடங்கள் இருக்கின்றன என்றாலும் அதிகமாக இடம்பெறுவதில்லை அதே போல வாழ்க்கைக்கு தேவையான திறன் சார்ந்த கல்வி இப்போது கேள்விக்குறியாகதான் இருக்கிறது

சுயநல சிந்தனை

நம் வாழ்க்கையின் குறிக்கோள் பிறருக்கு உதவுவதாகவே அமைய வேண்டும் அதுதான் சான்றோர் பண்பு கண்ட நெறி அவ்வாறு ஒருவேளை உதவ முடியாமல் போனாலும் பிறருக்கு தீங்காவது செய்யாமல் இருத்தலே சிறப்பாகும் அதுவே நல்ல கதிக்கு அழைத்துச் செல்லும் பாங்குடையதாகும். ஆனால் இன்றைய சூழலில் அன்றாட பிரச்சினைகளை சமாளிப்பது கடினமாக உள்ளது எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து விடலாம் அதில் குறிப்பாக பண பிரச்சனையை மட்டும் மனிதனால் சமாளிக்க முடியவில்லை ஏனென்றால் இன்றைய சூழலில் கடன் வாங்காத மனிதர்களே இல்லை அதிலும் பெரும்பாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் மாதம், மாதம் சம்பாதிக்கும் பணம் பெரும் பகுதி கந்துவட்டி அடைப்பதற்கு போதுமானதாக உள்ளது இதனால் அவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே. பெரும் சவாலாக உள்ளது…இப்படி உள்ள சூழலில் அடுத்தவர்களை பற்றி யோசிப்பதற்கு கூட அவர்களுக்கு நேரமில்லை. இதனால் தான் மக்களிடையே அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டே செல்கிறது. இது போன்ற காரணங்களால் தான் தனி மனிதனை சுயநல சிந்தனையை ஆட்கொள்கிறது.

முடிவுரை

சமகால சூழலில் மனிதர்கள் தனிமனித அறத்தினை கடைபிடிக்க தவறி விட்டார்கள். தான் வாழ என்ன வேணாலும் பண்ணலாம். எப்படி வேணாலும் பணம் சம்பாதிக்கலாம் என்ற சுயநல வெறி சூழலுக்கு தனி மனிதன் ஆட்பட்டு விட்டான், காரணம் இருக்கக்கூடிய சூழல் அவ்வாறு அவனை மாற்றி விட்டது அதுதான் நிதர்சனமான உண்மை. இன்றைய சமூகத்தில் கொள்ளையடிப்பவன், நம்பிக்கை துரோகம் செய்பவன், கொலை செய்பவன் இது போன்ற தவறுகளை செய்பவன் தான் தலை நிமிர்ந்து நடக்கிறான் ஆனால் இங்கு பணத்தை பறிகொடுத்து ஏமாந்தவன் தலை குனிந்து நடந்து கொண்டிருக்கிறான் இந்த சமூகம் பொய் சொல்லி ஏமாற்றுபவனுக்கு தான் மரியாதை கொடுக்கிறது ஆனால் ஏமாந்தவனை இங்கு ஏமாளி, பிழைக்கத் தெரியாதவன் என்று ஏளனமாக பார்த்து சிரிக்கிறது.

இங்கு தனி மனிதர்கள் அற வாழ்க்கை வாழ வேண்டும் எனில் சமூக அறம் காக்கப்பட வேண்டும் சமூகளாவிய குற்றங்களுக்கும் அழிவுகளுக்கும் எதிராக சகமனித ஒழுக்கங்கள் மீண்டும் அறமாக உயர்த்தப்பட வேண்டும். தனிமனித அறம் என்பது பெரும் தனி மனித ஒழுக்கங்களை மட்டும் பிரதி பிரதிபலிப்பதல்ல இது ஒரு சமூக ஒழுக்கங்களையும் மற்றும் சமூக ஒற்றுமைகளையும், அமைதியையும் நிலை நிறுத்த உதவும். ஒரு தனி மனிதன் அறத்தை கடைபிடித்தால் மட்டுமே இங்கு சமூக அறமும் காக்கப்படுகிறது எனவே இனிவரும் சந்ததிகள் இடையே நம் தனி மனித அறம் சார்ந்த விஷயங்களை கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு கண்டிப்பாக இருக்கிறது. அறம் சார்ந்த சமூகத்தை உருவாக்குவது நோக்கமாக கொள்வோம். இலக்கியம் கலை அறிவியல் யாவும் சகமனித ஒழுக்கங்களை சமூக ஆழ் மனங்களில் விதைக்கட்டும்

துணை நின்ற நூல்கள்

  • இரா. ராதாகிருஷ்ணன் ; நீதி நூல்கள் ஏழு; தெளிவுரை; கவிஞர் -சிவகுரு பதிப்பகம் -சென்னை (2021).
  • கே டி கே தங்கமணி ;மணிமேகலை பற்றி ; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்; சென்னை (ஆகஸ்ட்- 1988)
  • முனைவர் மு. நிசாந்த்; இலக்கியம் காட்டும் அறநெறிகள்; கீற்று ; சமூக அரசியல் இணைய இதழ்; டிசம்பர் 2024..
  • டாக்டர் சி பாலசுப்பிரமணியன்; வாழ்வியல் நெறிகள்; நறுமலர் பதிப்பகம் (சென்னை டிசம்பர் 1990).

– முனைவர் மு. நிசாந்த்,  உதவி பேராசிரியர், மதுரை சமூக அறிவியல் கல்லூரி. மதுரை

நன்றி

Leave a Reply

error: Content is protected !!