சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் (ICRC) International Committee of the Red Cross பிரதிநிதிகள் நேற்று (26) ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் புதிய பிரதானி சேவரின் சபாஸ் (Ms Severine Chappaz), இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்பாடல் முகாமையாளர் ருவந்தி ஜயசுந்தர, சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனத்தின் தெற்காசியப் பிரதானி ஜோன் என்ட்விஸ்டல் (Mr John Entwistle) மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் (வைத்தியர்) மஹேஷ் குணசேகர உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இலங்கை பாராளுமன்றத்தின் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் அபிவிருத்திக்கு அதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பங்களிப்புகள் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்குச் செயலமர்வொன்றை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடுவது இச்சந்திப்பின் நோக்கமாகும்.
இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக செயற்படுத்தப்படும் புதிய கொள்கைகள் மற்றும் பத்தாவது பாராளுமன்றத்தின் ஊடாக அடைந்துள்ள புதிய அரசியல் கலாசார வெற்றி தொடர்பிலும் இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.
அத்துடன், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நெருக்கமான ஆதரவை வழங்குமாறும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இதன்போது பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.