ஜன்னல் கைதிகள்
பிரான்ஸ் நாட்டின் பெண் அறிஞர் சிமோன்டி போவ்வியர் கூறுகிறார் : “ஆணுலகமும், பெண்ணுலகமும் ஒன்றல்ல. சமூக அமைப்புகள் மாற்றப்படும் வரை உலகம் ஆணுலகமாகவே நீடித்திருக்கும்” அவரின் இதயத்துடிப்பு இன்று வரையும் உலகில் ஒலித்துக் கொண்டுதானே இருக்கின்றது! எங்கு பாத்தாலும் பெண்கள் இரண்டாம் பட்சமாகத்தானே மதிக்கப்படுகின்றனர்?
எந்த துறையிலும் பெண்களினது பங்களிப்பை இருட்டடிப்பு செய்வதே இங்கு நோக்கமாகி விட்டது. இதனால் சமூகத்திற்குத் தான் இழுக்கு, பெண்களுக்கல்ல என்று பெண்கள் கவலைப்படுவதை மனமார உணர முடிகின்றது. எனினும் நடைமுறைச் சிக்கல் தினமும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.
சமுதாய வாழ்க்கையில் பெண்களது தன்மை பற்றியும், அந்தஸ்து பற்றியும் தெளிவில்லாத கண்ணோட்டமே அதிகமாக காணப்படுகிறது. ஒன்று தெய்வமாக்கப் படுகின்றாள் அல்லது இழிபிறவியாக இகழப்படுகின்றாள். இவ்விரண்டு தோற்றமும் முற்றிலும் ஒன்றுக்கொன்று முரணானவை.
இந்நிலை முதலில் நடு நிலையாக்கப்பட வேண்டும். இருபாலரும் இணைந்து வாழ்வதில்தான் அளவுகடந்த இன்பம் இருக்கிறது என்ற யதார்த்த வாழ்க்கையைப் புரியாமல் ஆணை அண்டிவாழும் பெண்களை எங்கும் நடமாட விடாமல், நொண்டியாக்கி வைத்திருப்பதில் என்ன பிரதிபலன்களை எதிர்பார்க்கிறதோ தெரியவில்லை. தமது “ஆணியம்” நிலை கண்டுவிடும் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் அங்கு இருக்க முடியும்?
மத்தளம், கால் நடைகளோடு பெண்களையும் இணைத்து கூறியிருப்பது ஈண்டு நோக்கத்தக்கதன்றோ? இந் நிலையில் தான் மக்காவில் தோன்றிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள்,
பெண்களுக்கு கல்வி, கண்ணியம், அந்தஸ்து, உரிமை வழங்கியதில், இதன் பிரதிபலிப்பு அப்போதே இருந்ததும் கவனிக்கத்தக்கதாகும். மாதவிடாய் போன்ற சந்தேகங்களைக் கூட அசிங்கப்படாமல் நபி (ஸல்) அவர்களின் சபையில் பெண்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள் என்றால் அப் பெண்களின் அறிவுத்தாகத்தை என்னவென்று கூறுவது?
ஸஹாபா பெண்கள் அனைவருமே குர்ஆனின் கருத்துக்கள் யாவற்றையுமே உள்வாங்கி இருந்தார்கள். ஈருலக வாழ்விலுமே சிறந்து விளங்கினார்கள். ஆனால் இன்றோ?
பெண்கள் மத்ரஸாக்கள் நிறைய இருந்தும் இன்னும் விடியலின் ஒளி தென்படவே இல்லை. “பொம்புள மசாலாவை எல்லாம் ஏத்துக் கொள்ள முடியுமா? என , ஆண்கல்வி – பெண்கல்வி என கல்வி அறிவியையும் பிரித்துப் பார்க்கப்படும் நிலை.
ஆண்கள் கூறும் சட்டங்களை மட்டும் தான் சபையில் அங்கீகரிப்படும் என்ற எழுதப்படாத சட்டத்தை ஏற்கமுடியுமா? பல்லாயிரம் நபி மொழிகளை ஸஹாபா பெண்கள் அறிவித்ததைத் தானே இன்றும் இஸ்லாத்தில் அமுல்படுத்திக் கொண்டிருக்கிறோம்?
பிறகு நாம் “ஆலிமா, முபல்லிகா” என்று அப்பெண்களினது இஸ்லாமிய கல்வித் தரத்தில் முத்திரையிடுவதில் அர்த்தம் இல்லையே! இங்கு சில ஆலிம்களே பெண்கள் எவ்வாறு கொஞ்சம் படித்து விட்டு “ஆலிமா” என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்?
நாங்கள் படித்த ஏழு வருட கால படிப்பிற்கு அது ஈடாகுமா ? என கேள்விக் கணைகளை தொடுப்பது ஆணாதிக்கதின் மனப்பான்மையை வௌிக்காட்டுகின்றது! இவ்வாறான கருத்துக்கள் பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையை தான் உண்டாக்கும். இஸ்லாத்தை இன்னும் அறியாத ஆலிம்களும்(?) இருக்கத்தானே செய்கிறார்கள்.
நாளுக்கு நாள் இஸ்லாமிய வட்டாரத்திற்குள் மறுபக்கத்தில் பெண்களின் கண்ணியம் சீர்குலைக்கப்படுகின்றது. ஆலிம்களும் சீரழித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் இன்று வரை பொது தளங்களில் வெளிவராத செய்தியாகும்.
பெண்களின் மறைமுக ஒடுக்கு முறைகளைப் பற்றி இன்னும் பேசப்படவில்லை என்பது தான் அனைத்து பெண்களதும் தீராத ஆதங்கமாய் இருக்கின்றது. என்றாலும் என்ன செய்வது. இறைவனிடம் துஆ செய்வதை தவிர ஒடுக்கப்பட்ட பெண்களினால் என்ன செய்ய முடியும் .
இதன் எதிரொலியாக பெண் சமுதாயத்தை ஊனப்படுத்தும் போது தான் பெண்களாலேயே அதைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எனினும் என்ன செய்வார்கள் அடிமைச் சங்கிலிகள்? சரி! பெண் உரிமையாவது பேணப்படுகின்றதா?
நடைமுறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். “கண்கள் என்னவோ வெண்ணிவை தரிசித்த போதும், கைகளிரண்டும் ஜன்னல் கம்பிகளில் தான்” என்ற கவிதை எவ்வளவு ஆழமானது! பெரும்பாலான பெண்கள் உடலியலில் உயர்ந்திருந்தாலும் மனவியலில் கடும் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதன் விளைவாக அவர்களின் ஆளுமை சிதறுகின்றது, இருபாலருக்கும் இது பொருந்தும் என்றாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு மனிதருக்கும் இயற்கையான ஒரு சக்தி உள்ளது. அது தன்னை அறிந்து கொள்வதற்காக போராடுகிறது. இந்த அகப்பண்பு ஒடுக்கப்பட்டால் அவர் மனநோயுறுகிறார். அவரது ஆளுமைத் திறன் சிதறிவிடுகின்றது என்று மனித நேய உளவியலாளர்கள் கூறியுள்ளனர்.
“எங்களால் என்ன செய்ய முடியும்? இதை விட்டால் வேறு வழியில்லை!” என்ற உளக் குமுறலுடன் தான் அநேக பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் 1937-ல் தான் பெண்களுக்கு சொத்து உரிமை வழங்கியது என்றால் எத்தனை நூற்றாண்டுகளாக சொத்தைகளாக அவர்கள் தமது வாழ்வை கழித்திருப்பர். சற்று சிந்திக்க வேண்டாமா?
பெண் உரிமை காப்பதற்காக 1889-ல் பாரீஸ் நகரில் பெருமளவில் பெண்கள் ஒன்று திரண்டனர். அந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மன் நாட்டை சார்ந்த “க்ளாரா ஜெட்கின்” என்ற வீராங்கனையின் குரல் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக ஓங்கி ஒலித்தது.
அந்தப் பெண்ணின் வேண்டுதல் படிதான் 1910 முதல் இன்று வரை மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. தன் உரிமையை இப்படி தான் கேட்டு பெற வேண்டிய நிலை ஏனைய சமுதாயங்களில் இருந்திருக்கின்றது.
இஸ்லாம் மார்க்கம் தாராளமாக தார்மீக உரிமைகளை பெண்களுக்கு அதிகளவு அளித்திருக்கிறது. எனினும் யானை தன் பலம் அறியாது என்பது போல் இன்றும் காலந்தள்ளி வருவது கவலையாக உள்ளது.
சுதந்திரம் என்று கூறிக் கொண்டு அரைகுறை ஆடைகளுடன் பெற்றோரையும் மதிக்காமல் கால் போன போக்கிலே திரியும் நவீன இஸ்லாமியப் பெயர் தாங்கிப் பெண்களை எவ்வகையிலும் இஸ்லாம் வரவேற்பதேயில்லை.
சிந்தனை சரம்
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!