வடக்கு காஸா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் குடும்பங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் வீடு மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போர் விமானங்கள் குண்டுவீசி தாக்கியதில் 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பலர் காயமடைந்தனர், இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளின் கீழ் பலர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பாலாவுக்கு கிழக்கே உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என்றும் அல்-ஜசீரா செய்தியாளர் தெரிவித்தார்.
தெற்கு காஸா பகுதியில் உள்ள கான் யூனிஸின் பல பகுதிகளில் இஸ்ரேலிய பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிப் படகுகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக அல் ஜசீராவின் நிருபர் மேலும் கூறினார்.
போர் நிறுத்தம் முடிந்த இரண்டாவது நாள் அதிகாலையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நகரில் உள்ள 3 வீடுகள் மற்றும் 3 மசூதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
Ø மனித உரிமை அமைப்பு: 80% காஸா மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
காசா முனையின் 80% மக்கள் மிகவும் கடினமான நிலைமைகளின் கீழ் இடம்பெயர்ந்துள்ளனர் என்று காசா முனையில் உள்ள மனித உரிமைகளுக்கான சுயாதீன ஆணையம் கூறியது,
அதே நேரத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இரானுவம் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் மக்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
காசாவில் உள்ள சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர், கான் யூனிஸைச் சேர்ந்த டாக்டர் அஷ்ரப் அல்-கித்ரா, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை வடக்கு காசா பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் சேவையில் இருந்து அகற்ற விரும்புகிறது என்பதை உறுதிப்படுத்தினார்.
தெற்கு காஸா பகுதியில் உள்ள மருத்துவமனைகளையும் குறிவைத்து இந்த ஆக்கிரமிப்பு படைகள் தாக்குதல்கள் நடத்தியதாக அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.
மறுபுறம், வடக்கு காசா பகுதியில் உள்ள சிவில் பாதுகாப்பு இயக்குநர் அகமது அல்-கஹ்லூட், காசா முனைக்கு மீட்பு நடவடிக்கைகளைத் தொடரவும், இறந்தவர்களின் உடல்களை மீட்கவும் இயந்திரங்கள் மற்றும் 50 புல்டோசர்கள் உடனடியாக தேவைபடுவதாக தெரிவித்துள்ளனர்.
Ø இஸ்ரேல் இரானுவத் தளங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது
இஸ்ரேலிய இரானுவத் தளங்களான பிரானெட்டில் உள்ள 91 வது படைப்பிரிவின் தலைமையகம் மற்றும் அல்-ரஹேப் மற்றும் ருவைசாத் அல்-ஆலம் ஆகிய தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் மலைப் பகுதியான காஃப்ர் சுபாவில் உள்ள இஸ்ரேலிய தளமான ருவைசாத் அல்-ஆலம் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக அல்-ஜசீரா செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே வேளை தெற்கு லெபனான் நகரமான காஃப்ர் சுபாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
Ø இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 15207 ஆக உயர்வு
காசா பகுதியில் உள்ள சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:
இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,207 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் தங்கள் சிகிச்சை திறனை இழந்துவிட்டன, நூற்றுக்கணக்கான காயமடைந்தவர்கள் தரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு படை வேண்டுமென்றே 130 சுகாதார நிறுவனங்களை குறிவைத்து தாக்கியுள்ளது, 20 மருத்துவமனைகளை சேவையில் இருந்து நிறுத்தியுள்ளது.
மேலும் காஸா பகுதியின் பல்வேறு பகுதிகளில் 280 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு படையினர் 31 சுகாதார ஊழியர்களை கைது செய்து சித்திரவதை செய்து விசாரிக்கிறது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் 70% குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் விளைவாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்து 40,652 ஆக உயர்ந்துள்ளது.
காஸா மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படாததால் ஒவ்வொரு நாளும் ஏராளமான காயமடைந்தவர்களை நாம் இழக்கிறோம்.
போர்நிறுத்தத்தின் போது மருத்துவமனைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் எரிபொருள் கொண்டுவருவதற்கு ஆக்கிரமிப்பு படை கட்டுப்பாடுகளை விதித்தது. என தெரிவித்துள்ளார்.