தேவையற்ற விடயங்களைப் பற்றி யோசித்து கவலைப்படுபவரா நீங்கள்? அப்படியாயின் இது உங்களுக்கான பதிவு

தேவையற்ற விடயங்களைப் பற்றி யோசித்து கவலைப்படுபவரா நீங்கள்
நாம் மனிதர்கள் என்ற வகையில் பல விடயங்களைப் பற்றி சிந்திக்க, யோசிக்க வேண்டும். மனிதன் மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுவது மனிதனின் இந்த ஆழ்ந்த சிந்தனை மற்றும் கற்பனைத் திறன்களால் தான்.

ஆனால் அது எவ்வளவு தூரம் சிந்தக்க வேண்டும் என்று சிந்திப்பது கூட சற்று சிந்திக்க வேண்டிய விடயம். ஏனெனில் எதனையும் அளக்கு அதிகமாக யோசிப்பதன் மூலம், இறுதியில் நம் வாழ்க்கையில் எதிர்மறையான எண்ணங்கள், சோகம் மற்றும் மன அழுத்தங்கள் ஏற்படுகின்றது.

இவ்வாறன நிலை நமது மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் மிகத் தீவிரமான முறையில் பாதிக்கும்.

இந்த நிலை நமது மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் மிகத் தீவிரமான முறையில் பாதிக்கும். எனவே அதிகம் யோசித்து தனது மகிழ்ச்சியை இழக்கும் ஒருவருக்கான சில முக்கிய குறிப்புகளை பார்கலாம்.

    01. பிரச்சினையை அடையாளம் காணவும்

சில சமயங்களில் நம்மை அறியாமலேயே சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறோம். பெரும்பாலான நேரங்களில் இந்த எண்ணங்கள் நம் மனதில் நிறைய எதிர்மறை எண்ணங்களை உருவாக்குகின்றன.

இத்தகைய எண்ணங்கள் பிறப்பதற்குக் காரணமான விடயங்கள் பெரும்பாலும் மிகவும் அற்பமானதாக இருக்கும். இங்கு நாம் ஏன் இப்படிக் குழம்பிப் போய் யோசிக்கின்றோம் என்று சிந்திக்க வேண்டும்.

அந்த பிரச்சினைக்கு காரணமாகிய எண்ணங்களின் ஆரம்ப தோற்றத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

    02. கவலைப்படுவது ஏதேனும் பயனுள்ள விடயத்திற்காகவா?

பலரிடம் காணப்படும் ஒரு விடயம் தான் கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்தைப் பற்றியும், நடந்து முடிந்த கடந்த காலத்தைப் பற்றியும் மீண்டும் மீண்டும் நினைத்து கவலைப்படுவது.

“நாளை நடைபெறவுள்ள நேர்முக பரீட்சை அப்செட் ஆகிடுமா?”, அல்லது “ச்ச அன்று அந்த காரியத்தை செய்தது அநியாயம்” என்று இதுவரை நடக்காத ஒன்றையோ அல்லது நடந்ததையோ பற்றி தேவையில்லாமல் நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது இதில் அடங்கும்.

இதுபோன்ற விடயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இவ்வாறான ஒரு எண்ணம் வந்தால், கூடிய விரைவில், அதை நேர்மறையாகத் தீர்த்து, அதை உங்கள் தலையில் இருந்து வெளியேற்றுங்கள்.

உதாரணத்திற்கு, “அய்யோ, நாளைக்கு என் இன்டர்வியூ அப்செட் ஆகுமா?” என்று நினைக்கும் போது அடுத்ததாக உங்கள் மனதில் தோன்றுவது “இன்டர்வியூ போர்டில் இருப்பவர்கள் கடுமையாக இருப்பார்களா?”, “என்னுடைய தகுதி போதாமல் இருக்குமா?”. போன்ற பல கேள்விகளும் சிந்தனைகளும் தான்.

அப்படி ஆயிரத்தெட்டு விடயங்களைப் பற்றி யோசிக்காமல், “இல்லை, எதுவாக இருந்தாலும், என்னால் முடிந்தவரை முயற்சி செய்து வேலையைச் செய்து முடிப்பேன்” என்று நேர்மறையாக சிந்தித்து தேவையற்ற சிந்தனைகளை நீக்குங்கள்.

    03. பிரச்சனையின் தீவிரத்தை யோசித்துப் பாருங்கள்… பிறகு அதிலிருந்து விடுபடுங்கள்

​வௌியே வருவதற்கு முடியாதளவில் பல யோசனைகளில் சிக்கியிருக்கும் போது அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம்.

இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு வெற்றிகரமான வழி, நீங்கள் குழப்பத்தில் உள்ள பிரச்சனை எவ்வளவு தீவிரமானது என்பதைப் புரிந்துகொள்வதாகும்.

குறிப்பிட்ட விடயம் இன்னும் ஐந்து வருடங்களில் தனது வாழ்க்கையை எந்தளவு பாதிக்கும்? அல்லது இரண்டு வாரங்களில் இந்த விடயம் தன்னை எப்படிப் பாதிக்கும் என்று முதலில் யோசித்துப் பாருங்கள்.

இவ்வாறு சிந்தித்துப் பார்க்கும் பொழுது இந்தப் பிரச்சினைகளில் பலவற்றின் தாக்கம் மிகக் குறைவு என்பதையும், அதைப் பற்றி அதிகம் சிந்திக்கத் தேவையில்லை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

அதைத் தாண்டிய பிரச்சனைகளை ஒரு எல்லையோடு யோசியுங்கள். முன்பு கூறியது போல், அந்த விடயங்களை நேர்மறையான பக்கமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒன்றை சிறந்த முறையில் சாதிப்பதாக உறுதி கொள்ளுங்கள். கடந்த காலத்தில் நடந்த ஒன்றைப் பற்றி கவலைப்படாமல், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம், அதன் மூலம் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல விடயங்கள் அல்லது அனுபவத்தைப் பற்றி சிந்தியுங்கள்.

    04. அடுத்தவர்களைப் பற்றி நடுநிலையாக சிந்தியுங்கள்

பலரை தேவையில்லாமல் குழப்பும் இன்னொரு விடயம் இது. அதாவது அடுத்தவர்களைப் பற்றி அளவுக்கதிமாக சிந்திப்பது.

நம்மில் பலர் ஆயிரத்தோரு பிரச்சனைகளுடன் தான் வாழ்கின்றனர். எனவே, அவர்களை அறியாமலேயே பலவிதமான குறைபாடுகளை அவர்களிடம் நீங்கள் சந்திக்க நேரிடும்.

வேண்டுமென்றே தப்பு தவறுகள் செய்பவர்களும் உண்டு. எனினும் அப்படியில்லாத சந்தர்பங்களில் நாம் பொய்யான கற்பனை செய்து கவலைப்படுவதற்கு அவசியமில்லையே.

உதாரணமாக, உங்களுக்குத் தெரிந்த ஒருவர் இன்று உங்களுடன் சிரிக்கவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள். அதற்காக “அட இந்தாளு என்னுடன் கோபித்து விட்டார்” என்று ஒரேயடியாக முடிவெடுத்து வருத்தப்பட வேண்டாம்.

தொடர்ந்து அப்படி ஏதாவது நடந்தால், உரிய நடவடிக்கை எடுத்து, குறித்த நபரிடம் பேசி பிரச்சினைகள் இருந்தாள் தீர்துக் கொள்ளலாம்.

அதே போல் அடுத்தவர்களைப் பற்றி அளவுக்கதிமாக நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ சிந்திக்க முயற்சிக்க வேண்டாம்.

இதனால் ஒருவரிடம் காணப்படும் நல்ல விடயம் உங்களால் தவறவிடப்படலாம் அல்லது அந்த நபர் மீதான உங்களின் எதிர்பார்புகள் முறிந்து விடலாம். எனவே அந்தந்த நபர்களுடன் திறந்த மனதுடன் பழகுங்கள்.

    05. அடுத்தவர்களின் வாழ்க்கையுடன் உங்களை ஒப்பிடாதீர்கள்

இது அடுத்த விடயம். பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் கனவுலகில் வாழ்பவர்களை பார்த்து “ஐயோ என் வாழ்கையின் நிலை, எனக்கு அப்படியொரு வாழ்க்கை இல்லையே” என்று நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

முதலில் சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் பார்க்கும் படத்திலோ அல்லது வீடியோவிலோ உள்ள ஒருவர் செய்யும் செயலை நீங்கள் செய்தால்,  உண்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்களா?

மகிழ்ச்சி கிடைக்கும் என்றிருந்தாள் அதனைப் பெற்றுக் கொள்ள உழையுங்கள், பணத்தை சேமியுங்கள், முயற்ச்சி செய்யுங்கள். அதை விடுத்து அடுத்தவர்கள் உண்பதையும் குடிப்பதையும் பயணம் செய்வதையும் பார்த்து மனம் தளராதீர்கள்.

அவ்வாறு கவலைபடுபவர் என்றால் நீங்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது நல்லது. மனிதர்களை மனிதர்களாகப் பாருங்கள்.

அப்படியின்றி தான் விரும்பியதையே விரும்புபவர்கள், தான் விரும்பும் கட்சிக்கு வாலாட்டுபவர்கள், தனது மதத்தைப் பின்பற்றுபவர்களது நல்லதை பார்ப்பதற்கும் அடுத்தவர்களை எதிரிகளாக பார்பதாலும் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் நுழையும்.

    06. உங்களிடம் உள்ளதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள்.

பலர் தன்னிடம் இல்லாத விடயங்கள் பற்றி யோசித்து யோசித்து எவ்வளவு தூரம் கவலைப்படுகிறார்கள் என்றால் தன்னிடம் உள்ள மதிப்புமிக்க பொருட்களின் பெறுமதியைக் கூட அவர்களால் உணர முடியாதுள்ளது.

தன்னை நேசிப்பவர்கள், மதிப்புமிக்க உறவுகள், சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாக சுயமரியாதையுடன் வாழ்வதற்கு கிடைத்துள்ள திறமை, தனக்கு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு கிடைத்துள்ள விடயங்களைப் பற்றி எந்தவித அக்றையுமின்றி தனக்கு கிடைக்காத விடயங்களைப் பற்றியே சதா நினைத்து கவலைப்பட்டுக் கிடப்பார்கள்.

ஒரு சின்ன வீடு, போதுமானளவு உணவை கூட கனவாகக் கொண்ட பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், கிடைத்த சின்ன சின்ன விடயங்களுக்கு கூட நன்றியுணர்வுடன், மகிழ்ச்சியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். இதை தினசரி தியானமாக செய்வதால் கூட எந்த பாதிப்பும் இல்லை.

    07. எல்லாவற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

எதிர்காலத்திற்கான திட்டங்களுடன் வாழ்வது நல்லது. ஆனால் எந்த நேரத்திலும் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்து, நம் வாழ்க்கை தலைகீழாக மாறக்கூடும் என்பதையும் மனதில் இருத்திக் கொள்வது நல்லது (அதற்காக அததைப் பற்றியே நினைத்து நினைத்து கவலைப்பட வேண்டாம் உலகத்தின் இயல்பு அப்படித்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்).

இவ்வுலகில் உள்ள அனைவரும் நாம் விரும்பியவாறு வாழ்வார்கள், நாம் எதிர்பார்ப்பது போல் அனைத்தும் நிறைவேறும் என்ற குருட்டு நம்பிக்கையில் தொங்கிக் கொண்டிருக்காதீர்கள்.

உங்கள் வழியில் வரும் எதையும் நீங்கள் அதிகபட்ச பலத்துடன் எதிர்கொள்வீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள்.

அனைத்தையும் 100 சதவீதம் வெற்றிகரமாக முடித்து விடுவேன் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் கிடைத்த இடத்தில், ​​இழந்த அந்த ஒரு சதவிகிதத்தை நினைத்து வேதனைப்படாதீர்கள்.

தோல்வியடைந்தாலும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கலாம். உலகில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் ஒரு முறையாவது தோல்வியடைந்தவர்களே.

    08. சரியான உணர்வுடன் நிகழ்காலத்தில் வாழுங்கள்

அநாவசியமான சிந்தனைகள் கட்டுக்கடங்காமல் செல்வதற்கு  தான் வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தைப் பற்றிய உணர்வின்றி வாழ்வதும் ஒரு காரணமாகும்.

சாப்பிடும் போதும், குடிக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், குளிக்கும் போதும் பல சிந்தனைகள் தோன்றும். சில எண்ணங்கள் அழகானவை. அவற்றை அனுபவிக்கவும்.

ஆனால் உங்கள் எண்ணங்கள் உங்களை தேவையில்லாமல் மோசமான பாதாள உலகத்திற்கு அழைத்துச் செல்வதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக நீங்கள் சுயஉணர்விற்கு வாருங்கள்.

உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம். உங்கள் நாசி வழியாக ஒரு ஆழமான மூச்சை எடுத்து உங்கள் முழு கவனத்தையும் அதில் செலுதுங்கள் பின்னர் உங்கள் வாய் வழியாக மூச்சை விடுங்கள். இந்த பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்யவும். இதன் மூலம் நீங்கள் நிகழ்காலத்தில் சரியான உணர்வை அடையலாம்.

தேவையற்ற எண்ணங்கள் மற்றும் சோகங்களைத் தவிர்க்க உதவும் சில சிறிய குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு இங்கு வழங்கியுள்ளோம். 

இந்த விடயங்களை முயற்சித்துப் பாருங்கள். இதன் மூலம் உங்களுக்கு ஒரு நிவாரணம் கிடைக்கவில்லை எனில் தொடர்ந்தும் தேவையில்லாமல் சிந்தித்து, எதிர்மறை எண்ணங்களால் அவதிப்பட்டால், தயங்காமல் உளவியலாளரின் உதவியை நாடுங்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

    Reezah Jesmin

வாழ்க்கையை வெல்ல 5 அடிப்படை விஷயங்கள்

Follow us to get more useful articles like this soon. Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply