நல்ல குழந்தைகள் உருவாக 12 வழி முறைகள்

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழி முறைகள்
உறவினரது வீட்டில்.., அங்கு உறவினரோடு அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேசையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது.
அப்பொழுது அங்கே அந்தத் தந்தைக்கும் அவரது குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்… அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை மீண்டும் அந்த உறவினரோடு பேசிக் கொண்டிருக்கின்றார்.

சற்று நேரத்தின் பின்னர் தந்தை பார்க்கின்றார்.., அந்தக் குழந்தை மீண்டும் மேசையின் அந்த தட்டுகளை கையில் எடுத்து விளையாட ஆரம்பிக்கின்றது.., பின்னர் மறுபடியும் அந்தத் தந்தை.., ஹேய் அதைத் தொடாதே.., அதை எடுக்க வேண்டாம் என்று சொல்றேன்ல..,

என்று அதட்டி விட்டு மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து மீண்டும் திரும்பிப் பார்க்கின்றார்.., அந்தக் குழந்தை மீண்டும் மீண்டும் அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

அந்தத் தந்தை அதனைப் பார்த்து எதுவுமே கூறாமல் மீண்டும் தனது பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் பல இடங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு நாம் உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இருக்காமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது போன்ற சூழ்நிலைகளில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதை கண்டித்து தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது யாதுமறியாக் குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், அடுத்து, குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க-முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் பெற்றோர்கள் நல்லொழுக்கம் உள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும், சமூகத்தின் எதிர்பார்ப்பும் இதுவாகும்.

பெற்றோர்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள், பண்புகள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும், வளர்க்க வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை, வழிகாட்டல் இருக்கின்றது.

அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமும், நற்பண்புமுடைய குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தது போன்றெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட ஆக்கபூர்வமான அடிப்படையில் அவர்களை வழி நடாத்தும் பொழுது, நல்ல பல விளைவுகள் ஏற்படும்.

    01. இளமையில் கல்வி

இந்த வயதில் அவர்களுக்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் நம்மால் அன்றாடம் காண முடியும்,

ஆனால் குழந்தைகளின் அந்த இளமைப் பருவம் தான் அவர்களுக்கு சிறப்பாகக் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களுக்கு நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது, செயல்படுவது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம்,

குழந்தைகளின் அந்த ஆரம்ப நாட்களாகும். அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஒரு முறை அறிமுகப்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ் நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

    02. குழந்தைகளுக்கு கோபமான நிலையில் உத்தரவிடாதீர்கள்

நீங்கள் உங்களது குழந்தையுடனோ அல்லது சாதாரணமாக வேறு ஏதேனும் காரத்திற்காக நீங்கள் கோபமான நிலையில் இருக்கின்றீர்கள்.

அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்துவதற்கு நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நீங்கள் நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் இப்போது பிரச்னை அதுவல்ல..,

நீங்கள் எந்த நிலையில் அவர்களுக்கு அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் நிதானமாக சிந்தித்து அதனைத் தொடருங்கள்.

    03. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது, வழிநடாத்துவது என்பது குறித்த திட்டத்தை கணவன்-மனைவி இருவரும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து முறையாக நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும்.

ஒருவர் கறாராகவும், கண்டிப்பானவராகவும் இன்னொருவர் இலகுவாகவும், மென்மையாகவும் நடந்து கொண்டால், இருவருக்கும் இடையில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும்.

பெற்றோர்களில் கண்டிப்பானவர் ஏதேனுமொன்றை மறுக்கின்ற பொழுது, அமைதியாக அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

இருவரும் ஒரு விடயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை சரியான முறையில் நெறிப்படுத்த முடியும்.

பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்தும் இன்னொருவர் சம்மதிக்காமலும் விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது அக் குழந்தைகளுக்கு கோபமும், வெறுப்புணர்வும் ஏற்படும்.

எனவே, இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைகளிடம் கூறுங்கள்.

பின்னர், குழந்தைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் அந்த விடயத்தைப் பற்றி இருவரும் கலந்தாலோசனை செய்து முடிவெடுங்கள்.

முக்கியமாக குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனைகளில் ஈடுபடாக் கூடாது. அத்துடன் எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருக்க வேண்டும்.

    04. உறுதியாக இருத்தல்

பெற்றோர்கள் தமது கொள்கைகளில், நடவடிக்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். தமது எதிர்பார்ப்புகளை சட்ட திட்டங்களை மற்றும் அடிக்கடி மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும்.

உதாரணமாக, வீட்டுச் சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை எழுத வேண்டாம் என்று இன்றைக்கு தடுத்து, நாளைக்கு அதை தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது,

இப்படிப்பட்ட ஒரு நிலையற்ற சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவறில் எழுதினால் பெற்றோர்கள் கோபப்படுவார்களா, கண்டிப்பார்களா  என்ற குழப்பமும், புரிந்துணர்வின்மையும் குழந்தைகளிடத்தில் ஏற்பட்டு விடும்.

அதே போன்று உங்களது மனநிலைக்கும் உங்களது அவசியத்திற்கும் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும், வழிமுறைகளையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல.

இவ்வாறான நிலைமையில், ஏதேனும் ஒரு விடயத்தை குழந்தைகள் செய்வதற்கு ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதி அளிப்பீர்களா மாட்டீர்களா, இதை செய்தால் கோபமடைவீர்களா என்று குழந்தைகள் உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும்.

எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விடயத்தின் மீது அதனைச் செய்ய வேண்டாம் என்று தடுத்தால், அந்தத் தடை உத்தரவு எப்பொழுதும் நீடிக்க வேண்டும்.

அப்பொழுது தான் ஓகோ, இந்த காரியத்தை செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.

அப்படி என்றால் சூழ்நிலைகள் சந்தர்ப்பங்களுக்குத் ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா? என்றால், நிச்சியமமாக மாற்றிக் கொள்ளலாம்..,

ஆனால் நீங்கள் ஏன் முதலில் அனுமதி கொடுக்க மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அதற்கு அனுமதி கொடுத்தீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு பக்குவமாக விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும்.

இன்னும் அந்த விடயத்தை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி தௌிவுபடுத்தி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதியான மனப்பான்மை இல்லை என்றால், அதுவே குழந்தைகளினது கட்டுப்பாடற்ற செயற்பாடுகளுக்கு ஆணி வேராகும்.

    05. குழந்தைகளிடம் பொய் கூறாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காகவும் அவர்களை சமாளிப்பதற்காகவும் பொய்களை கூறாதீர்கள், நீங்கள் அவர்களுக்கு வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக நீங்கள் இருந்தால்.., நாளடைவில் உங்களது வார்த்தைகளுக்கு அவர்கள் மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், அதன் பின்னர் நீங்கள் உண்மையையே பேசினாலும் கூறினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அல்மாரியின் மேல் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுக்க முயற்சிக்கின்றது ஆனால் அதனை முறையாக எடுக்க குழந்தைக்கு இயலாது..,

எனும் பொழுது சற்று பொறுமையாக இருங்கள்.. இதோ என்னுடைய இந்த வேலைகளை முடித்து விட்டு வந்து அதனை எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் குழந்தைக்கு கூறுகின்றீர்கள்.

அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்து விட்டு வாக்குறுதியளித்தது போல் உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை, வாக்குறிதியை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் தானாக அல்மாரியின் மேல் உள்ள பொருளை எடுக்க முயற்சிக்கும்.

அதனை எடுப்பதற்கு இயலாத நிலையில் குழந்தை கீழே விழுந்து விட்டாலோ அல்லது பொருட்கள் தவறிக் கீழே விழுந்தாலோ, பின்பு அந்தக் குழந்தை மீது கோபத்தை காட்டி பயன் என்ன?

ஒன்று, அந்த பொருளை இப்பொழுது எடுக்க முடியாது. வேறு ஏதாவது வேலைகளைப் பாருங்கள், பின்பு அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறியிருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு ஏதாவது வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும்.

ஆனால், சற்று பொறுமையாக இருங்கள்.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்று நேரம் காத்திருந்து விட்டு நீங்கள் கூறியபடி  அங்கு வரததால் அந்தக் குழந்தை மீண்டும் முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

எனவே இங்கு தவறு உங்கள் மீது தான்.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இது போல் நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக, கண்டிப்பாக எதனைச் சொன்னாலும், அக் குழந்தை அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாது என்பதனை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு விடயத்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், நீங்கள் கோபப்படுவீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

    06. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்

குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவ்வாறெனின் குழந்தை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அடம் பிடித்து அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக எதையாவது கொடுத்து சமாதானப்படுத்த முயற்சிக்காதீர்கள்.

பின்னர் ஒவ்வொரு முறையும் குழந்தை தான் விரும்புவதைப் பெறுவதற்காக அழ ஆரம்பித்து விடும். அழுவதன் மூலம் எதனையும் பெற முடியாது, எதுவும் கிடைக்காது என்பதனை குழந்தை அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும், புரண்டாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.

அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான், குழப்பம் தான் என்கிறீர்களா.., இங்கு பொறுமை என்பது மிகவும் அவசியம்.

எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது, எதுவும் கிடைக்காது என்பதைக் கற்றுக் கொண்டு புரிந்து கொண்டு விட்டதோ, அதன் பின் வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ் நாள் இனிமை. தேர்வு உங்களது கையில்..!

    07. தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

அறியாமையின் காரணமாக, மறதியின் காரணமாக தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறு செய்து விட்டால் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனது கட்டளையுமாகும்,

அது சக மனிதனுக்குச் செய்த தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறை கட்டளையை மீறக்கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..!

மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதை குழந்தைகள் முறையாக கற்றுக் கொள்ளும் பொழுது, தவறுகள் நடந்தால் அதற்காக நாம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற உணர்வும், பண்பும் அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

    08. மன்னித்து விடுங்கள்

குழந்தை ஒரு தவறை செய்து விட்டது, அந்த தவறை உணர்ந்து அக் குழந்தை தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது , உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், தான் மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே அக் குழந்தையிடம் சொல்லுங்கள்,

நீங்கள் செய்யும் உங்கள் தவறுகளை அல்லாஹ் (ﷻ) மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறு செய்த குழந்தை மன்னிப்புக் கேட்பது என்பது அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை புரிந்து, உணர்ந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் (ﷻ) மன்னிப்பவனாக இருக்கின்றான், அவன் மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் உங்கள் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பை கையில் எடுக்காதீர்கள்.

அவர்கள் மன்னிப்புக் கேட்டு விட்டால் அழகிய முறையில் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன், உன் மீது அன்பாக இருக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து உண்மையக வர வேண்டும்.

இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் இடையிலான உறவு மேலும் வலுவடையும்.

    09. உங்களது தவறுக்கும் நீங்கள் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள் என்றால், நான் பெற்றவன், வயதில் மூத்தவன் பிள்ளைகளிடம் எப்படி நான் மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள்.

தவறு செய்தது யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையிடமாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கேளுங்கள், அதுவே நீதிக்கும் நியாயத்திற்கும் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

   10. இளமை பருவத்திலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்

குழந்தைகளின் சிறு பிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, மலக்குமார்கள் பற்றி நபிமார்கள், ஸஹாபாக்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை பற்றி இஸ்லாமிய வரலாற்றை பற்றி சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

அது போன்ற சிறப்பான உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும் படி அறிவுறை வழங்குங்கள்.

இறைத்தூதர்  முஹம்மத் நபி (ﷺ) அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர், உமர், உதுமான், அலி (رضي الله عنهم) மற்றும் ஏனைய நேர்வழி பெற்ற ஸஹாபாத் தோழர்கள் (رضي الله عنهم) பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் மனதை பண்படுத்த வல்லது.

அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை நேரவழி பெற பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.

இன்றைக்கு நம் குழந்தைகள் சுபர்மான், சக்திமான், ஸ்பைடர்மான் போன்ற கற்பனைக் கதைகள் மூலம் பாதிக்கப்படுகின்றன.

அவர்களைப் போல அமானுஷ்யமான, நடைமுறை சாத்தியமற்ற வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கற்பனை செய்து கனவு காண்கின்றனர்.

அதனால் தான் சக்திமான் போல மாடியிலிருந்து குதித்து சகாசம் செய்யப் பார்க்கின்றனர். சக்திமான் அல்லது சுபர்மான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை இவ்வாறு மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது.

இது போன்ற கற்பனைக் கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று தலைவர்களின் உண்மை வாழ்வும் வரலாறும் படிப்பினை மிக்கதாகும். இன்னும் அவர்களின் வரலாற்றிலிருந்து நீங்களும் கூட படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

    11. நல்லொழுக்கம், நற்பண்புகளைக் கற்றுக் கொடுங்கள்

உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்கம்,  நற்பண்புகள் மிக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம், நற்பண்புகள் சார்ந்த இஸ்லாமிய புத்தகங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள், படித்துக் கொடுங்கள்.

இப்பொழுது பாடசாலை ஆண்டு விழாக்கள், விஷேட நிகழ்சிகள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆட்டம் போடும் கலாச்சாரத்தைப் பாடசாலைகளில் கற்றுக் கொடுக்கின்றார்கள்.

அறுவறுக்கத்தக்க சினிமாக்களில் வேஷம் போடும் கூத்தாடி நாயகனும், கூத்தாடி நாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் கீழ்தறமான, அசிங்கமான அங்க அசைவுகளையும், நடனங்களையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து ஆசிரியர்களும் பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

இத்தகைய அநாச்சாரங்களை முஸ்லிம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட யாரும் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான அநாசாரமான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்ற அறிவுபூர்வமான போட்டிகள் அல்லது விளையாட்டு சம்பந்தமான போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.

    12. கீழ்ப்படிதல்

பெற்றவர்களுக்கு கீழ்படிதல் வேண்டும் என்பது குழந்தைகள் மீது இறைவன் கடமையாக்கியதொன்று. இதற்கான பயிற்சியை தாயும், தந்தையும் இணைந்து வழங்க வேண்டும். ஆனால் இன்று குடும்பங்களில் நடப்பது வேறு..!

தந்தையை கரடி போல அல்லது பயங்கரமான கொடூரனைப் போல் பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., அவரிடம் சொல்லி உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவதும், பயம் காட்டுவதும் தாய்மார்களது வாடிக்கையாகி விட்டது. இது தவறான வழிமுறையாகும்..!

முதலாவது, குழந்தை எப்பொழுது கீழ்ப்படியாமல் இருப்பதைக் காட்டுகின்றதோ, கீழ்ப்படிவது எப்படி என்பதைக் அப்பொழுதே அக் குழந்தைக்கு அழகிய முறையில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

தாமதப்படுத்தி விடக் கூடாது. தாமதப்படுத்தப் படும் பொழுது குறிப்பிட்ட அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலைமையில், அதற்காக அவர்களைத் கண்டிக்கும் பொழுது தான் எதற்காக கண்டிக்கப்படுகின்றோம் என்பது அக் குழந்தைக்கு விளங்காது.

இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை குழந்தைக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்,

அக் குழந்தையும் தன் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கும், கண்டிப்பதற்கும் தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்தி, அறிவுறை வழங்க முனையும் பொழுது, இருவரினது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கமும் பக்குவமும் குழந்தைக்கு ஏற்படும்.

மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும், அல்லது தண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற நிலை காணப்பட்டால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை மட்டும் குழந்தைகள் நேசிப்பதில்லை,

மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாக வெறுப்புணர்வுடன் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியா குணம் வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்கள் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது.

பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நடக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

Subscribe to our Sarinigar site to get more useful articles like this soon.
 Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

One thought on “நல்ல குழந்தைகள் உருவாக 12 வழி முறைகள்

Leave a Reply