புதுடெல்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை பாதிக்கப்பட்டன.
கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற முன்னணி கட்டண செயலிகள் மூலம் கட்டணங்கள் செலுத்த முடியாதததால், வாடிக்கையாளர்களும், வியாபாரகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுபோன்ற குறைபாடுகளை கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் என்ற வலைதளத்தின்படி, பகல் 12.56 மணி வரை 2,147 புகார்கள் பதிவாகியுள்ளன. 80 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களின் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் இருந்துள்ளனர்.
இன்றைய நாளின் தொடக்கத்தில் 1,168 புகார்கள் பதிவாகியிருந்தன. இது பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலிழப்பு மூலம், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடாக் மகேந்திரா வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
இதனிடையே இந்த வாரத்தின் தொடக்கத்தில், என்பிசிஐ வெளிநாடுகளுக்கான யுபிஐ பரிமாற்றத்தில் முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. பணம் செலுத்துவோரின் அடையாளத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவுக்கு வெளியே செய்யப்படும் பணப்பறிமாற்றத்துக்கு க்யூஆர் கோடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மார்ச் 26-ம் தேதி நாடு முழுவதும் பரவலாக யுபிஐ சேவை பாதிக்கப்பட்டது. அதேபோல், ஏப்.2-ம் தேதியும் சேவைகள் பாதிக்கப்பட்டன.