நோன்பாளிகளின் கவனத்திற்கு!

நோன்பாளிகளின் கவனத்திற்கு!
• நிய்யத்து வைத்தல் : –

எல்லாச் செயல்களும் எண்ணத்தின் (நிய்யத்) அடிப்படையிலே அமையும் என நபி (ﷺ) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)

நிய்யத் என்பது மனதினால் எண்ணுதல் என்பது தான் பொருளாகும். மக்கள் இன்று செய்வது போன்று வாயால் மொழிவது கிடையாது.

• எப்போது நிய்யத்  வைக்க வேண்டும்?

கடமையான நோன்பை நோற்பவர், பஜ்ருக்கு முன்பே இன்று நான் நோன்பு நோற்கின்றேன் என்று மனதில் உறுதி கொள்ள வேண்டும்.

நபிலான நோன்பாக இருந்தால் காலையில் தாமதித்துக் கூட நோன்பை மனதில் என்னி நோன்பிருக்க முடியும். அதற்கு ஹதீஸில் அனுமதி உண்டு. அதே நேரம் பஜ்ர் நேரத்திலிருந்து ஏதும் உண்ணாமலோ, பருகாமலோ இருந்திருக்க வேண்டும்.

‘ஒரு நாள் நபி (ﷺ) அவர்கள் காலையில் என்னிடம் வந்து, உண்பதற்கு ஏதேனும் உள்ளதா? எனக் கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம். அப்படியாயின் நான் இன்று நோன்பு வைத்துக் கொள்கிறேன் எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம்: நஸயி

• ஸஹர் உணவு: –

நீங்கள் ஸஹர் செய்யுங்கள்: ஏனெனில் அந்த நேரத்தில் பரக்கத் உள்ளது என நபி (ﷺ) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: புகாரி

ஸஹர் உணவை தாமதப்படுத்தி, நோன்பு திறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையின் பால் இருக்கிறார்கள் என நபி (ﷺ) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: அஹ்மத

ஸஹர் செய்யும் விடயத்தில் மக்களிடம் சில தவறுகள் நடக்கின்றன. உதாரணமாக, மூன்று, நான்கு மணிக்கே சாப்பிட்டு விட்டு சுப்ஹுத் தொழுகை கூட இல்லாமல் அப்படியே தூங்கி விடுகின்றனர்.

இது உண்மையில் மேலுள்ள சுன்னாவை விடுவதால் ஏற்படும் தவறாகும். ஏனெனில் சுப்ஹ் தொழுகைக்கு அதான் கூறப்படும் வரை உண்ணலாம் பருகலாம்.

அதே போன்று நோன்பு திறப்பதற்கு சில நிமிடங்கள் தாமதிப்பதும் சுன்னாவுக்கு முரனானதாகும்.

• நோன்பு திறக்கும் போது: –

நோன்பு திறந்த பின்னர்,

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

தஹபள் லமஊ வப்தல்ளதில் உரூவ்கு வஸபதள் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்”  என்று கூற வேண்டும்.

பொருள்: தாகம் தீர்ந்தது, நரம்புகள் குளிர்ந்தன அல்லாஹ் (ﷻ) நாடினால் கூலி கிடைத்து விடும். ஆதாரம்: அபூதாவுத்.

• நோன்பு திறக்கச் செய்தவருக்காக செய்யும் பிரார்த்தனை: –

‘அப்தர இந்த குமுஸ்ஸாயிமுன் வஅகள தஆமகுமுள அப்ரார் வஸல்லத் அலைகுமுள் மலாயிகா‘

பொருள்: உங்களிடம் நோன்பாளிகள் நோன்பு திறந்தனர், நல்லவர்கள் உங்களது உணவுகளை உண்டனர், மலக்குகள் உங்களுக்காக (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தனர். ஆதாரம்: அபூதாவுத்.

• நோன்பாளிகள் கவனத்திற்கு: எமது நோன்புகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா?

பொய் சொல்வது, புறம் பேசுவது, கோள் சொல்வது, பழி சுமத்துவது… போன்ற அனைத்து தீமையான, தவறான காரியங்களை விட்டும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

யார் பொய் சொல்வதையும், அவற்றை நடைமுறைபடுத்துவதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்துடனும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை , என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, அஹ்மத், திர்மிதி.

இந்த ரமழான் மாதம் நாம் நல்லடியார்களாக வாழ்வதற்காக அல்லாஹ் (ﷻ) நமக்கு வருடா வருடம் தரும் ஒருமாத பயிற்சியாகும் . ரமழானைப் போலவே ஏனைய காலங்களிலும் பேணுதலுடன் பயபக்தியுடன் வாழ அல்லாஹ் (ﷻ) நம் அனைவருக்கும் அருள் செய்வானாக!

• நோன்பை விட அனுமதியுள்ளவர்கள்: –

  1. தள்ளாத வயதுடையவர்கள்
  2. தீராத நோயுள்ளவர்கள்

இவர்களுக்கு விடுபடும் ஒவ்வொரு நோன்புக்கும் பரிகாரமாக ஒரு ஏழை வீதம் உணவளிக்க வேண்டும்.

• நோன்பை தற்காலிகமாக விட அனுமதியுள்ளவர்கள்: –

  1. பிரயாணிகள்.
  2. மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேற்று (நிபாஸ்) விலக்குடைய பெண்கள்.
  3. கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்.
  4. தற்காலிக நோயாளிகள்.

இவர்களுக்கு நோன்பை விட அனுமதி உண்டு. எனினும் பின்னர் விடுபட்ட நோன்புகளைக் கணக்கிட்டு கழாச் செய்ய வேண்டும்.

• நோன்பை முறிக்கக் கூடியவைகள்: –

  1. வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல்.
  2. நோன்புடன் பகல் நேரத்தில் உடலுறவு கொள்ளுதல் (இவர்களுடைய நோன்பு முறிந்து விடும். இதற்கு குற்றப்பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அதற்கு முடியாத போது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு பிடிக்க வேண்டும். அதுவும் முடியாத போது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.)
  3. மாதவிடாய் அல்லது மகப்பேறு இரத்தம் வெளியாகுதல்.
  4. வேண்டும் என்றே வாந்தி எடுத்தல். (தானாக வாந்தி வந்தால் நோன்பு முறியாது)
  5. மதம் மாறுதல் (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக)

• பின்வரும் விடயங்களால் நோன்பு முறியாது: –

  1. தன்னை அறியாமல் மறதியில் உண்ணுதல், பருகுதல். (புகாரி)
  2. குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்தல். (புகாரி)
  3. கடும் வெப்பத்தில் குளித்தல். (அஹ்மத், அபூதாவுத்)
  4. நறுமணம் வாசனை சோப்புகளை பயன்படுத்துதல்.
  5. பற்பசை உபயோகித்து பல் துலக்குதல்.
  6. வாய் மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வெளியாகுதல்.
  7. இரத்தம் எடுத்தல், நோய் காரணமாக அவசியம் ஏற்படின் ஊசி மருந்தேற்றல் போன்றவை. (சக்திக்காக ஊசி வழியாக ஏற்றப்படும் குளுகோஸ் போன்றவற்றினால் நோன்பு முறிந்து விடும்)
  8. சுய நாட்டமின்றி ஸ்கலிதமாகுதல்.
  9. தொண்டைக் குழியை அடையாதபடி உணவை ருசி பார்த்தல்.

இது போன்ற விடயங்களால் நோன்பு முறியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

• பின்வரும் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்: –

  1. ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்கள்.
  2. ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன்.
  3. ஒவ்வொரு மாதமும் அய்யாமுத் தஷ்ரீக் என அழைக்ககப்படும் 13, 14, 15 ஆகிய தினங்களில்.
  4. துல்–ஹஜ் மாதம் ஒன்பதாம் நாளாகிய அறபாவுடைய தினம்.
  5. முஹர்ரம் மாதம் 9, 10 ம் நாட்களில் நோற்கப்படும் ஆஷுரா எனப்படும் நோன்புகள்.

• நோன்பு நோற்பதற்கு தடை செய்யப்பட்ட நாட்கள்: –

  1. சந்தேகத்திற்கு உரிய நாள். (ஷஃபான் மாதம் 30 ம் நாளன்று சந்தேகத்துடன் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது)
  2. நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் தினங்கள்.
  3. அய்யாமுத் தஷ்ரீக் என்று அழைக்கப்படும் 11, 12, 13 ம் நாட்கள். (தமத்துஃ மற்றும் கிரான் வகையான ஹஜ்ஜை நிறைவேவற்றுபவர்களுக்கு பிராணிகளை அறுத்துப் பலியிட வசதியில்லாவிட்டால் இவர்கள் அத்தினத்ங்களில் நோன்பு நோற்பர்)
  4. குறிப்பாக வெள்ளிக்கிழமை தினத்தில் மட்டும் நோன்பு நோற்றல்
  5. கணவனது அனுமதியின்றி பெண்கள் நபிலான நோன்புகளை நோற்றல்.

ஆகிய சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்பது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த இரு பக்கங்களில் முக்கியமான சில செய்திகள் மட்டும் தொகுத்து சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்கள் தேவைப்படும் போது மார்கத்தை கற்றறிந்த ஆலிம்களை அனுகி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

யா அல்லாஹ்! உண்மையான இறையச்சத்துடனும், உன்னிடம் நன்மையை எதிர் பார்த்தவர்களாகவும் இந்த ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதிகமதிகம் நற்காறியங்களைச் செய்து பாவக்கறைகளிலிருந்து நீங்கியவர்களாக மாறுவதற்கு நீயே எம் அனைவருக்கும் அருள்பாளிப்பாயாக!!

Assalamu Alaikkum!
Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply