ரமளான் வந்துவிட்டால் நம்மில் பலர் “நோன்பும் வந்து விட்டது” என்பார்கள். ஷவ்வால் மாத தலைப்பிறை கண்டவுடன் “நோன்பும் முடிந்துவிட்டது” என்பார்கள்.
ஆம்! அவ்வாறு “வந்துவிட்டது”, “முடிந்துவிட்டது” என்று எத்தனை எத்தனை ரமளான்களை நாம் வழியனுப்பியிருப்போம்! எதிர்வரும் ரமளானும் அவற்றுள் ஒன்றாக கடந்துவிடத் தான் போகின்றது. சந்தேகமே இல்லை. எனினும், நாம் எங்கே செல்லப் போகிறோம் என்பதே சந்தேகம்!
ரமளான் வெறுமனே வந்துவிட்டுச் செல்வதற்காக வருகின்ற ஒரு மாதம் அல்ல. ரமளான் எங்களை அழைத்துக் கொண்டு செல்வதற்காக வருகின்ற மாதம். எனினும் அது எம்மை அழைக்கவில்லை போலிருக்கின்றது.
அல்லது அதன் அழைப்பு எமது காதுகளுக்கு கேட்கவில்லை போலிருக்கிறது. அதனால் தான் ரமளான் எம்மை விட்டுச் செல்கின்ற போது “ரமளானும் முடிந்து விட்டது!” என்கின்றோம். ஏதோ அவசர அவசரமாக வந்துவிட்டுப் போன ஒரு விருந்தாளியைப் போல! விருந்தாளிகள் தான் எங்களை அழைத்துக் கொண்டு போக வருவதில்லையே!
ரமளான் என்பது ஒரு விருந்தாளியல்ல. விருந்தாளியாக வந்தால்தான் “வந்தார், போனார்” என்று கூறி கதையை முடித்து விடுவோம். ரமளான் ஒரு விருந்தாளியல்ல. ரமளான் என்பது ஓர் அழைப்பாளி! எங்களுக்கு ஓர் அழைப்பை விடுக்க வந்த அந்த அழைப்பாளரை வந்தார் போனார் என்று கூறித் தட்டிக்கழிக்க முடியாது.
அழைப்பாளர் வந்தார் எனில், ஏன் அவர் வந்தார்? அவர் கொண்டு வந்த அழைப்பு எது? கொண்டு வந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா?
அவரது அந்த அழைப்பு எந்த இலக்கை நோக்கியதாக உங்களை முன்னேறச் சொல்கிறது? அதற்காக நீங்கள் செய்ய வேண்டிய ஆயத்தங்கள், செயல்படுத்த வேண்டிய பயிற்சிகள் பற்றி அந்த அழைப்பாளர் உங்களிடம் என்ன கூறினார்? போன்ற கேள்விகள் அழைப்பாளரின் இந்த வருகைக்குப் பின்னால் இருக்கின்றது.
ரமளானை வரவேற்று வழியனுப்பி வைப்பவர்கள் மேற் குறிப்பிட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை அறியாது “ரமளானும் முடிந்து விட்டது. அது முடிந்த அவசரத்தைப் பாருங்களேன்” என்று கூறக் கூடாது.
அவ்வாறாயின் ரமளான் விடுக்கும் அந்த அழைப்பு என்ன? பதிலை அறிந்து கொள்ள நபி (ﷺ) அவர்களின் காலம் வரை சற்று பின்னோக்கிச் செல்வோம்.
நபித்துவத்திற்கு பின்னர் பதினைந்து வருடங்கள் உருண்டோடி விடுகின்றன. இக்காலப்-பகுதியில் நபி (ﷺ) அவர்களின் பயணம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி ஒரு ஸ்திரமான தன்மையை அடைகின்றது.
மக்காவையும், தாயிபையும் கடந்து மதீனாவை நபி (ﷺ) அவர்கள் அடைந்திருக்கின்றார்கள். அல்லாஹ்வின் ஆட்சிப் பீடமாகிய வானுலகத்தை (மிஃராஜின் போது) பார்த்த நபி (ﷺ) அவர்கள், இப்போது அவனது ஆட்சிக்கு உரிய ஒரு இடத்தை மண்ணுலகில் (மதீனாவில்) காண்கிறார்கள்.
எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கள் சூழ மக்காவில் இருந்தவர்கள் இஸ்லாத்தின் காவலர்கள் (அன்சாரிகள்) புடைசூழ மதீனாவை ஆளுகின்றார்கள்.
இதுவரை கொள்கை வடிவில் முன்வைக்கப்பட்ட இஸ்லாம் இப்பொழுது நடைமுறை வடிவம் பெறத் துவங்கியது. இஸ்லாம் மார்க்கம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடுமோ என்ற அச்சம் நீங்கி, அது நிலையாக முளைத்தே தீரும் என்ற நம்பிக்கை இப்போது துளிர்விட்டிருக்கின்றது.
தனிமனிதர்களாக (மக்காவில்) சிதறி வாழ்ந்த முஸ்லிம்கள், ஒன்றுபட்ட ஈமானிய சமூகமாக (மதீனாவில்) இன்று மாறிவிட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் அழிவின் விளிம்பில் இருந்த மனித சமூகத்திற்கு விடுதலை மற்றும் விமோசனத்திற்குமான அத்திவாரம் போடப்பட்டாகி விட்டது.
முஸ்லிம் சமூகம் இப்போது உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறது. செல்வமும், செல்வாக்கும், ஆட்சி அதிகாரமும் அந்த சமூகத்தைத் நோக்கி வரவேண்டிய காலம் வெகுதூரத்திலில்லை.
இந்த நிலையை ஒரு சமூகம் அடைந்து விட்டால் அதன் அடுத்த கட்டமானது ஏனைய சமூகங்களை தனது விருப்பு வெறுப்புகளுக்கு அடிபணிய வைப்பது தான்.
உலகில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஏனைய சமூகங்களின் வரலாறுகள் அவ்வாறுதான் காணப்படுகின்றன. ஒரே ஒரு சமூகத்தைத் தவிர அதுதான் அல்லாஹ்வின் தூதர் நபி (ﷺ) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்னர் அரேபிய மண்ணில் உருவாக்கிய குர்ஆனிய சமூகம்!
ஏனைய சமூகங்களிலிருந்து அந்தக் குர்ஆனிய சமூகம் அவ்வாறு வேறுபடக் காரணம் என்ன? அந்த சமூகம் தனது ஆட்சி-அதிகாரத்தில், தனது சொந்த விருப்பு-வெறுப்புகளையும், ஆசா-பாசங்களையும் அமர்த்தவில்லை என்பதுதான்!
இது எப்படி சாத்தியமானது! அது இவ் உலகில் சாத்தியமாகக் கூடியதா? உலக வரலாற்றில் ஆட்சிக்கு வந்தவர்களில் தமது ஆசாபாசங்களுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காதவர்கள். உலகில் இருக்கின்றார்களா!
அதிசயம் தான். ஆனால் அது உண்மை! எவ்வாறு என்கிறீர்களா?
நபி (ﷺ) அவர்கள் உருவாக்கிய அந்த குர்ஆனிய சமூகத்திற்கு பதினைந்து ஆண்டுகள் செல்கின்றது. அது நுபுவத்தின் பதினைந்தாம் வருடம். ஹிஜ்ரி 2 ஆண்டு.
பல்வேறு விதமான பயங்கரமான கட்டங்களை நிலைகளைத் தாண்டி வெற்றிப் படிகளில் முஸ்லிம் சமூகம் கால்பதித்திருக்கும் மதீனாவின் ஆரம்ப காலப் பொழுதுகள். மனித சமூகத்தின் விடுதலைக்கும், விமோசனத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டியதொரு சமுதாயத்தின் உதய நேரம். அல்லாஹ்வின் (ﷻ) கட்டளை வருகிறது.
“இறை விசுவாசிகளே! (நோன்பு நோற்கத் தயாராகுங்கள்).. உங்களுக்கு முன்பிருந்த கூட்டத்தார் மீது விதியாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்படுகிறது… (காரணம்?) நீங்கள் இறையச்சம் கொள்வதற்காக”
15 வருடங்களாக இறையச்சமின்றி வாழ்ந்த ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் (ﷻ) இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கவில்லை. அல்லது 15 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் நோன்பின் மூலம் அல்லாஹ் (ﷻ) அச்சமுதாயத்திற்கு இறையச்சத்தைப் போதிக்கின்றான் என்பதும் இதன் பொருளல்ல.
உண்மை யாதெனில், அல்லாஹ்வின் (ﷻ) மீதும் அவனது தூதர் நபி (ﷺ) அவர்கள் மீதும் அளவில்லா அன்பு கொண்ட சமூகமே அது. அந்த சமூகத்திற்கு இறையன்பு, இறையச்சம் போன்றவற்றைப் புதிதாகக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை.
எனினும் ஒரு சமூகம் பலவீனமாக இருக்கின்ற போது அதனை வழிநடாத்தத் தேவைப்படும் இறையச்சம் வேறு, பலம் பெற்று வரும் போது அச்சமூகத்தில் இறையச்சம் வகிக்கும் பங்கு வேறு.
பலவீனமாக இருக்கும் போது தன்னிடம் இருப்பவைகளை தியாகம் செய்து இஸ்லாத்தை வாழவைக்கும் துணிவை, ஆற்றலை வழங்குகின்றது இறையச்சம்.
பலத்துடன் இருக்கும் பொழுது வரம்புகளை மீறாமல், மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்காமல், அடக்குமுறைகளையும் பிரயோகிக்காமல் இஸ்லாமியப் பணியில் செயல்படும் ஆற்றலை வழங்குகிறது இறையச்சம்.
இது தான் இறையச்சம் உள்ள சமூகத்தின் நிலை. இறையச்சம் இல்லாத சமூகங்களின் வரலாறுகளைப் பொறுத்தவரை அவற்றின் வரலாறே வேறு!
அத்தகைய சமூகங்கள் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்படும் போதெல்லாம் நீதிக்குக் குரல்கொடுக்கும் சமூகங்களாக இருந்திருக்கின்து. எப்போது அந்த சமூகங்கள் ஆட்சிக்கு, அதிகாரத்திற்கு வருகின்றனவோ அப்போது அவை அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் துணைபோகின்றன. இதுவே வரலாறு.
இந்த வரலாறு முஸ்லிம்களாலும் மீட்டப்படக் கூடாது. முஸ்லிம்கள் “பலவீனத்திலும் நீதி, பலத்திலும் நீதி” என்ற கோட்பாட்டைக் கடைபிடிப்பவர்கள்.
ஆனால் அந்தக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் கடினமானதொரு சவாலுக்கு அவர்களும் முகம் கொடுத்தாக வேண்டும்.
மனிதப் பலவீனங்கள், ஆசாபாசங்கள், உணர்ச்சிகள், விருப்பு வெறுப்புகள் என்பவையே அந்த சவால்களாக காணப்படுகின்றது. மனிதர்கள் என்ற வகையில் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவருக்கும் இந்த சவால் பொதுவானதாகும்.
ஒரு சமூகம் பலவீனமான நிலையில் இருக்கும் போது இந்த சவாலை எதிர்கொள்வது சுலபம். காரணம் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள, பாதுகாப்பதற்காக அந்த மூகம் தனது ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புக்களையும் விட்டுக் கொடுக்கலாம்.
ஆனால் பலம் பெறும்போது, ஸ்தீரதன்மையை அடையும் போது ஏனைய சமூகங்களை தனது செல்வாக்கிற்கு, அதிகாரத்திற்கு அடிபணியவைக்கும் ஆற்றலைப் பெறுகின்ற பொழுது தமது ஆசைகளையும் விருப்பு வெறுப்புகளையும் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் அச்சமூகத்துக்கு இருப்பதில்லை.
இந்த இடத்தில்தான் தமது ஆசைகளை அடக்கி ஆளும் பயிற்சி ஒரு சமூகத்திற்கு இன்றியமையாததாக மாறுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் நபி (ﷺ) அவர்கள் உலகில் உருவாக்கிய கண்ணியமிக்க சமூகம் இது போன்ற தொரு கட்டத்தை நெருங்கிய வேளையில் தான் அல்லாஹ் (ﷻ) அந்த சமூகத்துக்கு ஆசைகளை நெறிப்படுத்தும், கட்டுப்படுத்தும் பயிற்சியை வழங்க நினைத்தான் போலும், அல்லாஹு அஃலம்.
இது அல்லாஹ்வின் (ﷻ) விருப்பங்களுக்கு விளக்கம் சொல்லும் முயற்சியல்ல. எனினும் இறை வழிகாட்டலில், உருவாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வரலாறையும், அதன் நடவடிக்கையையும் அவதானிக்கும் போது அல்-குர்ஆனின் ஒவ்வொரு வழிகாட்டலும் அந்தச் சமூகத்தின் எத்தகைய தேவைகளை பூர்த்தி செய்திருக்கின்றன? எவ்வாறான பிரச்சினைகளுக்கு, சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்கியிருக்கின்றன? எத்தகைய சவால்களையும், நிலமைகளையும் சூழல்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல்களையும் பயிற்சிகளையும் வழங்கியிருக்கின்றன? என்பவற்றைக் காணலாம்.
நோன்பு ஒரு சமூகத்தின் அவசியத்தை நிவர்த்தி செய்வதற்கும், ஒரு சவாலை எதிர்கொள்வதற்குமாக விதியாக்கப்பட்ட ஒரு கடமை என்று மட்டும் எடுத்துக் கொள்ளலாகாது. மாறாக அது ஒரு இபாதத்.
இருப்பினும் இஸ்லாம் மார்க்கம் விதித்துள்ள (இபாதத்துகள்) வணக்க வழிபாடுகள் மறுமையை மட்டும் இலக்காகக் கொண்டு உலகத்தைப் புறக்கணித்து விடும் இயல்பை கொண்டவைகளல்ல.
மேலும் உலக வாழ்க்கையில் இருந்து மனிதனைப் பிரித்து வேறுபடுத்தி அவனது ஆன்மாவுக்கு மட்டும் உரமூட்டும் விதமாகவும் அவை இல்லை.
மாறாக, இவ்வுலக வாழ்க்கையை நெறிப்படுத்தி அதனூடாக மனிதனுக்கு விமோசனத்தை, ஈடேற்றத்தை வழங்கும் நோக்கம் கொண்டவையாகவே இஸ்லாமிய (இபாதத்ததுக்கள்) வணக்க வழிபாடுகள் காணப்படுகின்றன.
அந்த அடிப்படையில் நோன்பின் உலகப் பயன்பாடுகளுள் ஒன்றை, ஸஹாபா சமூகத்தின் வரலாற்றில் நாம் பார்க்க முடியும்.
அந்த சமூகமானது பலவீனமாக இருந்த கட்டத்தைத் தாண்டி தாம் பலம்பெறும் நிலையை அடையும் போது, பல்வேறுபட்ட ஆசைகளுக்கு அடிமையாகி, தனது நோக்கத்தை, இலக்கை உலகில் மறந்து விடாதிருக்கும் ஓர் உன்னதமான பண்பாட்டுப் பயிற்சியின் தேவை, அவசியம் அதற்கிருந்தது.
அந்த காலகட்டத்தில்தான் அல்லாஹ் (ﷻ) அச்சமூகத்துக்கு நோன்பைக் கடமையாக்குகின்றான்.
நோன்பு அல்லாஹ்வின் (ﷻ) விருப்பங்களுக்காக மனிதன் தனது விருப்பங்களையும், ஆசைகளையும் தியாகம் செய்யும் ஆன்மிகப் பண்பாட்டுப் பயிற்சியை வழங்குகின்றது.
நோன்பின் மகத்துவத்தை உணர்த்தவந்த பின்வரும் ஹதீஸ் குத்ஸி இந்த உண்மையைப் புரியவைக்கிறது :
“ஆதமுடைய மகன் செய்யும் ஒவ்வொரு (நற்) செயலும் அவனுக்குரியது. நோன்பைத் தவிர. அது எனக்குரியது. அதன் கூலியாக நானே இருக்கிறேன். ஏனெனில் அவன் எனக்காக தனது உணவையும், குடிப்பையும், ஆசை களையும் விட்டுவிடுகிறான்.”
ஆம்! அல்லாஹ்வின் (ﷻ) ஆசைகளுக்காக தனது ஆசைகளையும், விருப்பங்களையும் தியாகம் செய்யும்போது தான் நோன்பின் மகத்துவம் அதி உச்சத்தை அடைகிறது.
இவ்வாறான ஆன்மிக பண்பாட்டுப் பயிற்சி வழிகாட்டல்கள் உலகை வழிநடத்தும் சமூகங்களுக்கு வழங்கப்படாத போதெல்லாம் அச்சமூகங்கள் உலகில் தமது அதிகாரத்தையும் பலத்தையும் பிரயோகித்து தமது ஆசைகளையும், விருப்பு வெறுப்புகளையும் நிறைவேற்றிக்கொள்ள முயலுகின்றன. இதன் விளைவாக உலகில் குழப்பங்களும், அக்கிரமங்களும் மலிந்து விடுகின்றன.
உலகின் இந்த நிலை மாற வேண்டும் என்றால் நோன்பு நோற்கும் கண்ணியமிக்க சமூகம் உலகை வழிநடாத்த வேண்டும்.
ஸஹாபாக்கள் சமூகம் உலகை வழிநடாத்தும் நிலையை நெருங்கிய போது தான் நோன்பை அல்லாஹ் (ﷻ) அந்த சமூகத்தின்மீது கடமையாக்கினான்.
ஆனால் இன்று நோன்பு நோற்கும் இஸ்லாமிய சமூகம் தனது கிராமத்தை, தனது சமூகத்தை ஏன் தனது வீட்டைக் கூட வழிநடாத்த முடியாமல் இருக்கிறது.
நோன்பு என்பது வெறும் பட்டினியும் தாகமுமல்ல. உலகில் நடக்க வேண்டிய இஸ்லாமிய தார்மீக பணிக்கும் அந்தப் பணியின் மூலம் உலகத்தில் ஏற்படவேண்டிய பரவளான, பாரிய சமூக மாற்றத்திற்கும் அவசியமான ஆன்மிக பண்பாட்டுப் பயிற்சியே நோன்பு!
நோன்பின் அழைப்பு புரிகின்றதல்லவா?
நோன்பு ஒரு புறம் சுவனத்திற்கான தனது அழைப்பை விடுக்கின்றது. அதனை நாம் இங்கு விளக்கமளிக்க எடுத்துக் கொள்ளவில்லை. அது பற்றிய போதுமான விளக்கங்கள், தகவல்கள் பரவலாகக் கிடைப்பதன் காரணத்தால்.
மறுபுறத்தில் நோன்பு உலகை வழி நடத்த வேண்டிய முஸ்லிம் சமூகத்தினது பாரிய பொறுப்பையும் அந்தப் பொறுப்பை தாங்கி செயல்படுவதற்கான ஒரு முக்கிய பயிற்சியையும், அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கிறது.
நோன்பின் இந்த அழைப்பிற்கு முஸ்லிம் சமூகம் செவிசாய்க்குமா? அல்லது வழமைப் போல் அதனை ஒரு விருந்தாளியாகக் கருதி வந்த வரை வழியனுப்புவது போல வழியனுப்பி வைத்துவிடுமா?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி