பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகள்
காஸா மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்து இன்றுடன் 36 நாட்களை கடந்துள்ளன. இஸ்ரேல் தாக்குதல்களினால் இதுவரை காசாவில் 4,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 11,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பலஸ்தீன் காஸா பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையில் தண்ணீர், உணவு மற்றும் மின்சாரம் தீர்ந்து விட்டதாகவும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவையும் இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும் அங்குள்ள அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனைற்கு கீழே சுரங்கப்பாதையில் இருந்து செயல்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது, எனினும் அதை ஹமாஸ் அமைப்பினர் மறுத்துள்ளது.
இஸ்ரேல் காஸா பொது மக்கள் மீது வான்வழி தாக்குதல் நடாத்தி வரும் அதே வேளை காஸாவின் உள்ளே நுழைவதற்கு இஸ்ரேலின் தரைப்படை கடுமையாக போராடி வருகின்றது. எனினும் பல முனைகளில் ஹமாஸின் அதிரடியான கொரில்லா தாக்குதல்களினால் இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
▬ காசா போருக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராகிறது
காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்கு செயலில் நடவடிக்கை எடுக்க வேண்டிய வந்துள்ளதாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில் கூறாமல், நடவடிக்கைகளால் பதிலளிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தெஹ்ரான் விமான நிலையத்தை வந்தடைந்த போது ஈரான் ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
▬ காசாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது – WHO
காசாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அவர், காஸாவில் எங்கும் யாரும் பாதுகாப்பாக இல்லை என்று கூறியுள்ளார்.
பலஸ்தீன் காஸா பகுதியில் உள்ள 36 மருத்துவமனைகளில் சுமார் 18 மருத்துவமனைகள் மற்றும், மூன்றில் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது சேவைகளை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.
“காஸாவில் உள்ள மருத்துவமனைகள் எங்கும் காயமடைந்த, நோய்வாய்ப்பட்ட மற்றும் இறந்த உடல்களால் நிரம்பி வழிகின்றன, மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன, மேலும் பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் மருத்துவமனைகளில் உள்ளனர்.” என உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
▬ இஸ்ரேலிடம் பிரான்ஸ் ஜனாதிபதியின் வேண்டுகோள்
பலஸ்தீன் காஸாவில் குழந்தைகள் மற்றும் பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடன் எலிசீ அரண்மனையில் நடைபெற்ற விசேட சந்திப்பில், இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது எனவும் யுத்த நிறுத்தத்துக்கு இணங்குவது இஸ்ரேலுக்கு நன்மை பயக்கும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தனது பாதுகாப்பை பலப்படுத்த இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அங்கீகரிப்பதுடன், ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளையும் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்த கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதிலளித்துள்ளார். அதில்..
பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் ஹமாஸையே கண்டிக்க வேண்டும், இஸ்ரேலை அல்ல அதன்படி, காஸா பகுதியில் இன்று ஹமாஸ் அமைப்பினர் செய்த குற்றங்கள் நாளை பாரீஸ், நியூயார்க் மற்றும் உலகின் எந்தப் பகுதியிலும் நடைபெறும் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.