பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு (09/11/23)

அக்ஸா, பலஸ்தீன்பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகள்

காஸா பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய வான்படை தொடர் தாக்குதல்களை மேற் கொண்டு வரும் நிலையில் இது வரை சுமார் 10,700 பலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 4300க்கும் அதிகமானோர் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் காசாவுக்குள் நுழைய முற்படும் வேளையில், ​​இஸ்ரேலிய டாங்கிகள் ஹமாஸின் ஆயுதக் குழுக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹமாஸ் போராளிகள் நிலத்தடி சுரங்கப் பாதைகளில் பதுங்கியிருப்பதாகவும் அங்கிருந்து இஸ்ரேலியப் படைகளை கடுமையாக தாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பலஸ்தீன் காஸா நகரில் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களால் அழிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நடைபெறும் கடுமையான மோதல்களைக் காட்டும் வீடியோவையும் ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

பலஸ்தீன் காஸா நகரில் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய தரைப்படைகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருவதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய முற்றுகைகள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக பலஸ்தீன் காஸா பகுதியில் கடுமையான தண்ணீர் நெருக்கடி உருவாக்கியுள்ளதுடன், சுமார் 20,000 குடும்பங்கள் ஒரே ஒரு குழாயிலிருந்து தண்ணீர் பெறுவதாக கூறப்படுகிறது.

பாலஸ்தீனியர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர் போன்றவற்றை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இரானுவம் போர் தந்திரமாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் காஸா பகுதியில் மட்டுமின்றி பாலஸ்தீன மேற்குக் கரையிலும் தீவிரமாக உள்ளன, மேலும் இஸ்ரேலியப் படைகள் ரமல்லாவில் உள்ள அகதிகள் முகாமில் சோதனை நடத்தி பல பாலஸ்தீனியர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் பலஸ்தீன் காஸா பகுதியில் தினமும் 160 சிறுவர்கள் உயிரிழந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

1967ல் இருந்து ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு குழந்தைகள் கடந்த மாதத்தில் இறந்துள்ளதாக பலஸ்தீன் காஸா சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று எகிப்தின் ரபா வழியாக நிவாரண உதவிகள் ஏற்றப்பட்ட 106 டிரக்குகள் வந்தடைந்துள்ளன, காசா பகுதிக்கு எரிபொருளை கொண்டு வர இஸ்ரேல் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

ஒக்டோபர் 31ஆம் திகதியிலிருந்து நிவாரண உதவிகளை ஏற்றிச் செல்லும் 756 ட்ரக்குகள் காஸா பகுதிக்குள் ரபா நுழைவாயிலின் ஊடாக பிரவேசித்துள்ள போதிலும், அங்குள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அது போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மோதல் தொடங்குவதற்கு முன்பு, உதவி மற்றும் பிற பொருட்களை ஏற்றிச் செல்லும் சுமார் 500 டிரக்குகள் தினமும் காஸாவுக்குள் நுழைந்தன.

பலஸ்தீன் காஸா பகுதியில் மனிதாபிமானப் பேரிடரைத் தடுக்க உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

▬ ஜபாலியா அகதிகள் முகாம் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்கள்

ஜபாலியா அகதிகள் முகாம் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நேற்று நடத்திய ​தொடர் வான்வழித் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலஸ்தீன் காஸா நகரில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது ஒரு வாரத்தில் நடத்தப்படும் மூன்றாவது வான்வழித் தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.

ஜபாலியா அகதிகள் முகாம் காசா பகுதியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளதுடன், அதற்கு மேற்கே அமைந்துள்ள சப்ரா அகதிகள் முகாமும் நேற்று இஸ்ரேலால் தாக்கப்பட்டது.

பலஸ்தீன் காஸா நகரில் இயங்கி வரும் மருத்துவமனைகளில் ஒன்றான அல் ஷிஃபா மருத்துவமனை அருகே நடாத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களிளால் மருத்துவமனை செயல்பாடுகள் ஸ்தம்பிதமடையும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

▬ சிரியாவில் அமெரிக்கா விமானத் தாக்குதல்

அமெரிக்காவின் எப்-15 போர் விமானங்கள் சிரியாவின் மீது நேற்று (08) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் படை மற்றும் அதனை ஆதரிக்கும் குழுக்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதக் கிடங்குகள் மீது இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக, ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக் குழுக்கள் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது அக்டோபர் தொடக்கத்திலிருந்து நாற்பது முறை தாக்கியுள்ளர். இதில் 45 அமெரிக்க வீரர்கள் பலத்த அல்லது லேசான காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக F-15 போர் விமானங்களைப் பயன்படுத்தி நேற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

ஈரான் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் அமெரிக்கப் படைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் காணப்படும் அமெரிக்க தளங்கள் தாக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், செங்கடலுக்கு மேலே பறந்த அமெரிக்காவின் அதிநவீன MQ-9 ஆளில்லா விமானம் ஒன்று யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

ஏமன் தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆயுதமேந்திய சக்திவாய்ந்தொரு அமைப்பாக கருதப்படுகின்றது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கிய பிறகு, அமெரிக்கா இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் உட்பட பல போர்க் கப்பல்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அணு குண்டு தாக்குதல் மேற்கொள்ளக் கூடிய நீர்மூழ்கிக் கப்பலையும் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது, மேலும் ஆயிரக்கணக்கான கூடுதல் படைகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

▬ காஸாவின் நிர்வாகம் குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு

இதற்கிடையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு வந்த பிறகு, காஸா பாலஸ்தீனியர்களால் ஆளப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறுயுள்ளது.

போர் முடிவுக்கு வந்ததும், இஸ்ரேலியப் படைகள் குறிப்பிடப்படாத காலத்திற்கு காசா பகுதியின் பாதுகாப்பையும் நிர்வாகத்தையும் கைப்பற்றும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற G-7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் காசா பகுதியில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை அறிவித்தார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு வந்த பிறகு, காசா பகுதியை மீண்டும் இஸ்ரேலியப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடாது, காசா பகுதியைத் தடுக்கவோ அல்லது சுற்றி வளைக்கவோ முயற்சிக்கக் கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மோதல்கள் முடிவடைந்ததன் பின்னர் சிறுது காலம் நிலையற்ற தன்மை ஏற்படலாம், ஆனால் போருக்குப் பிறகு காசா பகுதியின் நிர்வாகத்திற்கு பாலஸ்தீன குரல் சேர்க்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகள் பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது.

2005 இல், இஸ்ரேலியப் படைகள் காஸாவை விட்டு வெளியேறியது, 2007 முதல் காஸா ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இஸ்ரேலின் கீழ் உள்ள பாலஸ்தீன மேற்குக் கரையின் நிர்வாகம் மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுடன் பாலஸ்தீனிய ஆணையத்திடம் காணப்படுகின்றது.

காசா மற்றும் மேற்குக் கரை இரண்டும் எதிர்கால பாலஸ்தீனிய அரசின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாகக் அமெரிக்கா கருதப்படுகின்றது.

எவ்வாறாயினும், பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீனிய ஆணையம், இவ்வாறு காசா பகுதியின் கட்டுப்பாட்டை பலஸ்தீன ஆணைத்திடம் ஒப்படைப்பதற்கு முன், 1967 இல் இணைத்த காசா பகுதி மற்றும் மேற்குக் கரையில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேற வேண்டும் என்று கூறுயுள்ளது.

பலஸ்தீனர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதுடன் அது நடக்க வேண்டும் என பலஸ்தீன அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

▬ இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் – பெல்ஜியம்

இதேவேளை, பெல்ஜியத்தின் துணைப் பிரதமரும், சிவில் சேவை மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சருமான பெட்ரா டி சுட்டர், காசா பகுதியில் நிலவும் சூழ்நிலை காரணமாக இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

டி சட்டர் தனது செய்திக்குறிப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பெல்ஜியம் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கான நேரம். குண்டுவெடிப்பு மனிதாபிமானமற்றது. இஸ்ரேலின் குண்டுவீச்சு பாலஸ்தீனியர்களின் மொத்த நம்பிக்கையற்ற தன்மையை அதிகரிக்கிறது. உண்மையான தீர்வு இல்லாவிட்டால் வன்முறை மீண்டும் தொடரும். அதனால்தான் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் அரசியல் தீர்வு அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

▬ இஸ்ரேலின் தாக்குதல் திட்டமிட்ட இனப்படுகொலை! – ஸ்பெயின்

பலஸ்தீன் காஸாவில் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என ஸ்பெயின் சமூக உரிமைகளுக்கான அமைச்சர் அயோன் பெலாரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக உலகத்தலைவர்கள் செயல்படத் தவறிவிட்டனர். காஸாவில் பாலஸ்தீனியர்களை கொன்றது திட்டமிட்ட இனப்படுகொலை ஆகும். எனவே சர்வதேச சமூகம் இஸ்ரேலுக்கு தடைவிதிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்த திட்டமிட்ட இனப்படுகொலையை இஸ்ரேலிய அரசு நிறுத்த வேண்டும்.

மேலும், காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினும், பிற நாடுகளும் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Assalamu Alaikkum!
Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!