பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகள்
ஒரு மாதகாலமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இரானுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொடூரத் தாக்குதல்களால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,569 ஆக உயர்ந்துள்ளதுடன் காஸா பகுதியில் கடந்த நாளில் மட்டும் 241 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் 4,324 பேர் குழந்தைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலஸ்தீன் காஸாவில் குழந்தை இறப்புகள் உலகில் உள்ள மற்ற எல்லா போர் பிரதேசங்களை விட அதிகமாக இருப்பதாகவும், காஸா பகுதியில் குழந்தைகளை குறிவைத்து ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் நடாத்துவதாக “சேவ் தி சில்ரன்” அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலாக, பலஸ்தீன் காஸாவில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
சர்வதேச நிவாரண அமைப்புகள் காசா பகுதிக்கு இயன்றளவு நிவாரண உதவிகளை கொண்டு வரவும், எகிப்தின் ரபா நுழைவாயினூடாக வெளிநாட்டினரை வெளியேற்றவும் முயற்சித்து வருகின்றனர்.
எனினும், இஸ்ரேலின் கண்மூடித்தனமான தொடர் தாக்குதல்களால், காசா பகுதிக்கு உதவிகளை கொண்டு வருவது பெரும் சவாலாக உள்ளது. காசா நகருக்குப் பயணித்த தமது நிவாரண வாகனங்கள் மீதும் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
பலஸ்தீன் காஸா நகரில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற 04 மணித்தியாலங்கள் அவகாசம் வழங்கியுள்ளதாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் நேற்று அறிவித்த போதிலும் தற்போது காஸா பகுதியில் எங்கும் பாதுகாப்பானதாக இல்லை என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 7ஆம் திகதி மோதல்கள் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இரானுவம் பொது மக்களை குறிவைத்தே தாக்குதல் நடாத்தி வருகின்றது.
எனினும் ஹமாஸ் அமைப்பின் உள்கட்டமைப்பு, பதுங்கு குழிகள், தகவல் தொடர்பு வசதிகள், தளபதிகளை அழிப்பதும், பனயக்கைதிகளை விடுவிப்பதும் இஸ்ரேலியப் படைகளின் ஒரே இலக்கு என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Galant தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹமாஸ் மற்றுத் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், டெல் அவிவ் உட்பட பல நகரங்களில் சைரன்கள் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஹமாஸ் போராளிகளின் கடும் தாக்குதல்களுக்கு ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் யுத்த டாங்கி எதிர்ப்பு குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர், ஹமாஸ் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாக கூறப்படும் யுத்த வாகனங்கள், கவச வாகனங்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில் நேற்று மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவின் பெய்ரூட், லெபனான், நோர்வே மற்றும் நியூயார்க்கில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பலஸ்தீன் காசாவுக்கு ஆதரவாக இன்று மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது.
இதே வேளை பலஸ்தீனுக்கு பூரண சமாதானமும் நிம்மதியும், சுதந்திர வாழ்வும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் வீ ஆர் வன் அமைப்பு ஏற்பாடு செய்த சமாதான எழுச்சி நிகழ்வு நேற்று ஆயிரக்கணக்கான மக்களின் பங்கெடுப்புடன் நடைபெற்றது.
இதற்கிடையில், ஜேர்மனி தனது நாட்டினர் 200 க்கும் மேற்பட்டோர் ரபா வழியாக காசாவை விட்டு வெளியேறியதாக அறிவித்துள்ளது. அத்துடன் பிலிப்பைனின் 40 பேர் ரபா வழியாக எகிப்துக்கு வந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் தெரிவித்துள்ளார்.
▬ 1,400 இஸ்ரேலியர்களுக்காக மட்டும் நினைவஞ்சலி
ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்ட பொதுமக்கள் என்று கூறப்படும் 1,400 ஆக்கிரமிப்பு இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேலால் கொல்லப்பட்ட 11,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன குடிமக்கள் பற்றி காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
▬ காஸா போரின் பின் காஸாவின் பாதுகாப்பு பொருப்பு தொடர்பில் சர்சை
இந்நிலையில், பலஸ்தீன் காஸா போர் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், குறிப்பிடப்படாத காலத்திற்கு காஸாவின் அனைத்து பாதுகாப்புப் பொறுப்புகளையும் இஸ்ரேலின் கீழ் கொண்டு வரப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் அர்தம் காஸாவை மீண்டும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது என்றால் அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலஸ்தீன் காஸா பகுதியை மீண்டும் இஸ்ரேல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது சரியான செயல் அல்ல என்பது ஜனாதிபதி ஜோ பைடனின் நிலைப்பாடாகும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.
போருக்குப் பிறகு, ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிக்கும் வகையில் காசா பகுதி இருக்கக்கூடாது என்று அமெரிக்காவும் நம்புவதாகவும், காஸா பகுதியில் பாதுகாப்புப் பொறுப்பை இஸ்ரேலுக்கு ஏற்க முடியாவிட்டால், ஹமாஸ் மீண்டும் எழுச்சி பெறும் வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார்.
எனினும் போருக்குப் பிறகு காஸா பகுதி எவ்வாறு இருக்க வேண்டும் மற்றும் அதன் நிர்வாகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி பரவலான கலந்துரையாடல்கள் நடாத்தப்பட வேண்டும் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
▬ இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டிற்கு சவுதி அரேபியா அழைப்பு
இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் ஆரம்பமாகி ஒரு மாதகாலம் கடந்துள்ள நிலையில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து, பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடைந்து காஸா நரகம் போல் காட்சியளிக்கும் நிலையில்,
தற்பொழுது இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டிற்கு சவுதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற ப்ளூம்பெர்க் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சவூதி அரேபிய முதலீட்டு அமைச்சர் காலிட் அல்-ஃபாலி இதனைத் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் பங்களிப்பில் நடைபெறும் இந்த மாநாட்டின் நோக்கம் இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடிக்கு அமைதியான தீர்வை எட்டுவதே எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் வரும் ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியா செல்லவுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், ஈரானும் சவுதி அரேபியாவும் பல ஆண்டுகளாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, சீனாவின் தலையீட்டின் மூலம் இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்தியது.
ஈரான் ஜனாதிபதி ஒருவர் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்படுகிறது.
▬ காசா பகுதியில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடன்படுங்கள் – ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரிடம் கோரிக்கை
காஸா பகுதியில் 3 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல் பிரதமருக்கு தொலைபேசி மூலம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் மூலம் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இது சம்பந்தமாக இஸ்ரேல் பிரதமரின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Assalamu Alaikkum!