பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு (06/11/23)

Newsபலஸ்தீன்

இஸ்ரேல்-பலஸ்தீன் மோதல் தொடங்கி ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையில், காஸாவின் வடக்குப் பகுதியைத் தனிமைப்படுத்தி சுற்றி வளைக்க முடிந்ததாக ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளன.

தரைவழித் தாக்குதல்களையும் நடத்தி வரும் இஸ்ரேலியப் படைகள், காஸா பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரித்து வடக்கு காசாவை தனிமைப்படுத்த முடிந்ததாகவும் தாக்குதலின் போது ஹமாஸுக்கு சொந்தமான நிலத்தடி முகாம்களை​ கண்டுபிடித்ததாகவும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் கூறுகிறது.

வடக்கு காஸாவில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. வடக்கு காசா பகுதியிலிருந்து பொதுமக்கள் வௌியேறிய பின் மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் ராணுவம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் இன்டர்செப்டர் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அயர்ன் டோம் அமைப்பில் இருந்து சென்ற ஏவுகணைகள் மீண்டும் டெல் அவிவில் உள்ள வீடுகள் மற்றும் வைத்தியசாலையை தாக்கியதாக காணொளிகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் பலஸ்தீன் காசா நகரை சுற்றி வளைக்க முயற்சிக்கும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படைகள் மீது ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருந்து கடும் தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் கடும் தாக்குதல்களால் இஸ்ரேலின் அதி நவீனமான பல யுத்த வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டை காரணமாக இஸ்ரேல் – லெபனான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து காசாவில் கிட்டத்தட்ட இது வரை 10,000 பேர் இறந்துள்ளதாகவும் காசா பகுதியில் மொத்தம் 175 மருத்துவ பணியாளர்களும் 34 சிவில் பாதுகாப்பு ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 70 சதவீதமானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.  மூன்று அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதலில் 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பிரான்ஸ் குடிமக்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.

8 பிரான்ஸ் நாட்டவர்களை காணவில்லை என்றும், சிலர் காஸாவில் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாக பிரான்ஸின் அதிபர் தெரிவித்துள்ளார்.

Ø ஹமாஸ் அமைப்பின் தலைவரை கண்டுபிடித்து கொல்ல பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

இதனிடையே பலஸ்தீன் காஸா போரை நிறுத்த வேண்டுமாயின் ஹமாஸ் அமைப்பின் தலைவரை கண்டுபிடித்து கொல்ல காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.

காஸாவின் ஹமாஸ்  தலைவர் யாஹ்யா சின்வரை (Yahya Sinwar) தங்கள் இராணுவம் அழிக்கும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அதற்கு முன் பலஸ்தீன் காஸா மக்கள் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தால், அவர்கள் அவரைக் கொன்றொழிக்க வேண்டும், அப்போது தான் யுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Ø இஸ்ரேலை தாக்கினால் அமெரிக்காவும் களத்தில் இறங்கும்

இஸ்ரேல் நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க இராணுவம் நேரடியாக களத்தில் இறங்கத் தயாராக உள்ளது என ஈரானையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் அமெரிக்கா நேரடியாகவே எச்சரித்துள்ளது .

அமெரிக்கா விமானம் தாங்கிக் கப்பல்களை ஏற்கனவே மத்தியதரைக் கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், ரஷ்ய கூலிப் படையான வாக்னார் அமைப்பு, ஹிஸ்புல்லா அமைப்புக்கு உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

Ø அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் துருக்கிக்கு விஜயம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையே தனது இராஜதந்திர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அத்தனி பிளின்கன் துருக்கி வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் போரின் தொடக்கத்திலிருந்து மோசமடைந்துள்ள நிலையில் அத்தனி பிளின்கன் துருக்கி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நாடுகளும் தங்கள் இராஜதந்திரிகளை நாட்டுக்கு திரும்புமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாக ஈராக்கிற்கு சென்றிருந்த பிளின்கன், காசாவில் மனிதாபிமான யுத்த நிறுத்தத்தை பிராந்திய நாட்டுத் தலைவர்கள் வரவேற்பதாக தெரிவித்திருந்தார்.

எனினும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்துவதற்கு முன் பணயக்கைதிகளை விடுவிப்பதில் முன்னேற்றம் தேவை என்று கூறியியுள்ளார்.

Ø ஜோர்டானிய விமானப்படையிலிருந்து காசாவிற்கு மருத்துவ பொருட்கள்

காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஜோர்டானிய கள மருத்துவமனைக்கு தனது நாட்டின் விமானப்படை மூலம் அவசர மருத்துவ மற்றும் மருந்து உதவிகளை அனுப்பப்பட்டதாக அன்னாட்டு மன்னர் அப்துல்லா கூறியுள்ளார்.

காஸா பகுதியில் காயம் அடைந்தவர்களுக்கு உதவுவது தமது ராணுவத்தின் கடமை என்று மன்னர் அப்துல்லா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Ø காசா போர்நிறுத்தத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட அரச சார்பற்ற பல அமைப்புகள் கோரிக்கை

இஸ்ரேல்-ஹமாஸ்க்கு இடையிலான உடனடி போர்நிறுத்தத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலாப நோக்கற்ற சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் யுத்தம் காரணமாக அதிகரித்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அதிர்ச்சி அடைவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தன்னார்வ உதவி நிறுவன தலைவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இதை தெரிவித்துள்ளனர்.

Ø காசாவில் தொற்று நோய் பரவும் அபாயம் – ஐ.நா

பலஸ்தீன் காசாவில் சுவாச தொற்று நோய்கள், வயிற்றுப்போக்கு, அம்மை உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருவதாகவும், மக்கள் இடமின்றி வீதிகளில் உறங்கி வருவதாகவும், புதிதாக வருவோருக்கு ஐ.நா பாதுகாப்பு இடங்களில் இடமில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா சார்பான பாதுகாப்பு இடங்களில் சுமார் 5 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், மக்கள் அதிகம் இருப்பதால் அவர்ளின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் உள்ள 2.3 மில்லியன் மக்கள் தொகையில் 1.5 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையிலேயே பலஸ்தீன் காஸா போரை நிறுத்தக்கோரி ஐ.நா.வும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இஸ்ரேலிடம் வலியுறுத்தி வருகின்றன.

Leave a Reply