இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழப்பு 7000 ஆக உயர்வு
18வது நாளாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 7000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த தாக்குதலில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 7,292 ஆக உயர்ந்துள்ளது. இதில் இஸ்ரேலில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,405 பேரும், காசா முனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5,791 பேரும் உயிரிழந்தனர்.
○ காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது
காஸாவில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா பகுதியில் போர்நிறுத்தத்திற்கு தொண்டு நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளதுடன், மருத்துவமனைகளில் எரிபொருள் பற்றாக்குறையாக உள்ளதால் மேலும் காயமடைந்த குழந்தைகள் விரைவில் இறக்க நேரிடும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக காஸா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கு எதிராக பலமுனை நடவடிக்கைக்கு நாடு தயாராகி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் நேற்று (23) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
○ காஸா பகுதியில் வாழும் மக்களுக்கு கிடைத்த உதவிகள் போதாது – ஐ.நா
நிவாரன பொருட்கள் அடங்கிய 20 டிரக்குகள் நேற்று (23) காஸாவை நோக்கி புறப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதில் உணவு/தண்ணீர் மற்றும் எரிபொருள் ஆகியவை அடங்கும் என்று அமைப்பு அறிவிக்கிறது.
எவ்வாறாயினும், இந்த உதவிகள் போதுமானதாக இல்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
காஸாவின் தெற்கு பகுதிக்கு இடம்பெயர்த மக்கள் உயிர் ஆபத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் வடக்கு பகுதிக்கே திரும்பி வருவதாக ஐ.நா மற்றுமொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்குக் காரணம் தென் பிராந்தியத்தில் கிடைக்கும் உணவு/குடிநீர் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை.
கடந்த வாரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வடக்கில் இருந்து தெற்கிற்கு இடம்பெயர்ந்தனர். தற்போது, இடம்பெயர்ந்த ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீரும், உணவுக்காக ஒன்று அல்லது இரண்டு அரபு ரொட்டிகளும் கிடைக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
○ ஹமாஸால் பிணைக் கைதிகளாக இருந்த இரு பெண்கள் விடுதலை
ஹமாஸ் போராளிகள் தமது பிடியில் இருந்த இரண்டு இஸ்ரேலிய பெண்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹமாஸ் போராளிகள் வயதான இரு பெண்களையும் இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைத்தனர், பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.
79 வயதான நூரித் கூப்பர் மற்றும் 85 வயதான யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் ஆகியோர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களது கணவர்கள் இன்னும் ஹமாஸ் பிடியிலேயே இருக்கிறார்கள். இதன் மூலம் ஹமாஸ் விடுவித்திருக்கும் பணயக் கைதிகளின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்திருக்கிறது.
கிட்டத்தட்ட 200 இதர இஸ்ரேலியர்கள் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
○ பிரான்ஸ் ஜனாதிபதி இஸ்ரேல் பிரதமரை சந்தித்தார்
இஸ்ரேலின் டெல் அவிவ் சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இஸ்ரேலுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் அதே வேளையில், இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடிக்கு இரு நாடுகளின் தீர்வு தேவை என்பதை பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தியுளளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடிக்கு இரு நாடுகளின் தீர்வு மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் பலஸ்தீன நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து யூதர்களின் குடியேற்றங்களை நிறுவுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் மக்ரோன் மேலும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
○ சீன வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்
இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடியை தீர்க்க சீனா தலையிட்டுள்ளதுடன், சீன வெளியுறவு மந்திரி வாங் யி இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி எல்லி கோஹன் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரத்தின் வெளியுறவு மந்திரி ரியாசாதா அல்-மாலிகி ஆகியோருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கடந்த 7ம் தேதி எல்லை தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு நியாயமான உரிமை உள்ளது என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல்களினால் காஸாவில் பலஸ்தீனர்கள் தொடர்ந்து உயிரிழந்தமைக்கு தாம் ஆழ்ந்த வருந்துவதாகவும் சீன வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் போராளிகளின் கருத்து காசாவில் உள்ள பலஸ்தீன மக்களின் கருத்து அல்ல என சுட்டிக்காட்டிய பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் ரியாட் அல் மாலிக்கி, பாலஸ்தீனம் எப்போதும் அமைதியை விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
○ இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் – பராக் ஒபாமா
இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனித உயிரிழப்புக்களை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் காஸா மக்களுக்கான உணவு, நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை நிறுத்துவது என்ற முடிவானது மனிதநேய நெருக்கடியை மோசமடைய செய்கின்றது என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை கண்டித்துள்ள ஒபாமா, இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று அந்நாட்டுக்கான தனது ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எனினும், இதுபோன்ற போர்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
○ ஹமாஸ் படைகளுக்கு, இனி பாலஸ்தீனத்தில் எவ்வித அதிகாரமும் இல்லை – ரிஷி சுனக்
ஹமாஸ் படைகளுக்கு, இனி காசா அல்லது பாலஸ்தீனத்தின் எந்தவொரு பகுதியிலும் அதிகாரம் செலுத்த முடியாது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
மேலும், காசா பகுதி அப்பாவி மக்களுக்காக கூடுதலாக 20 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி அளிக்கப்படும் எனவும், காசாவில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் சுட்டக்காட்டினார்
மேலும், மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை உக்ரைனில் புடினின் கொடூரங்களுடன் ஒப்பிட்ட ரிஷி சுனக், உக்ரைனில் புடின் தோல்வியடைவது உறுதி என குறிப்பிட்டுள்ளதுடன், ஹமாஸ் படைகளுக்கும் அதே நிலை தான் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
○ இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி : ஐ.நா ஒன்றுகூடல்
இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஜோர்டான், மொரீஷியஸ் உள்ளிட்ட பல நாடுகள் கவலை தெரிவித்த நிலையில், பாலஸ்தீனம் தொடர்பான அவசர சிறப்பு அமர்வை நடத்த ஐ.நா பொதுச் சபை கூடியது.
இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் முடிவுகளை எடுக்கும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. பொதுச் சபை கூடி இது தொடர்பாக விவாதம் நடத்தும்’ என, சிறப்பு அமர்வை நடத்துவதற்கு முன், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வு தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
○ லெபனான் மற்றும் ஜோர்டானில் உள்ள இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு
லெபனான் மற்றும் ஜோர்தானில் உள்ள இலங்கையர்கள் இந்த யுத்த நேரத்தில் எல்லை தாண்டி இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் வேறு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.
Assalamu Alaikkum!