பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) அமைப்பை பயங்கரவாத குழுவாக அறிவிக்கும் அமெரிக்காவின் முடிவினை இந்தியா வெள்ளிக்கிழமை (18) வரவேற்றது.
இந்த நடவடிக்கையானது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விவரித்தார்.
அதேநேரம், பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது, பயங்கரவாத அமைப்புகளும் அவற்றின் பிரதிநிதிகளும் பொறுப்புக் கூறப்படுவதை உறுதி செய்வதற்காக அதன் சர்வதேச பங்காளிகளுடன் இந்தியா தொடர்ந்தும் நெருக்கமாக பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 22 அன்று பைசரனில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு TRF பொறுப்பேற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒரு நேபாளக் குடிமகன் உட்பட இருபத்தைந்து சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஓர் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ வியாழக்கிழமை (17) வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த விடயத்தை கூறியதுடன், வொஷிஙடனின் வெளியுறவுக் கொள்கையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உறுதியான அணுகுமுறைக்கு சான்றாக இந்தத் தடைகளை அடிக்கோடிட்டுக் காட்டினார்.