பாஸ்போர்ட் எடுக்க பாஸ்போர்ட் அலுவலகம் ​செல்வதனால், இந்த டிப்ஸ் உங்களுக்கானது!

பாஸ்போர்ட் எடுக்க பாஸ்போர்ட் அலுவலகம் ​செல்வதனால்
நாம் இப்போது முகம்கொடுக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பெரும்பாலாணோர் வௌி நாட்டு வேலை வாய்ப்புக்காக செல்கின்றனர். அதே நேரத்தில், குடிவரவுத் துறை அல்லது நாம் எளிதாக அழைப்பது போல் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) அலுவலகத்திலும் வழக்கத்தை விட அதிக கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.

தற்போது வேலைக்காகவோ அல்லது சுற்றுலாவுக்காகவோ வௌிநாடு செல்பவர்களை தவிர எல்லோரும் பாஸ்போர்ட் எடுக்கிறாங்க நானும் பாஸ்போர்ட் எடுக்கனும் என்று செல்பவர்களும் இல்லாமல் இல்லை. கடந்த சில மாதங்களில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியதையும் காணக்கூடியதாக இருந்தது.

இது உண்மையில் ஒரு மோசமான விஷயம் அல்ல. வௌி நாட்டிற்குச் சென்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பாஸ்போர்ட் வைத்திருப்பது நல்லது தான்.

ஆனால், பாஸ்போர்ட் தயாரிக்கச் சென்று, நாள் முழுவதும் அங்கேயே குடியிருக்க வேண்டியிருக்கும் போது, ​​பலர் பாஸ்போர்ட் தேவையே இல்லை என்று நினைக்கத் தோன்றும். அதனால் எப்படியிருந்தாலும், இந்த நாட்களில் பாஸ்போர்ட் எடுக்கச் செல்லும்போது நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என்பது பொய்யல்ல.

ஆனால், பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் சென்று, அதை எப்படிப் பெறுவது என்பது குறித்த சரியான தகவல்களைத் தெரிந்து கொண்டால், அந்தப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு உதவியாக இருக்கும்.

மேலும், பாஸ்போர்ட் எடுக்க பாஸ்போர்ட் அலுவலகம் செல்வதும், அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டுவதும் தனக்கும் மற்றவர்களுக்கும் செய்யும் உதவி என்று சொன்னால் அதுவும் மிகையாகாது!

01. ஆன்லைன் அபோய்ன்மன்ட் மூலம் வேலையை முடிந்தவரை எளிதாக்கிக் கொள்வோம்.

இனி பாஸ்போர்ட் செய்யும் முன் புகைப்படம் எடுக்க வேண்டும் அல்லவா. குடிவரவுத் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட ஸ்டூடியோ ஒன்றுக்குச் சென்று உங்கள் புகைப்படங்களைப் பெறுவதே அதற்கான எளிதான வழியாகும்.

தற்போதெல்லாம் எமது புகைப்படத்தை கையில் தரமாட்டார்கள். மாறாக புகைப்படங்கள் நேரடியாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்படும்.

எனவே உங்கள் புகைப்படத்தை எடுத்த ஸ்டூடியோவில் உங்கள் புகைப்படத்தை பாஸ்போர்ட் அலுவலகத்துற்கு அனுப்பும் வேளையில் மறக்காமல் அங்கேயே ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட் ஒன்றையும் போட்டு விடுங்கள்.

நீங்கள் ஏற்கனவே ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட் செய்திருந்தால் பரவாயில்லை. ஸ்டுடியோவிலிருந்தே அதைச் செய்வது எளிது. அப்பாயின்ட்மென்ட் செய்வதற்கு முன், ஒரே நாள் சேவை வேண்டுமா? அல்லது வழக்கமான சேவை வேண்டுமா? என்பதைத் தேர்ந்தெடுக்க மறந்திட வேண்டாம்.

02. நீங்கள் எங்கு செல்ல வேண்டும்? எந்த நேரத்தில்?

நாம் ஆன்லைனில் அப்பாயிண்ட்மெண்ட் எடுக்கும்போது, ​​அதில் நாம் அங்கு செல்ல வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் நமக்கு வசதியான ஒரு நேரத்தை தெரிவு செய்து கொள்ளலாம்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக அங்கு செல்வதற்கு தயாராக வேண்டாம். சற்று நேர காலத்துடன் அங்கு செல்வது மிகவும் நல்லது. ஏனெனில் எவ்வாறெனினும் அங்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படும். இலங்கையில் அது இல்லாமல் எப்படி? ம்ம்ம்

சரி, சுஹுருபாயா கார்யாலயம் காலை 8 மணி முதல் திறந்திருக்கும். இப்போது நாம் செல்ல வேண்டிய இடம், பத்தரமுல்லை சுப்பூதிபுர வீதியில் திரும்பி சில மீற்றர்கள் முன்னோக்கிச் செல்லும்போது வலது பக்கம் உள்ள சுஹுருபாயா கார்யாலயத்துக்கு.

நீங்கள் கொழும்பு கோட்டையிலிருந்து வருவீர்களேயானால், 171, 170, 190 என்ற எந்தப் பேருந்திலும் வரலாம். பொரளையில் இருந்து பேருந்தில் வருவதானால் 171, 174, 170, 190, 177, 186 என்ற எந்தப் பேருந்திலும் வரலாம். நீங்கள் கொட்டாவ / தலவத்துகொட / பன்னிபிட்டியவில் இருந்து வருகிறீர்கள் என்றால், 174 பேருந்தில் வந்தடையலாம். தெஹிவளை/நுகேகொடையிலிருந்து 163 பேருந்து உள்ளது. கொள்ளுப்பிட்டியில் இருந்தும் 177 பெறலாம்.

03. உடலியல் தேவைகளுக்கு தயாராக வருதல்

தற்போது பாஸ்போர்ட் அலுவலக பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்றே கூறலாம். இருப்பினும், நீங்கள் சில மணிநேரம் செலவழிக்க வேண்டிய நிலை இருக்கும் என எதிர்பார்க்க வேண்டும்.

சில நேரங்களில், இரண்டு அல்லது மூன்று கவுண்டர்களில் மட்டுமே வேலை செய்யும் போது, ​​நீங்கள் ஆறு மணித்தியாலங்களாவது வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே, அதற்கு தயாரான உடல் உங்களுக்கு நல்லது.

முதலில், வசதியான மற்றும் இலகுவான ஆடைகளை அணிவது நல்லது. குறிப்பாக சற்றே நிற்பதற்கு வசதியாக சௌகரியமான காலணிகளை அணிந்தால், வரிசையில் நிற்கும் போது எவ்வளவு சௌகரியமாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்.

அடுத்து ஒரு தண்ணீர் ​போத்தல், தேவை எனின் ஏதேனும் பிஸ்கட் அல்லது சிற்றுன்டி, ஆனால் வெளியில் வரிசையில் நின்று டோக்கன் நம்பர் பெற்று, உள்ளே வரிசையாக நின்ற பின், உணவு, பானம் தேவை என்றால், உள்ளே கேண்டீனும் உள்ளது.

அத்துடன் வரிசையில் நிற்கும் போது ஏற்படும் சலிப்பை போக்க ஹெட்செட் அல்லது ஏதேனும் புத்தகத்தை எடுத்துச் செல்லலாம்.

மேலும், போதுமான அளவு பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். இப்போது சாதாரண சேவை மூலம் பாஸ்போர்ட் தயாரிக்க 5,000 ரூபாய் செலவாகிறது. ஒரு நாள் சேவைக்கு 15,000 ரூபாய். அவசியமாயின் ஒவ்வொரு வங்கியினது ஏடிஎம் இயந்திரங்களும் அங்கு உள்ளது.

04. அனைத்து ஆவணங்களையும் மறக்காமல் எடுத்து கொள்ளுங்கள்

பாஸ்போர்ட் எடுக்கச் செல்லும்போது, ​​அங்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார்படுத்திக் கொள்ளுங்கள். முதலில், பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பின்னர் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை சுஹுருபாய வீதியில் காணப்படும் ஏதேனும் ஒரு கொமியுனிகேஷனில் பெற்றுக் கொள்ளலாம். எல்லா விண்ணப்படிவங்களையும் சரியான முறையில் பூர்தி செய்து எடுத்து செல்லுங்கள்.

அத்துடன், உங்கள் பிறப்புச் சான்றிதழின் அசல் பிரதி மற்றும் நகல் பிரதி (போடோ கொபி) அசல் பிரதியானது, பிரதேச செயலகத்தினால் சான்றளிக்கப்பட்ட நகல் கூட போதுமானது.

உங்களுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நகல் பிரதி (போடோ கொபி). நாம் எதையாவது தொழில் என்று குறிப்பிட்டிருந்தால், அதை உறுதிப்படுத்த சேவைச் சான்றிதழ், ஒருவரின் வேலையைக் குறிப்பிடும் பணியிடத்திலிருந்து சான்றளிக்கப்பட்ட கடிதம் ஆகிய ஆவணங்களும் அவசியமாகும்.

அத்துடன் பழைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும் என்றால், பழைய பாஸ்போர்ட்டையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

05. திருட்டு ஆசாமிகளிடம் சிக்காதீர்கள்

அதிகளவு பணத்தை பெற்று கொண்டு விரைவாகவும் உடனடியாகவும் உங்களது வேலையை சுலபமாக செய்து தருவதாக கூறி அலையும் வஞ்சக, திருட்டுக் கும்பல் அதிகமாக காணப்படும் இடங்களில் ஒன்றுதான் இந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமாகும்.

இந்த திருட்டு ஆசாமிகளுக்கு உள்ளிருந்து சில அதிகாரிகளின் ஆதரவு இருக்கிறதா என்பது எங்களுக்குத் தெரியாது.

ஆரம்பத்திலேயே சொன்னபடி எல்லா ஆவணங்களையும் தயாராக அங்கு எடுத்துச் செனறால் அந்த ஆசாமிகளிடம் கூறி எதையும் அதிக பணம் கொடுத்து செய்ய வேண்டிய எந்த தேவையும் இருக்காது.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட்டை போட்டு விட்டுச் சென்றால், அங்கிருக்கும் ஆசாமிகளுக்கு அதிக பணம் கொடுத்து அப்பாயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டிய அவசியமிருக்காது.

அடுத்து, வரிசையில் நிற்காமல் அவசரமாக வேலையை உடனடியாக முடித்துத் தருவோம் எனக் கூறி அலையும் ஆசாமி கும்பல் ஒன்றும் அங்கு அலைந்து திரிந்து கொண்டுருப்பார்கள்.

நாம் கூறுவது என்னவென்றால் கொள்கை ரீதியாக நீங்கள் திருட்டு வழியில் சட்டவிரோதமாக பாஸ்போர்ட்டுகளைப் பெற முயற்சிக்க வேண்டாம். அதற்கு இரண்டு பிரதான காரணங்களை கூறலாம்.

ஒன்று, வேலை சற்று தாமதமானாலும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தாலும் சரியான வழியில் சட்ட ரீதியாக செய்யும் வேலை நம்பிக்கையானது, திருப்திகரமானதாக இருக்கும்.

திருட்டு வழியில், குறுக்கு வழியில் செய்யும் வேலை பெரும்பாலும் தவறாக போகக் கூடிய தோல்வியடையக் கூடிய நிலமை அதிகம் கடைசியில் மாட்டிக் கொள்வது நீங்கள் மட்டும்தான்.

இரண்டாவதாக, அந்த திருட்டு ஆசாமிகளுக்கு இலஞ்சம் கொடுத்து நாம் வேலையைச் செய்யப் பார்க்கிறோம் என்பது அந்த ஊழல் அமைப்பை நாம் ஆதரிக்கிறோம் என்று அர்த்தம். அதன் மூலம் ஒட்டுமொத்த அமைப்புக்கும் நாம் தவறு செய்கிறோம்.

06. வரிசை என்றால் வரிசை

சிலர் பாஸ்போர்ட் எடுக்க கியூவில் நிற்பதைப் பார்த்தாலே கியூவில் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். இனி இலங்கையின் பழக்க வழக்கத்தின் படி வரிசையிலிருந்து தாண்டிப் போவதற்கு குறுக்கு புத்தியை பயன்படுத்த தொடங்குவார்கள்.

சிலர் அப்பாவியாக இருப்போரைப் பார்த்து சத்தம் போட்டு அடாவடியாக முன்னே போவதற்கு முற்படுவார்கள். இன்னுமொருவர் வந்து “அய்யோ நான் இங்கிருந்து தான் டொய்லட்டுக்கு போனேன், நான் கடைசியாக வரிசையில் இருந்த இடம் இது” என அங்லாய்ப்பார். எவ்வாறெனினும் வரிசையில் இருந்து குதிக்க முற்பட வேண்டாம்.

ஏனெனில் அங்கு வரிசையில் காத்திருக்கும் ஏனைய மக்களிடமிருந்து நீங்கள் நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்ளலாம். அல்லது அங்கிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளினால் உங்களுக்கு பிரச்சினை வரலாம். எது எப்படியோ முறையற்ற முறையில் வரிசை தாண்டுவது முற்றிலும் நெறிமுறையற்ற செயலாகும்.

07. ஒழுக்கமாக இருங்கள், கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்

இது ஒன்றும் புதிதாக சொல்லப்பட வேண்டிய விடயமொன்றல்ல. நாம் எங்கு சென்றாலும் மற்றவர்களிடம் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பது அடிப்படைக் கொள்கையாகும். எனினும் அது சிலரிடம் இல்லாததால் அதையும் சற்று சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

வரிசையில் இருக்கும் போது அடுத்தவருக்கு இடைஞ்சலாக, முகம் சுழிக்கும்படி நடந்து கொள்ள வேண்டாம். பொறுமையை கடைபிடியுங்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் நிலை வந்தால் உதவி செய்யுங்கள். அரசியல், மதம் சார்ந்த வீண் பேச்சுக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

அங்கே ஏதாவது அநியாயமும், நடப்பதை நீங்கள் கண்டால் – உதாரணமாக, யாராவது வரிசையில் குதித்து, அல்லது யாருக்காவது சிறப்புக் கவனத்துடன் பாஸ்போர்ட்டைத் தயாரிக்க முற்படுகிறார்கள் என்றால் அதை எதிர்த்துப் பேசத் தயங்காதீர்கள்.

நாங்கள் அவ்வாறான தவறை செய்யாமல் இருப்பது போல், அப்படிப்பட்ட தவறைக் கண்டால் அதற்கு எதிராகப் பேசுவதும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் செய்வதும் நமது உரிமையாகும்.

 

Reezah Jesmin

Assalamu Alaikkum!
Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply