பிறர் வீட்டினுள் செல்லு முன் என்ன செய்ய வேண்டும்?

பிறர் வீட்டினுள் செல்லு முன் என்ன செய்ய வேண்டும்?
பிறர் வீட்டினுள் செல்லு முன் என்ன செய்ய வேண்டும்?
”நபி (ﷺ) அவர்கள் வீட்டில் இருக்கும் போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒருவர் வந்து, நான் உள்ளே வரலாமா? என்று அனுமதி கேட்டார். (அவர் சரியான முறையில் அனுமதி கேட்கவில்லை என்பதற்காக) நபி (ﷺ) அவர்கள் தமது பணியாளரிடம், நீங்கள் அந்த நபரிடம் சென்று அனுமதி கேட்கும் முறையை சொல்லிக் கொடுத்து (அதாவது) ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா? என்று கேட்கும் படி சொல்லிக் கொடுக்குமாறு கூறினார்கள்.

இதனை செவிமடுத்த அம்மனிதர், ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா? என்று கேட்டார். அதன் பின்னர் நபி (ﷺ) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்க, உள்ளே வந்தார்” என ரிப்யி இப்னு ஹிராஷ் (رضي الله عنه) அறிவிக்கின்றார். (நூல்: அபூதாவூத்)

”நான் நபி (ﷺ) அவர்களிடம் வந்து. ‘ஸலாம்’ கூறாமல், அவர்கள் இருந்த இடத்திற்கு நுழைந்து விட்டேன். நீங்கள் திரும்பிச் சென்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா? என்று கேட்டு விட்டு, பின்னர் உள்ளே வாருங்கள் என்று நபி (ﷺ) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என கில்தா இப்னு ஹன்பல் (رضي الله عنه) அறிவிக்கின்றார். (நூல்கள்: அஹ்மது, அபூதாவூத் மற்றும் திர்மிதீ)

”பார்வையின் காரணத்தால் தான் அனுமதி பெறுவது (மார்க்கச்) சட்டமாக ஆக்கப்பட்டது என்று நபி (ﷺ) கூறினார்கள்” என ஸஹ்ல் இப்னு ஸஅத் (رضي الله عنه) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, திர்மிதீ மற்றும் நஸயீ)

”நபி (ﷺ) அவர்கள் ஒரு சமூகத்தாரினது (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நின்றவாறு அனுமதி பெறாமல், வீட்டு வாசலுக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ ஒதுங்கி நின்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுவார்கள்” என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் (رضي الله عنه) அறிவிக்கின்றார். (நூல்: அபூதாவூத் )

”முன் அனுமதியை பெறாமல் பிறருடைய வீட்டின் உட்பகுதிகளைப் பார்ப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அவ்வாறு ஒரு முஸ்லிம் (பிறருடைய வீட்டின் உட்பகுதிகளை) பார்த்து விட்டால் (அவர் அனுமதியின்றி) அவ்வீட்டில் நுழைந்தவர் போன்று ஆகிவிடுகிறார்” என தவ்பான் (رضي الله عنه) அறிவிக்கின்றார் .(நூல்: அபூதாவூத், திர்மிதீ) மேலே உள்ள ஹதீஸை இமாம் புகாரி அவர்கள், தமது ‘அல்அதபுல் முஃப்ரத்” எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

”ஒரு மனிதர்  முறையின்றி தன் பார்வையை ஒரு வீட்டினுள் செலுத்தும் போது குறித்த அந்த வீட்டுக்காரர் முறையின்றி உற்றுப் பார்த்த அந்த மனிதனின் கண்களைப் பறித்தால் கூட, அதற்காக நான் அவரை குறை கூறமாட்டேன். மறைக்கப்படாத (திரையிடப்படாத) ஒரு வீட்டு வாசலை, யாரேனும் உற்று நோக்கினால், உற்று நோக்கியவர் மீது குற்றம் ஏதுமில்லை. குறிப்பிட்ட வீட்டுக்காரர்களே குற்றவாளிள் என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்””என அபூதர் (رضي الله عنه) அறிவிக்கின்றார். (நூல் : திர்மிதீ)

”ஓர் ஆண் வீட்டில் தொழுது கொண்டிருக்கும் போது அவரது வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டால், தொழுது கொண்டிருப்பவர் (சுப்ஹானல்லாஹ் என்று) தஸ்பீஹ் சொல்வதே அனுமதி அளித்ததாகும். ஒரு பெண் தொழுது கொண்டிருக்கும் போது அவ்வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கேட்டால், அப்பெண் தனது புறங்கையைப் புறங்கையில் அடித்து சப்தம் உண்டாக்குவதே அனுமதி வழங்குவதாகும் என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (رضي الله عنه) அறிவிக்கின்றார். (நூல்: பைஹகீ)

”நான் இரவு மற்றும் பகல் வேளைகளில் நபி (ﷺ) அவர்களிடம் வருவேன். நான் இரவில் வரும் வேளையில் அவர்கள் கனைத்து எனக்கு அனுமதி வழங்குவார்கள். நான் நபி (ﷺ) அவர்களிடம் வந்து அனுமதி கேட்கும் போது அவர்கள் தொழுது கொண்டிருந்தால் கனைப்பார்கள்; நான் நுழைந்து விடுவேன். நபி (ﷺ) அவர்கள் தொழாமல் இருந்தால் எனக்கு (வாய் மொழியில்) அனுமதி அளிப்பார்கள்” என அலி இப்னு அபூ தாலிப் (رضي الله عنه) அறிவிக்கின்றார். (நூல்: நஸயீ)

”நபி (ﷺ) அவர்கள் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு அபூபக்ர் (رضي الله عنه) அவர்கள் வந்து அனுமதி கேட்க, யாரது என்று நபி (ﷺ) அவர்கள் கேட்டதற்கு, நான் அபூபக்ர் என்று பதில் கூறினார்கள். அதன் பிறகு உமர் (رضي الله عنه) அங்கு வந்து அனுமதி கேட்டார்கள். யார் என்று நபி (ﷺ) அவர்கள் கேட்க, நான் உமர் என்றார்கள், அதன் பின்பு அங்கு வந்த உதுமான் (رضي الله عنه) அவர்களும் தமது பெயரைக் கூறியே அனுமதி பெற்றார்” என அபூ மூஸா அல் அஷ்அரி (رضي الله عنه) அறிவிக்கின்றார். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி, முஸ்லிம்)

”எனது தந்தைக்கு இருந்த கடன் விடயமாக, நான் நபி (ﷺ) அவர்களிடம் வந்து, (அவர்களது வீட்டுக்) கதவைத் தட்டினேன். (வீட்டிற்குள்) இருந்த நபி (ﷺ) அவர்கள் (கதவைத் தட்டுவது) யார் எனக் கேட்டார்கள். நான் தான் என்று கூறினேன். அதற்கு நபி (ﷺ) அவர்கள், நான் தான் ”என்றால் யார்” என்று அதிருப்தியுடன் கேட்டார்கள்” என ஜாபிர் (رضي الله عنه) அறிவிக்கின்றார். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், மற்றும் திர்மிதீ)

”நபி (ﷺ) அவர்களுடன் நான் சென்ற இடத்தில் ஒரு பாத்திரத்தில் பால் இருந்தது. நபி (ﷺ) அவர்கள், அபூஹுரைராவே, திண்ணைத் தோழர்களை இங்கே அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள். நான் திண்ணைத் தோழர்களிடம் சென்று அவர்களை அழைத்து வந்தேன். அவர்கள் வந்ததும் நபி (ﷺ) அவர்களிடம் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்” என அபூஹுரைரா (رضي الله عنه) அறிவிக்கின்றார். (நூல்: புகாரி)

”இரவில் நபி (ﷺ) அவர்கள் தமது வீட்டிற்குத் திரும்பி வரும் வேளையில், கண் விழித்திருப்பவர்களுக்கு (மட்டும்) கேட்கும் படியாகவும் தூங்குபவர்கள் எழுந்து விடாத முறையிலும்,  ‘ஸலாம்” கூறுவார்கள்” என மிக்தாத் (رضي الله عنه) அறிவிக்கின்றார். (நூல்: முஸ்லிம்)

”ஒரு மனிதன் தனது வீட்டிற்குள் நுழையும் போது, யா அல்லாஹ்! நல்ல முறையில் நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகின்றேன். இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகின்றோம். உன் திருப்பெயர் கொண்டே வெளியேறுகின்றோம். எங்களின் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைக்கின்றோம் என்று கூறிவிட்டு அதன் பின்னர் தன் வீட்டில் உள்ளவர்களுக்கு ‘ஸலாம்” கூறட்டும் என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்” என அபூ மாலிக்கில் அஷ்அரி (رضي الله عنه) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)

(பிறர் வீட்டினுள் செல்ல) அனுமதி கேட்பது மூன்று தடவையாகும். உங்களுக்கு (மூன்று தடவைகளுக்குள்) அனுமதி வழங்கப்பட்டுவிட்டால், (அவ்வீட்டில் நுழையலாம்) அவ்வாறு அனுமதி வழங்கப்படவில்லை எனில், திரும்பிச் சென்று விடுங்கள் என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்” என அபூ-மூஸா அல் அஷ்அரி (رضي الله عنه) அறிவிக்கின்றார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, முஅத்தா, அபூதாவூது மற்றும் திர்மிதீ)

Follow us to get more useful articles like this soon. Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply