பெருநிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த நம்பிக்கையற்ற வழக்குகள் (Antitrust Lawsuits)

2020ல் அமெரிக்க குடியரசு தலைவராக ஜோ பைடன் பதவியேற்ற நாளிலிருந்து அமெரிக்க மென்பொருள் பெருநிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்கள் கையாண்ட ஏகபோக மனப்பான்மைக்கு ஒரு தடங்கல் வந்தது என்றால் அது சரியாக இருக்கும். அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற நுகர்வோர், ஏற்றுமதி பெருநிறுவனங்கள் உலகெங்கும் தங்களின் சந்தைப்படுத்தலை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு நாளும் நாமும் இவர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இவர்களின் வாடிக்கையாளர்கள் அல்லது பயனாளர்கள் இப்பெருநிறுவனங்களின் ஏகோபோக உரிமைகளுக்கு நமக்குத் தெரியாமலேயே ஆளாகி இருக்கிறோம்.

2023 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். அதற்கு தலைப்பு கூட “Modi & US” என்று வைத்திருந்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் உரையாடினார். அப்போது AI என்பதற்கு Artificial Intelligence இல்லை, அது America – India என்று புது விளக்கத்தைக் கொடுத்தார். இந்தப் பயணத்தில் அமெரிக்க மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதன்மை அலுவலர்கள் (CEO) உடன் கலந்துரையாடல் கூட்டம் கூட நடத்தினார். “இந்தியா ஒரு திறந்த விளையாட்டு அரங்கம். இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் விளையாடிக் கொள்ளுங்கள்” என்றார்.

உலக நாடுகளில் இப்படி ஒரு வரவேற்பு இந்நிறுவனங்களுக்கு தாராளமாக கிடைக்கும் என்றால் அது அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி‌யான ஒரு வாய்ப்பு.

இப்படி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு விளையாட்டை அமெரிக்க மண்ணில் அந்நிறுவனங்கள் விளையாடிவிட முடியாது என்பது தான் உண்மை. அமெரிக்காவில் மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்திலும் விருப்பத்திற்குரிய ஆட்டத்தை ஆடிவிட முடியாது. ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான், மெட்டா (பேஸ்புக் தலைமை நிறுவனம்) போன்ற பெருநிறுவனங்கள் மீது அமெரிக்க சட்ட அமைச்சகம் 2020 – 24 காலக்கட்டத்தில் “நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மை” (Antitrust lawsuits) வழக்குகளைத் தொடர்ந்தது.

எதற்காக இந்த வழக்குகள்? இந்த வழக்குகளால் பயனாளர்களுக்கு என்ன பயன்? இந்நிறுவனங்கள் எவ்வாறு இதனை எதிர்கொண்டன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

1. ஆப்பிளின் ஏகபோக உரிமை

உலகெங்கும் ஆப்பிள் திறன்பேசி, மடிக்கணினி பயன்படுத்துவோர் நடுவே அவர்கள் சமூகத்தில் உயரிய செல்வாக்கு படைத்தவர் என்ற ஒரு மாயத் தோற்றம் உண்டு. ஒருவகையில் இவர்கள் பெருமைப் படுவதற்கு முதன்மையான காரணங்களும் இருக்கின்றன. ஆப்பிள் திறன்பேசியின் இயங்குதள தொழில்நுட்பம் அதன் தனித்துவமான வடிவமைப்பு, உயர் அடுக்குப் பாதுகாப்பு, கண்கள் கவரும் தோற்றம் மற்றும் பிற கைபேசியில் இருந்து ஆப்பிள் வேறுபட்டு இயங்குவது அதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

பிற திறன்பேசிகளோடு ஒப்பிடுகையில் ஆப்பிள் திறன்பேசிகள் எளிதில் செயலிழப்பு செய்ய முடியாது. அதோடு திறன்பேசியின் தனியொருவரின் தனிப்பட்ட (Privacy) தரவுகள் சிறப்பாகப் பாதுகாக்கப் படுகிறது. திறன் பேசி அருகில் இல்லை என்றாலும் ஆப்பிள் திறன் மணிக்காட்டி (Apple Watch) கையில் இருந்தால் பேரிடர் காலத்தில் பயனாளர்கள் உதவி கோர முடியும்.

இச்சிறப்பம்சங்களையும் தொழில்நுட்பத்தையும் பல ஆண்டுகளாக ஆப்பிள் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. தனது பயனாளர்கள் எளிதில் ஆப்பிள் தளத்தை விட்டு வெளியே எதையும் வாங்க முடியாத அளவுக்கு அதின் நிரல் மொழிகள் வடிவமைப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பயனாளர்கள் அதிக விலை கொடுத்து பிற சேவைகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் .

ஆப்பிள் திறன் பேசி வைத்திருப்பவர்கள் வேறு நிறுவனங்கள் உற்பத்தி செய்த திறன் மணிக்காட்டி (Smartwatch) கையில் மாட்டி இருப்பதைப் பார்த்திருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் அவர்கள் சில காலம் கழித்து ஆப்பிள் திறன் (Apple Watch) மணிக்காட்டிக்கு மாறி விடுவார்கள்.

இதேபோல் மின் பணப் பரிமாற்றம் செய்வதாகும். ஆப்பிள் வடிவமைத்து இருக்கும் Apple Pay -க்கு தனது வாடிக்கையாளர்களை தள்ளும் நிலைக்கு அது உள்ளது. நேரடியாக வங்கிகள் அல்லாத மூன்றாவது ஆட்கள் நடத்தும் பணப் பரிமாற்றம் நிகழ்வது ஆப்பிள் திறன் பேசியில் கிடையாது.

ஆப்பிள் பயனாளர்கள் தங்களின் செயலிகளை App Store மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவார்கள். திறன் பேசியில் உள்ள அனைத்து செயலிகளும் கட்டணம் இல்லாமல் இயங்குவது கிடையாது. சில செயலிகளுக்கு மாதாந்திர கட்டணம் கடன் அட்டை வழியாக பெறும் வகையில் அந்தந்த செயலிகளை இயக்கும் நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளும்.

பயனாளர்கள் செலுத்தும் கட்டணங்கள் முழுவதும் செயலிகளை இயக்கும் நிறுவனங்களுக்கு செல்லாது. ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் ஆப்பிள் பங்கு பெற்றுக் கொள்ளும்.

உலகெங்கும் (2K kids) ஈராயிரக் குழவிகள் (Generation Z சுருக்கமாக “Gen – Z”) நடுவே புகழ்பெற்ற ஓர் இணைய காட்சி விளையாட்டு fortnight என்று சொல்லலாம். இதனை வடிவமைத்து இயக்குவது Epic Games நிறுவனம் ஆகும். ஆப்பிள் திறன்பேசியில் மட்டும் உலகெங்கும் 1 பில்லியன் Epic Games விளையாட்டு செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு விளையாடப்படுகிறது. இந்த ஒரு விளையாட்டு செயலியில் இருந்து மட்டும் ஆப்பிள் 15% முதல் 30% வரை விற்பனைப் பங்கு (Commission) வாங்கிக் கொள்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு $15 பில்லியன் டாலர்கள் முதல் $20 பில்லியன் டாலர்கள் வரை ஆப்பிள் பெற்றுக் கொள்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தப் போக்கு பிற செயலிகளை இயக்கும் நிறுவனங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தியது. 2022ல் Epic Games நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.

உடனடியாக ஆப்பிள் நிறுவனமும் இதற்கு எதிர்வினை ஆற்றியது. முறையே இவ்வாறு பெறப்படும் கட்டணம் ஆப்பிள் பயனாளர்களை இணையத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவே பயன்படுத்தப்படுகிறது என்று கூறியது.

இந்த ஏகபோக மனப்பான்மை விளையாட்டை ஆப்பிள் நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளாக செய்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சில மாநிலங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். முறையே இதற்கு சரியான நேரம் 2023 டிசம்பர் மாதத்தில் வந்தது.

ஆப்பிள் திறன் பேசியின் iMessage அதன் பயனாளர்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஒன்று. Android தளத்தில் இச்செயலி இயங்காது. ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்களுடன் ஒரே நேரத்தில் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், குறுஞ்காட்சிகளை பரிமாற்றிக் கொள்ள இதனைப் பயன்படுத்துவார்கள். இதற்கு Blue Chat Bubble என்ற புனைப்பெயர் உண்டு. நாம் பறிமாறிக் கொண்ட குறுஞ்செய்தியை மற்றொருவர் பார்த்து படித்து விட்டாரா என்பதை உணர்த்த Text ஆனது நீல வட்டக் குறியீடாக மாறிவிடும். இதில் பரிமாறப்படும் தகவல்களை ஆப்பிள் கூட பார்த்து விட முடியாது. ஏனெனில் இது “end to end encryption” முறையில் கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

ஒருவேளை ஆப்பிள் திறன் பேசி இல்லாத ஆண்ட்ராய்டு பயனாளரின் (Phone Number) ஒருவர் இதில் இணைக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பினால் அந்த செய்தியின் கீழ் பச்சை வட்டக் குறியீடு போட்டு காட்டிவிடும் iMessage செயலி. அதுமட்டுமின்றி ஆண்ட்ராய்டு தகவல் தொடர்பு முறை ஆப்பிளின் iOS இயங்குதளத்தில் உள்ளே வரும் போது சிக்கல் ஏற்படுத்தும் .

“ஆண்ட்ராய்டு ஆட்களே உங்களுக்கு தான் வாட்ஸ்அப் இருக்கே… அங்க போய் விளையாடுங்க… நீங்க எல்லாம் ஏன் ஆப்பிளுக்கு வர்றீங்க” என்று ஏளனம் செய்யும் போக்கு ஆப்பிள் திறன் பேசி பயன்படுத்துவோருக்கு உண்டு.

iOS and Android – இவ்இரண்டு இயங்குதளமும் பழைய தகவல் தொடர்பு முறையில் தான் Text‌ message தகவல் பரிமாற்றம் செய்து கொள்கிறது. SMS – Short Message System ஆம், பழைய குறுஞ்செய்தி முறை.

நோக்கியா கைபேசியில் ஒவ்வொரு பொத்தானையும் அழுத்தி குறுஞ்செய்தி அனுப்பி இருப்போம். எதிரில் உள்ளவர் படித்தாரா, நமது தகவல் அவருக்குச் சென்றடைந்ததா என்பது எதுவும் அனுப்பியவருக்குத் தெரியாது. SMS என்பது Low Bandwidth ல் செல்லக்கூடியது, இணையம் தேவையில்லை.

இணையம் பரவலாக கிடைக்கத் தொடங்கிய காலத்தில் தான் WhatsApp செயலியும் பயன்பாட்டிற்கு வந்தது அல்லவா! இதே காலகட்டத்தில் தான் iMessage செயலியை ஆப்பிள் பயனாளர்கள் மட்டும் பயன்பெறும் வகையில் ஆப்பிள் அறிமுகம் செய்தது.

இன்றளவும் SMS வழியில் குறுஞ்செய்தி பரிமாற்றம் பாதுகாப்பு இல்லாதது தான். இவ்வழியில் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடங்கி அரசு இயந்திரம் வரையில் நம்மை உளவு பார்க்க முடியும். இன்னும் ஒருபடி மேலே சென்று இப்படி கூறினால் மென்பொருள் தாக்குதல் கூட (Heck) செய்து விட முடியும். end to end encryption -ல் hacking முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு திறன் பேசியில் ஏன் iMessage செயலி இயங்கவில்லை? இந்தக் கேள்வி பலருக்கும் வந்திருக்கிறது. ஒருமுறை ஆப்பிள் முதன்மை அலுவலர் Tim Cook ஒரு மேடையில் இதே போன்ற ஒரு கேள்விக்கு, “iMessage ல் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாட வேண்டுமென்றால் யாரிடம் iPhone இல்லையோ அவர்களை iPhone க்கு மாற்றிவிடச் சொல்லுங்கள்.” என்று வேடிக்கையாகப் பதிலளித்தார்.

2023 டிசம்பர் மாதம் Beeper messenger என்ற ஒரு இணையவழி குறுஞ்செய்தி செயலி iOS இயங்குதள தொழில்நுட்பத்தில் பரிமாற்றிக் கொள்ளப்படும் தகவலை reverse engineering முறையில் Android இயங்குதளத்தில் செயல்படும் வகையில் சில மாற்றங்களைச் செய்து Mini Beeper என்ற பெயரில் புதிய குறுஞ்செய்தி செயலியை வடிவமைப்பு செய்து வெளியிட்டது. Min beeper செயலி வழியே iMessage செயலிக்கு உரையாடல்கள் பரிமாறிக் கொண்டால் அது Blue Text Bubble ஆக மாறிவிடும்.

காட்டுத்தீ போல Mini Beeper செயலியின் பயன்பாடு பரவியது. வெளியாகிய இரண்டு நாட்களில் 100,000 செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

ஆப்பிளுக்கு விவரம் தெரிந்தது. இரண்டு நாட்களில் Beeper செயலியை App Store -ல் இருந்தது நீக்கியது ஆப்பிள்.

“இப்படி தன்னிச்சையாக ஏகோபித்த உரிமைகளை ஆப்பிளுக்கு யார் கொடுத்தது?” போட்டியாளர்கள் தங்களின் தளத்தில் இருந்து நீக்குவது நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது என அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக Antitrust lawsuits வழக்கு தொடர வேண்டும் என்று அமெரிக்க ஒன்றிய பரிமாற்ற ஆணையத்திற்கு வழிகாட்டினர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக சேகரித்த தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க நீதித்துறை மார்ச் மாதம் 20204ல் ஆப்பிள் மீது வழக்கு தொடர்ந்தது.

“The lawsuit wrong on the facts of the law, it will vigorously defend against it” – என்று ஆப்பிள் கூறி வழக்கை எதிர்கொள்வோம் என்கிறது

இவ்வாறான ஏகோபித்த உரிமைகளைக் கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 2024 ஆம் ஆண்டின் இறுதியில் $3.46 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

2. மைக்ரோசாஃப்டின் ஏகோபித்த விளையாட்டு

80-களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 90 -களில் பெருவாரியான பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 2000 இந்த காலக்கட்டத்தை “கணினியின் பொற்காலம்” என்றே அழைக்கலாம். அதற்கு மைக்ரோசாஃப்ட் முதன்மையான ஒரு காரணம். எளிய வகையில் எல்லோரும் கையாளும் வகையில் அதன் வடிவமைப்பு இருந்து. அன்றைய காலகட்டத்தில் உலகெங்கும் கணினிகள் எல்லாம் Windows Operating System மூலமாவே இயங்கியது. 2023ல் நடந்த ஆய்வின் படி தற்போது கூட 70% விழுக்காட்டிற்கு மேல் கணினிகள் Microsoft Windows Operating System கொண்டவை ஆகும். Microsoft word, spreadsheet, PowerPoint, Media Player போன்ற மென்பொருள்கள் இருந்தது. இதைப் பயன்படுத்தாமல் ஒருவர் கணினி இயக்கி இருக்கவே முடியாது.

அதோடு நின்றதா? அரசு வங்கி ஊழியர்கள் தங்களின் விருப்ப விளையாட்டாக Microsoft Solitaire -ஐ விளையாடுவார்கள். அது அவர்களுக்கு மன அழுத்தத்தை நீக்கி இருக்கலாம். ஆனால் நம்மைப் போன்ற வாடிக்கையாளர்களுக்கு அந்தச் சூழல் மன உளைச்சலுக்கு இழுத்துச் சென்றிருக்கிறது.

கூகுள் இயங்குதளம் வருவதற்கு முன் மைக்ரோசாஃப்ட்டின் Windows Explorer தான் பெருவாரியான இணைய தேடல் தளமாக இருந்தது. எந்த ஒரு கணினித் திரையைத் திறந்தாலும் “கதவைத் திற காற்று வரட்டும்” என்பது போல் Windows Explorer கணினியின் முகப்பில் வந்து நிற்கும்.

“கட்டழகுக்கு ஓர் பட்டியலிட்டு
காட்டுது இன்டர்நெட்டு

மனசை விட்டு மௌசை தட்டு
மாத்திடும் பதினெட்டு

கம்யூட்டரில் காதல் செய்யும்
காலம் இது”

என்று கவிஞர்கள் அப்போது பாடல்கள் எழுதினார்கள்.

அதற்கு ஏற்ப தொண்ணூறுகளின் (90s Kids) குழவிகள் Interest Cafe -ல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் internet explorer மூலம் எதையோ தேடிக்கொண்டு இருந்தனர்.

மைக்ரோசாஃப்ட் பெருநிறுவனமாக வளர்ச்சி பெற அதற்கு பல சிறு நிறுவனங்களின் பங்கு இருக்கிறது. இதுவரையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கிட்டத்தட்ட 200 -க்கும் மேற்பட்ட சிறிய – நடுத்தர மென்பொருள், வன்பொருள், இணையவழி ஊடக விளையாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துதல் (Acquisitions) அல்லது இரண்டு நிறுவனங்களை மைக்ரோசாப்ட் பெயரில் ஒன்றிணைந்து (Mergers) இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்கதாக LinkedIn, Skype கையகப்படுத்துதலைக் கூறலாம். தற்போதுள்ள காலத்தில் Skype பெயரே பலரும் மறந்து இருக்கலாம். இத்தனை ஆண்டுகளாக மிகவும் எளிதில் கையகப்படுத்தும் மைக்ரோசாப்டின் ஏகோபோக உரிமைகளுக்கு 2022ல் ஒரு சிக்கல் வந்தது.

மென்பொருள் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வரும் வேளையில், மென்பொருள் துறையில் எல்லோரும் ஒரே விதமாக விளையாடும் ஒரு களத்தை பெருநிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.

2022 -ஆம் ஆண்டு சனவரி மாதம் கலிபோர்னியாவில் செயல்பட்டு வந்த Activision Blizzard என்ற இணையவழி காட்சி (Video Games) விளையாட்டு நிறுவனத்தை $69 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்னர் இணையவழியில் பரவலாக விளையாடப்பட்ட Candy Crush விளையாட்டை வடிவமைப்பு செய்தது இதே நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் Call of duty என்ற இணையவழி காட்சி (Video Game) விளையாட்டு உலகெங்கும் புகழ்பெற்ற விளையாட்டு.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினால் ஏற்கெனவே மிகவும் புகழ்பெற்ற Xbox இணையவழி காட்சி விளையாட்டு பெட்டகம் இருக்கிறது. இதனுடன் மென்மேலும் புகழ்பெற்ற இணையவழி காட்சி விளையாட்டுகளை இணைத்து, (“ஒரே நிறுவனம் – ஒரே விளையாட்டு பெட்டகம்”) மைக்ரோசாப்ட் ஒண் என்ற ஒற்றைக் குடையின் கீழ் இயங்கினால் அது பயனாளர்களுக்குத் தான் எதிராக அமையும்.

அமெரிக்காவில் சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் (Federal Trade Commission) ஒன்றிய பரிமாற்ற ஆணையம் தாமாக முன்வந்து (Anti Competitive Case) வழக்கு தொடர்ந்தது. சந்தையில் போட்டியாளர்களே இல்லாத ஒரு நிலையை மைக்ரோசாப்ட் ஏற்படுத்துகிறது என (FTC) அமெரிக்க ஒன்றிய பரிமாற்ற ஆணையத்தின் தலைவர் லீனா கான் தெரிவித்தார். இது முறையே ஏகபோக உரிமக்கு வழிவகுக்கும் என்றார்.

அமெரிக்கா மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்திலும் Microsoft – Activision Blizzard இரண்டு நிறுவனங்கள் ஒன்றிணைத்து (Mergers) செயல்படும் முறைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மைக்ரோசாஃப்ட் தனது பக்கம் உள்ள நன்நெறி, வாய்மை, எல்லாவற்றையும் நீதிமன்றத்தில் வாதிடுவோம் என்றது. இணைய காட்சி விளையாட்டை உலகெங்கும் கொண்டு செல்வது தான் மைக்ரோசாஃப்டடின் நோக்கம், இதனால் பயனாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது மைக்ரோசாஃப்ட் தெரிவித்தது.

பல தரப்பட்ட வாதங்களுக்கு பிறகு சூலை 11, 2023ல் வழக்கின் தீர்ப்பு வந்தது. வழக்கு தொடர்ந்த ஒன்றிய பரிமாற்ற ஆணையம் (Federal Trade Commission) இவ்விரண்டு நிறுவனங்கள் இணைவதால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகள் பற்றிய போதிய காரணங்கள் தெரியவில்லை, எனவே Microsoft – Activision Blizzard இணைவதற்கு எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து வருகிறது அமெரிக்க ஒன்றிய வணிக ஆணையம்.

Microsoft – Activision Blizzard -ஐ $69 பில்லியன் டாலர்களுக்கு சட்டபடி வாங்கியது உறுதியானது. தகவல் தொழில்நுட்ப சந்தையில் மிக அதிக விலையில் ஒப்பந்தம் ஆனது இதுவே ஆகும்.

2024 ஆம் ஆண்டின் இறுதியில் மைக்ரோசாஃப்டின் பங்குச்சந்தை மதிப்பு மட்டும் $ 3.16 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3. அமேசானின் முறையற்ற இணையவழி வணிகம்

கணினித் துறையில் ஒரு புரட்சியை எப்படி மைக்ரோசாப்ட் ஏற்படுத்தியதோ அதே போல் இணையவழி வணிகத்தில் (e-commerce) ஒரு புரட்சியை ஏற்படுத்தியது அமேசான் தான் என்றால் அது மிகையாகாது. இணையவழி வணிகத்திற்கு விதை போட்டது அமேசான். அமேசான் தளத்தை உருவாக்கிய Jeff Bezos -ன் அறிவுச் சிந்தனை அபாரமானது.

பொதுவாக அமேசான் என்றால் இணையவழி வணிகம் மட்டுமே அவர்களிடம் உள்ளது என்ற தோற்றம் பலருக்கும் உண்டு. ஆனால் அமேசானின் பெருவாரியான வருவாய் இணையவழி வணிகத்தைக் கடந்து பிற சேவைகள் வழியாகப் பெறுகிறது.

உதாரணமாக அவர்களின் AWS என்றழைக்கப்படும் Amazon Web Service பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தகவல் சேமிப்பு மற்றும் Cloud Service -ஐ வழங்குகிறது. இணையதள வடிவமைப்பு சேவைகள் செய்கிறது, இதில் ஒன்றிய அரசின் இணைய சேவைகளும் அடங்கும். அமேசான் துல்லிய நூல்களின் களஞ்சியம் (Kindle), இணையவழி காட்சி ஊடகம் (Amazon Prime), அமேசானின் காட்சி சமூக வலைத்தளம் (Twitch), விண்வெளி துறைக்காக விண்வெளிக் கலன் உற்பத்தி செய்யும் Blue Origin, தானியங்கி இயந்திரங்கள் செய்யும் Amazon Robotics, மளிகைக் கடை பெரு அங்காடியான Whole Foods, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனமான One Medical நிறுவனத்தை அமேசான் வாங்கியதன் மூலம் Amazon Pharmacy, அமெரிக்க முன்னணிப் பத்திரிகையான The Washington Post இப்படி பல துறைகளில் கால் பதித்து இருக்கும் அமேசான், சிகை அலங்காரம் செய்யும் துறையைக் கூட விட்டுவைக்காமல் Amazon Salon என்று முடித் திருத்தும் கடையை கூட திறந்து இருக்கிறது.

எதிர்காலத்தில் வளர்ந்த நாடுகளில் பெட்டிக் கடையை வாங்கினாலும் வியப்புக்குரியதாக இருக்காது.

அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் தங்கள் இணையவழி வணிகத்தைத் துவங்கியது அமேசான். இணையதளத்தின் வேகமாக வளர்ச்சி மக்கள் எதையும் எளிதாக இணையத்தில் வாங்குவதற்கு வழி வகுத்தது. பேரம் பேசுதல் என்ற முறையை ஒழித்துக் கட்டியது இவ்வகை வணிகம். அமேசான் இணையதளத்தில் காட்டும் விலையில் சில நேரங்களில் தள்ளுபடி விலையில் கூட மக்கள் வாங்கப் பழக்கப்பட்டார்கள். சந்தை விலையை விடக் குறைவான விலையில் அமேசான் சில நேரங்களில் விற்பனை செய்தது.

அமேசான் இணையதளத்தில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று கூறலாம். நேரடி விற்பனையாளர்கள், மூன்றாவது விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள் என பல்வேறு விற்பனையாளர்கள் அமேசானில் உண்டு. இவ்வாறான விற்பனையாளர்கள் அமேசான் தளத்தில் கிடைக்கும் வருவாயில் சிறிய பங்கு கொடுக்க வேண்டும்.

வருவாயில் பங்கு மட்டுமல்லாது தங்களின் பொருட்களை அமேசான் இணையதளத்தில் பட்டியலிடவே அமேசானுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை அமேசான் தனக்கு ஏற்றாற் போல் உயர்த்தி இருக்கிறது.

அமேசான் தளத்தில் வரும் விளம்பரங்கள் மூலமாகவும் விற்பனையாளர்களிடம் சிறிய தொகையைப் பெறுகிறது. உதாரணமாக ஒருவர் Dell laptop மடிக்கணினி வாங்குவதாக தட்டச்சு செய்தால், Dell Laptop அடங்கிய குறுங்காட்சி காணொளி காணக் கிடைக்கும். விற்பனை செய்வதற்காக உத்தியாக இது இருந்தாலும், இந்த காணொளி ஓடுவதற்கு Dell Laptop – ஐ விற்பனை செய்யும் நிறுவனம் அமேசானுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

அமெரிக்காவில் மட்டும் அமேசான் 40% இணையவழி வணிகத்தைக் கட்டுப்படுத்துகிறது.

Amazon Basics, Amazon Essentials என்ற மேற்கோள்களை காட்டி நுகர்வோர்கள் எதைத் தேடினாலும் அதில் அமேசானின் பொருட்களை திரையில் காட்டும். நுகர் பொருட்களின் தேவை உயர்வாக உள்ள நேரத்தில் அதன் விலையை செயற்கையாக உயர்த்திக் காட்டும் நிரல் மொழி அமேசான் தளத்தில் இருந்திருக்கிறது.

சிறிய மற்றும் பெரிய நகரங்களில் அமேசானின் பண்டகசாலை (Warehouse) பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டு செயல்படும். இதனை Amazon Fulfillment center என்று அமேசான் அழைக்கிறது. மூன்றாவது விற்பனையாளர்கள் தங்களின் பொருட்களை இவ்வகை பண்டகசாலைக் கிடங்கில் சேமித்து வைக்க வேண்டும் என்று அமேசான் நிபந்தனை செய்திருக்கிறது. மூன்றாவது விற்பனையாளர்கள் வழங்கும் கட்டணம் மட்டுமே $33 பில்லியன் டாலர்களை வருவாயாகப் பெற்றிருக்கிறது.

அமேசானின் இந்த ஏகோபித்த உரிமைகளை எதிர்த்து 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள 17 மாநிலங்களில் வழக்கு தொடர்ந்தனர். அதோடு அமெரிக்க ஒன்றிய பரிமாற்ற ஆணையமும் வழக்கு தொடர்ந்தது. FTC -ன் தலைவர் லீனா கான் பதவியேற்ற நாளிலிருந்தே இப்பெரு நிறுவனங்கள் அவர் மீது சினம் கொண்டார்.

“அமெரிக்கா முழுவதும் நாளொன்றுக்கு மில்லியன் கணக்கான மக்கள் அமேசான் இணையதளத்தில் பொருட்கள் வாங்குகிறார்கள், ஆயிரக்கணக்கான சிறு வணிகர்கள் அமேசான் தளத்தில் தங்களின் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அமெரிக்க மக்களுக்களை அதிக விலை கொடுத்து வாங்கும் வகையில் அமேசான் செயல்பட்டு வந்திருக்கிறது” என்றார் லீனா கான்.

சட்டத்திற்கு உட்பட்டு அமேசான் இயங்கிக் கொண்டிருக்கிறது, ஒன்றிய பரிமாற்ற ஆணையம் கூறுவதில் உண்மை இல்லை என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை இன்னும் தொடங்கவில்லை.

2024 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் அமேசான் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு $ 2.38 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகளை ஜோ பைடன் அரசு வரையறை செய்தது. விதிமுறைகள், கட்டுப்பாடுகள் எதுவும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு பிடிக்காது அல்லவா?

2024 அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் பரப்புரையில் ‘எளிதாக தொழில் நடத்த கடுமையாக இருக்கும் விதிமுறைகளை தகர்த்துவோம்’ என்று டொனால்ட் டிரம்ப் அடிக்கடி கூறினார். தேர்தல் முடிவுகள் வெளியானது. ஜனநாயக கட்சி தோல்வியைத் தழுவியது. தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் அமெரிக்க பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. ஒன்றிய பரிமாற்ற ஆணையத்தின் தலைவர் லீனா கான் விரைவில் அப்பதவியில் இருந்து வெளியேறுவார். பெருநிறுவனங்களின் ஏகபோக மனப்பான்மை இனி வழக்கம்போல தொடரலாம்.

References;

https://apnews.com/article/amazon-ftc-lawsuit-antitrust-1b91bf8026cc3edf81e817cf8596c4bf

https://apnews.com/article/apple-antitrust-monopoly-app-store-justice-department-822d7e8f5cf53a2636795fcc33ee1fc3

https://apnews.com/article/technology-microsoft-corp-europe-united-kingdom-business-021289492e95ad2bf955879fd0ab4eef

– பாண்டி

நன்றி

Leave a Reply

error: Content is protected !!