மனித செயல்திறனை அதிகரிக்க விரைவில் இயந்திர உறுப்புகள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பெருவிரல் முதல் இயந்திரக் கை வரை இத்தகைய உறுப்புகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு கைக்குழந்தையைக் கவனிக்கும் நேரத்தில் அல்லது ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடக்கும் சமயத்தில் அல்லது வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை விருந்து தயாராகும் வேளையில் அல்லது இதுபோன்ற பல சமயங்களில் கூடுதல் உறுப்புகள் மனிதர்களுக்குப் பேருதவியாக அமையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
திறனை அதிகரிக்க உதவும் உறுப்புகள்
இந்தக் கண்டுபிடிப்பு பல துறைகளில் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க உதவும் என்று கேம்பிரிட்ஜ் எம் ஆர் சி மூளை நரம்பியல் பிரிவின் பேராசிரியர் டாமர் மாக்கின் (Prof Tamar Makin) கூறுகிறார். சமைத்துக் கொண்டிருக்கும்போது செயற்கைக் கையின் உதவியுடன் ஒருவர் ஒரு பக்கம் காய்களை நறுக்கியபடியே மற்றொரு பக்கம் சூப் தயாரிக்கலாம். விரும்பும் நேரத்தில் செயற்கைக் கையைப் பொருத்தி அதைத் தனியாக இயக்க முடியும்.
எவருடைய கையிலும் பொருத்திப் பயன்படுத்தக் கூடிய முப்பரிமாண வடிவமைப்புடன் கூடிய செயற்கைப் பெருவிரலை (3D thump) இதே பல்கலைக்கழகத்தின் மற்றொரு நரம்பியல் பேராசிரியர் டானி குளோட் (Prof Dani Clode) கண்டுபிடித்துள்ளார்.
இந்த புதிய கருவி பற்றி சமீபத்தில் வாஷிங்டனில் நடந்த அமெரிக்க மேம்பாடடைந்த அறிவியல் சங்கத்தின் (American Association of Advanced Sciences AAAS) வருடாந்திரக் கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டது.
உணவகங்களில் உணவு பரிமாறுபவர்கள் சாப்பாட்டுத் தட்டுகளைக் கையாள, மின் வேலை செய்பவர் வேலையின்போது மின்கம்பிகளைப் பற்ற வைக்க செயற்கைப் பெருவிரல் உதவும். மரவேலை செய்பவர் சுத்தியலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு பக்கம் ஆணி அடிக்க செயற்கைக் கை உதவும்.
வேலை பார்க்கும் இடங்களில் தேவைப்படும் தொழிலிற்கு ஏற்றமாதிரி இது போன்ற இயந்திர உறுப்புகளை உருவாக்க முடியும்.
ஒரு நிபுணர் நோயாளிக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யும்போது அதற்கு உதவும் கேமராவை செயற்கைக் கையின் உதவியுடன் அவரே பிடித்துக் கொண்டு சிகிச்சையை வெற்றிகரமாக செய்யலாம். உதவியாளர் கேமராவை பிடித்துக் கொண்டிருப்பதை விட மருத்துவரே அதைக் கையாள்வதால் கூடுதல் துல்லியத் தன்மையுடன் சிகிச்சை செய்ய முடியும்.
தன் இரு கைகளாலும் அவர் மற்ற கருவிகளைப் பயன்படுத்தும்போது இந்த கூடுதல் கை கேமராவை சுதந்திரமாக இயக்க அவருக்கு உதவியாக அமையும்.
தனிக்கருவி ஒன்றை விட இது போன்ற செயற்கை உறுப்புகள் அதைக் கையாள்பவருக்கு அதன் மீது முழுக்கட்டுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. உடலின் இயற்கையான இயக்கங்களுடன் செயற்கை உறுப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதால் இவற்றைக் கையாள்பவரின் திறன் பல மடங்கு அதிகரிக்கிறது.
இயக்குபவரின் முழு விருப்பப்படி செயற்கை உறுப்பை கூடுதல் துல்லியத் தன்மையுடன் இயக்க முடியும். இதனால் செயல்திறன் மேம்படுகிறது. குறிப்பிட்ட தனிநபரின் செயல்திறனுக்கு ஏற்ப கூடுதல் உறுப்புகளைப் பொருத்திக் கொள்ள முடியும். இழக்கப்பட்ட கைக்கு பதில் ஒருவருக்கு செயற்கைக் கையைப் பொருத்த முடியும்.
பயன்படுத்துபவரின் இயல்பான திறன்களை இத்தகைய செயற்கை உறுப்புகள் பாதிப்பதில்லை என்பது இவற்றின் தனிச்சிறப்பு என்று டானி கூறுகிறார். இந்த உறுப்புகள் நமது உடலில் ஒரு மேலடுக்கு போலவே இருந்து செயல்படுகின்றன.
இதனால் இவை உடலின் இயல்பான உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 98% பேர் பொருத்தப்பட்ட முதல் நிமிடத்திற்குள் செயற்கைப் பெருவிரலை பயன்படுத்தினர்.
பலருடைய மேற்கையில் செயற்கைப் பெருவிரல் இணைக்கப்பட்டு காலுறைகள் அல்லது கணுக்கால் முட்டிகளில் அவற்றைக் கட்டுப்படுத்தும் நுண் கட்டுப்பாட்டுக் கருவிகள் (micro processors) பொருத்தப்பட்டு மின்கலன் மூலம் இயங்கும் சவால் நிறைந்த இரண்டு மோட்டார்களை இயக்குமாறு கோரப்பட்டது. இவர்கள் பாதத்தில் அழுத்த உணரிகள் இணைக்கப்பட்டு ஆராயப்பட்டது. இதில் பெரும்பாலோனோரும் மோட்டார்களை சுலபமாக இயக்கியது கண்டறியப்பட்டது.
மூளை அல்லது முதுகுத் தண்டில் மின் தண்டுகளைப் பொருத்தி செயற்கை உறுப்புகளை உடலில் இணைத்து அவற்றைக் கட்டுப்படுத்துவது பற்றி சில ஆய்வுகள் நடந்து வருகின்றன.
ஆரோக்கியமான மனித உடலில் இது போல மின்தண்டுகளைப் பொருத்துவது தார்மீகரீதியாக கேள்விகளை எழுப்பும் என்று மாக்கின் கூறுகிறார். இலண்டன் ராயல் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் நடந்த கோடை அறிவியல் கண்காட்சியில் இயந்திரப் பெருவிரல் காட்சிக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்கள் அதை இயக்க அனுமதிக்கப்பட்டனர்.
3 முதல் 97 வயது வரையிலான 600 பேரில் 98% பேர் விரலை முதல் நிமிடத்திற்குள்ளேயே இயக்கினர். மனித மூளையில் பொருத்தப்படும் ஒரு சில்லியால் (chip) கூட இதைச் செய்ய முடியாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விரைவில் மனித வாழ்வில் இந்த செயற்கை உறுப்புகள் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
– சிதம்பரம் இரவிச்சந்திரன்
Discover more from SARINIGAR
Subscribe to get the latest posts sent to your email.