‘முக்கிய பேச்சுவார்த்தைக்காக இந்தியா செல்கிறேன்’ – புதினின் நெருங்கிய கூட்டாளி தகவல் | Putin ally says he leaves for India for important negotiations

மாஸ்கோ: முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியா செல்ல இருப்பதாக ரஷ்ய நாடாளுமன்ற கீழ் சபையான ஸ்டேட் டுமாவின் தலைவரான வியாசெஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய கூட்டாளியான வோலோடின் தனது டெலிகிராம் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதுகுறித்து , “இன்று இரவு நாங்கள் இந்தியாவில் இருப்போம். முக்கியமான சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நாளை திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியா ஒரு முக்கியக் கூட்டாளி. அதனுடன் எங்களுக்கு நீண்ட கால நம்பிக்கை மற்றும் பரஸ்பர நன்மை அளிக்கும் ஒத்துழைப்பு உறவுகளும் உள்ளன. அனைத்துத் துறைகளிலும் உறவுகளை வளர்ப்பது அவசியம்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஷ்யாவில் இந்தியர்கள் மாயமான விவகாரம் குறித்துப் பேசியிருந்தார்.

கடந்த 2022 ம் ஆண்டு முதல் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. போர் வீரர்கள் பற்றாக்குறையால் ரஷ்யா வெளிநாட்டவர் பலரை தங்கள் ராணுவத்தில் இணைத்துக் கொள்கிறது. இதன் பின்னணியில் பெரிய மோசடி இருக்கிறது என்று சர்ச்சைகள் எழுந்தன.

இந்தியர்கள் நூற்றுக்கணக்கானோர் ரஷ்ய தரப்பில் போரிட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர்களில் சிலரை விடுவித்து மத்திய அரசு தாயகம் அழைத்து வந்தது. ரஷ்ய ராணுவத்தில் 126 இந்தியர்கள் பணியாற்றியது தெரியவந்தது. அவர்களில், 96 பேர் தாயகம் திரும்பிவிட்டனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் அங்கு இருக்கும் நிலையில், மேலும் 16 பேர் எங்கிருக்கின்றனர் என்ற தகவல் இல்லை.

இந்நிலையி ரஷ்யாவில் காணாமல் போன இந்தியர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், “18 பேரில் 16 பேர் காணாமல் போயுள்ளனர். நாங்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அந்த இரண்டு பேரில் ஒருவர் காயமடைந்தார். அவர் குணமடைந்து விரைவில் திரும்பி வருவார் என்று நம்புகிறோம்.” எனத் தெரிவித்தார்.

இந்தச் சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய கூட்டாளியான வோலோடின் இந்தியா வருவது முக்கியத்துவம் பெறுகிறது. கூடவே பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுத்து வரும் சூழலிலும் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இருப்பினும் இந்தப் பயணம் குறித்து இந்தியத் தரப்பில் எதுவும் அதிகாரபூர்வமாக, உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!