முஸ்லிம் பெண்களுக்கான – ரமழான் டிப்ஸ்
நம்மில் பலர் ஏனைய மாதங்களைப் போன்றே இந்த புனிதமிக்க மாதத்தையும் சராசரியாகவே கழித்து விட்டு போய் விடுகின்றனர்.
அல்லாஹ்வின் (ﷻ) பால் நம்மை நெருக்கிக் கொள்வதற்கான நிறைய வழி முறைகள் இந்த மாதத்தில் உண்டு. நாம் இந்த மாதத்திற்குரிய அட்டவனையை திட்டமிட்டு தொகுத்துக் கொண்டால் ரமழான் மாதத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
01 – இந்த கண்ணியமிக்க மாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் எண்ணம் போல் தான் வாழ்வு.
உறுதி இல்லாமல் ஏனோ தானோ வென்று அந்த மாதத்திற்குள் நுழைந்தால் நாட்கள் சொல்லிக் கொள்ளாமல் அதன் வழியிலே பறந்து விடும். அதனால் அந்த நாட்களை எப்படி பயன்படுத்துவது என்ற எண்ணமும் உறுதியும் மிகவும் அவசியம்.
02 – ரமழான் பிறையை கண்டவுடன் முதல் வேலையாக நாம் எல்லாம் ஸஹர் உணவிற்கான ஏற்பாட்டில் மள மளவென்று இறங்கி விடுகின்றோம். தேவைதான் ஆனாலும் இந்த ரமழானிலிருந்து அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் கொள்வோம்.
ரமழான் பிறை கண்டதும் சாப்பாட்டு ஏற்பாடு வேலைகளை ஒருமணி நேரம் தள்ளி வைத்துவிட்டு எந்த வேலை இருந்தாலும் அதை சற்று ஒதுக்கி வைத்து விட்டு ரமழானை வரவேற்கும் விதமாக முதல் வேலையாக அல்-குர்ஆனை கையில் எடுப்போம் – பிறை தெரிந்தவுடன் குர்ஆன் நம் கைக்கு வந்து விட வேண்டும் – குர்ஆன் இறங்கி இந்த புனித மாதத்தை சிறப்புற செய்தது போல் குர்ஆன் ஓதி இந்த மாதத்தை நாமும் சிறப்புற செய்வோம்.
முதன் முதலில் குறைந்தது 50 வசனங்களையாவது ஓதி அதன் அர்த்தத்தை படித்து முடித்து விட்டு பிறகு ஸஹர் உணவு வேலைக்கு இறங்குவோம். இப்படி நீங்கள் செய்துப் பாருங்கள் இந்த ரமழானில் ஒரு புது அனுபவத்தையும் மன நிம்மதியையும் பெற்றிருப்பதை உணர்வீர்கள்.
03 – இந்த ரமழானில் எப்படியாவது முழு குர்ஆனையும் அர்த்தத்துடன் ஓதி முடித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விடுங்கள்.
04 – ஸஹர் செய்து விட்டு சுபஹ் தொழுகையை தொழாமல் தூங்கி விடும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள். இது பெரும் கவலைக்குரிய போக்காகும்.
அதிகாலையில் வாய்க்கு ருசியாக வயிறு நிரம்ப சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காகவா இறைவன் நோன்பை எமக்கு கடமையாக்கியுள்ளான்?
தயவு செய்து அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இரவு உணவிற்கு பின்னர் ஸஹர் வேலையை முடித்து விட்டு நேர காலத்துடன் உறங்கி விட்டால் (இஷா – மற்றும் இரவுத் தொழுகைக்கு பிறகு தொலைக்காட்சி பார்ப்பதை ரமழானில் கட்டாயம் தவிருங்கள் அது நமது இரவு உறக்கத்தை கெடுத்து நேரத்தை பாழ்படுத்தி நல் அமல்கள் செய்ய முடியாமல் தடுத்துவிடும்) ஸஹருக்கான உணவு நேரத்தில் எழலாம்.
அல்லது உணவை சுட சுட சாப்பிட வேண்டும் என்றால் இன்னும் சற்று நேர காலத்துடன் உறங்கி விட்டு காலையில் மூன்று மணியளவில் எழுந்து சமைக்கலாம். உறக்கம் கிடைத்து விட்டதால் அதிகாலையில் எழுவதற்கு சுறுசுறுப்பாக இருக்கும் உணவும் சூடாக கிடைக்கும் அனைத்திற்கும் மேலாக சுபஹ் தொழுகை தவறாமல் கிடைத்துவிடும்.
05 – ஸஹ்ர் வேளையில் தொலைகாட்சி மற்றும் வானொலியில் இஸ்லாமிய நிகழ்சிகள் தயார் நிலையில் உள்ளன. இரவுத் தொழுகைக்கு பிறகு நேர காலத்தோடு உறங்கி காலையில் எழுந்தால் சமைத்துக் கொண்டே – அல்லது உணவை பறிமாறிக் கொண்டே இந்த நிகழ்சிகள் அனைத்தையும் செவிமடுக்கலாம்.
அதில் நமக்கு நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய இஸ்லாமிய செய்திகள் ஏராளமாக கிடைக்கும். ஆனால் நமது வணக்க வழிபாடுகளை ஓரம் கட்டிவிட்டு இந்த நிகழ்சிகளை மாத்திரம் கேட்பதில் எவ்வித பயனுமில்லை.
06 – ஸுப்ஹ்க்கு பின்னர் சற்று தூங்க வேண்டி இருப்பதால் எண்ணெய் அதிகம் உள்ள உணவுப் பண்டங்களை தவிர்க்கலாம். இல்லை எனில் அவை தேவையற்ற கொழுப்பு சத்துக்களை நம் உடம்பில் உருவாக்கி விடும்.
07 – ஸுப்ஹ்க்கு பிறகு வேறு எந்த வேலையும் இல்லையென்றால் சற்று அதிகமாக தூங்கலாம். குழந்தைகளை கவனிக்க வேண்டிய வேலைகள் இருந்தால் நேரத்துடன் எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் நேர முகாமைத்துவம் என்பது நம்மைப் போன்ற குடும்பப் பெண்களை பொருத்த வரை மிகவும் அவசியம்.
08 – ளுஹர் தொழுகை நேரத்தில் உங்கள் வீட்டு சூழ்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். நோன்பு நோற்ற நிலையில் கணவரோ – மகன்களோ – சகோதரர்களோ – தொழாமல் தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு தொழுகையை ஞாபகமூட்டி மஸ்ஜிதுக்கு அனுப்பிவையுங்கள். வீட்டிலிருக்கும் மற்றப் பெண்களையும் உங்களோடு சேர்த்து தொழுமாறு கூறுங்கள்.
09 – ளுஹர் நேரத்திலிருந்து அஸர் தொழுகைக்கான வரை ஓய்வுக்குரிய நேரம் என்பதால் அந்த நேரத்தில் ஒரு பகுதியை குர்ஆனுக்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள். குர்ஆனை ஓதும் போது அதனுடன் தமிழ் விளக்கத்தையும் படித்து அறிந்து கொள்ளலாம்.
10 – அஸர் தொழுகைக்குப் பின்னர் நோன்பு துறக்கும் ஆவலில் சமையல் வேளைகளில் இறங்கி விடுகின்றோம். நீண்ட நேரம் காலி வயிறாக இருந்ததன் பின்னர் மீண்டும் சாப்பிடுவதால் கடினமான உணவையும் எண்ணெய் பண்டங்களையும் நோன்பு திறக்கும் போது தவிர்க்கலாம். இவற்றை நோன்பு திறந்ததன் பின்னர் சற்று நேரம் கழித்து சாப்பிடலாம்.
11 – இது நோன்பு மாதம் என்பதால் நமது வீடுகளுக்கு ஏழை மிஸ்கீன்கள் தவறாமல் வரும் வாய்ப்புள்ளது. சிலர் வீடு தேடி வரும் இந்த ஏழைகள் மீது கோபத்துடன் எரிந்து விழுவார்கள். சிலர் மனம் புண்படும் வகையில் பேசி அனுப்பிவிடுவார்கள். வீடு வீடாக கையேந்திச் செல்லும் இந்த ஏழைகளின் மனம் எவ்வளவு வேதனைப்படும் என்பதை இவர்கள் சிந்திப்பதே கிடையாது.
நாம் கொடுக்கும் ஸதகாவால் நமது வீட்டின் கடன் சுமை அதிகரித்து விடாது. இது நன்மையை வாரி வழங்கும் மாதம் என்பதால் நாம் வழங்கும் ஸதகா தான தர்மங்களால் அல்லாஹ்விடம் (ﷻ) பல நூறு மடங்கு நமக்கு வெகுமதி கிடைக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ரமழான் மாதம் வந்து விட்டால் முஹம்மத் நபி (ﷺ) அவர்கள் வரித்துக்கட்டிக் கொண்டு நன்மைகளை செய்ய இறங்கி விடுவார்கள்.
வேகமாக வீசும் காற்றை விட அவர்களின் தான தர்மங்களும் நற் செயல்களும் துரிதமாக இருக்கும் என்றெல்லாம் ஸஹாபா தோழர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை நாம் அறிந்திருக்கின்றோம்.
அவர்களின் அளவிற்கு எம்மால் செய்ய முடியாவிட்டாலும் கூட நம்மால் முடிந்த அளவு செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் – தான தர்மங்களும் நற் செயல்களையும் செய்யும் பக்குவத்தை இந்த பாக்கியமிக்க ரமழான் முதல் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
12 – ரமழான் மாத கடைசி 10 நாட்களில் லைலத்துல் கத்ர் எனும் மிக முக்கியமான புனிதமிக்க ஒரு இரவு நம்மையெல்லாம் சந்திக்க இருக்கின்றது. அந்த ஒரு இரவு மட்டும் 1000 மாதங்களை விட சிறந்த இரவாகும் என்று அல்லாஹ் (ﷻ) அல்-குர்ஆனில் கூறி இருக்கிறான்.
நம்மால் மஸ்ஜிதுக்குச் சென்று இரவு தங்கி அந்த இரவின் பாக்கியத்தை பெற முடியாவிட்டாலும் பெண்களாகிய எமக்கு நம் வீடுகளில் இருந்து அந்த இரவை எதிர்பார்க்கலாம்.
கடைசி 10 நாட்களின் இரவு வேளைகளில் நீண்ட நேரம் தொழுவது – அல்லாஹ்வை (ﷻ) அதிகமதிகம் திக்ர் செய்வது – அல்-குர்ஆன் ஓதுவது – அல்லாஹ்விடம் (ﷻ) கையேந்தி நம் தேவைகளை முறையிட்டு மறக்காமல் முஸ்லிம் சமுதாய நலனுக்காகவும் தூஆ செய்து நமது மறுமை வெற்றிக்காகவும் பிரார்த்திப்பது போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடலாம்.
அடுத்த வருட ரமழான் வரை நாம் வாழ்வோம் என்பது உறுதி இல்லை என்பதனால் இந்த வருட லைலத்துல் கத்ரை அலட்சியப்படுத்தி விட வேண்டாம்.
13 – ‘பெருநாள்’ என்பது நம் அனைவருக்கும் மகிழ்சிகரமான நாள். புத்தாடைகளை அணிவதில் உள்ளம் குதூகளிக்கும். அதற்காக பல நாள் பல கடைகளுக்கு ஏறி இறங்கி பல மணி நேரத்தை செலவழித்து ஆடைகளை வாங்குகின்றோம். நம் மனதிற்கு பிடித்த மாதிரி ஆடைகள் அமைந்து விட்டால் ஆனந்தம் இன்னும் அதிகரிக்கும்.
அன்றைய தினத்தில் நமது வீடுகளில் பெற்றோர், சகோதர சகோதரிகள், கணவன், பிள்ளைகள் என எல்லோரும் புத்தாடை அணிந்து மகிழ்சிக் கடலில் மூழ்கி இருக்கும் பொழுது எத்துனையோ ஏழைகள் இதற்கு வழியில்லாமல் கவலையுடனும் மன சுமைகளுடனும் தம் வீடுகளில் அடைந்து கிடப்பார்கள்.
அந்த சந்தோஷமான நாளை அவர்களால் வெளியில் சென்று கொண்டாட முடியாது.
இருக்கும் அனைத்து ஏழை எளியவர்களுக்கு நம்மால் ஆடைகள் எடுத்துக் கொடுக்க முடியாது – (நம் பெண்களில் பலர் பொருளாதார வசதி இருந்தால் நிறைய செய்வார்கள்) அதனால் நாம் ஆடைகள் வாங்கும் போது ஆடைகளின் விலையை கொஞ்சம் குறைத்து ஒன்று அல்லது இரண்டு ஏழைப் பெண்களுக்கு இரண்டு ஆடைகளை எடுத்துக் கொடுக்கலாம்.
நாம் புத்தாடை அணியும் அதே வேளையில் அந்தப் பெண்களும் நம் மூலம் புத்தாடை அணிவார்கள். அன்றைய நாள் முழுவதும் அவர்களின் எண்ணமெல்லாம் நீங்களாக தான் இருப்பீர்கள்.
அந்த ஏழைகளின் சந்தோஷத்தில் அல்லாஹ்வின் (ﷻ) சந்தோஷம் கிடைக்காதா? அந்த சந்தோஷத்துடன் அவர்கள் உங்களுக்காக வேண்டும் பிரார்தனைக்கு அல்லாஹ் (ﷻ) நிச்சியமாக கூலி வழங்குவான்.
14 – நம்மில் நிறையப் பெண்கள் வருடாந்தம் தொடர்ந்து தவறவிடும் – ஆனால் தவற விடக் கூடாத – தொழுகை தான் பெருநாள் தொழுகை. இந்த வருடம் அதை விட்டு விடாதீர்கள். ஏனெனில் அது வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தொழும் தொழுகையாகும்.
இந்த புனித ரமழானை அல்லாஹ் (ﷻ) விரும்பக் கூடிய விதத்தில் அமைத்துக் கொள்ள உங்களுக்காக நானும் பிரார்த்திக்கின்றேன் எனக்காக நீங்களும் பிரார்த்தியுங்கள்.
-ஜுபைதா-
Jazakallahu Kairan