மைத்திரிபால யாப்பா சிறிசேன அல்லது மைத்திரிபால சிறிசேன இலங்கை அரசியல்வாதியும், இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டர் ஆவார்.
1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி மேல் மாகாணத்தில் கனேமுல்ல பிரதேசத்தில் பிறந்தவராக இருந்தாலும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் வடமத்திய மாகாணத்திலிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், அந்த மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியும் அவர் என்பது குறிப்பிடத்தகக்கது.
அவரது தந்தை இரண்டாம் உலக யுத்தத்தில் இராணுவத்தில் பணியாற்றிய பின்னர், பொலன்னறுவையில் வரலாற்று சிறப்புமிக்க பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகில் ஐந்து ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் பயிரிடும் ஒரு நடுத்தர வர்க்க விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மைத்திரிபால யாப்பா சிறிசேன, அரசியலில், குறிப்பாக கிராமப்புற மக்களின் பிரதிநிதி என்ற வகையில், அரசியலில் ஒரு நீண்ட தனிப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளார்.
16 வயதிலிருந்தே, அவர் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டினார், படிப்படியாக அவற்றைப் பற்றிய ஆழமான புரிதலுடன் வளர்ந்தார்.
இலங்கையில் பெரும்பான்மையினராக வாழும் கிராமப்புற மற்றும் உழைக்கும் மக்களின் பொருளாதார மற்றும் சமூக துன்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தெளிவான அர்ப்பணிப்பை அவர் காட்டியுள்ளார். இந்த அர்ப்பணிப்பில்தான் அவர் இளைஞர்களின் தலைமையின் கீழ் போராட்டங்களில் பங்கேற்றார்.
பொலன்னறுவை லகவுன்ய பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் இடைநிலைக் கல்வியை பொலன்னறுவை தொப்பாவெவ மகா வித்தியாலயத்தில் கற்றார்.
1973 ஆம் ஆண்டில், விவசாய பயிற்சிக்கான முன்னணி மையமான குண்டசாலையில் உள்ள இலங்கை விவசாய பாடசாலையில் விவசாயத்தில் டிப்ளோமா பெற்றார். அரசியல் அறிவியலில் ஆர்வம் காரணமாக, 1980 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள மாக்சிம் கார்க்கி அகாடமியில் அரசியல் அறிவியலில் டிப்ளோமாவை பெற்றார்.
ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி அரசியலை நோக்கி சாய்ந்த அவரது ஆர்வம் பின்னர் முற்போக்கான நடுத்தர அரசியலில் கவனம் செலுத்தியது. 1967 ஆம் ஆண்டில் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து பொலன்னறுவை மாவட்டத்தின் செயலாளரானார்.
1971 இல் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது அரசியலில் ஈடுபட்டிருந்த அனைத்து இளைஞர்கள் மீதும் பலமான சந்தேகம் இருந்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டு 15 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டார்.
1974 ஆம் ஆண்டு பொலன்னறுவை கூட்டுறவு சங்கத்தில் வழங்கல் உத்தியோகத்தராக தனது முதலாவது பணியை பொறுப்பேற்று 1976 இல் கிராம சேவகராக நியமனம் பெற்றார்.
இந்த நியமனத்துடன், அவர் கிராமிய மக்களுடன் நெருக்கமாகிவிடவும் பிரதேச மக்களின் நிர்வாகத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தனது சேவையின் மூலம் கிராமிய பிரச்சினைகள் பற்றிய தனது அரசியல் அறிவைத் தீவிரப்படுத்தவும் முடிந்தது. திருமதி ஜயந்தி புஷ்பகுமாரி என்பவரை திருமணம் செய்த சிறிசேன அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
1977 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட அவர். 1978 இல் கிராம சேவகர் பதவியை இராஜினாமா செய்து முழுநேர அரசியல்வாதியாக மாறினார்.
அதே ஆண்டில், கியூபாவின் ஹவானாவில் நடந்த சர்வதேச இளைஞர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 1983 ஆம் ஆண்டில், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடு தழுவிய இளைஞர் அமைப்பின் தலைவரானார். அதன் பிறகு, அவர் தேசிய அரசியலில் நுழைந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கணிசமான அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த நேரத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில் அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சமூக உரிமைகளை பறிக்கும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
1989 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு தனது பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். 1989 பெப்ரவரி 15 இல் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்றத்தின் ஊடாக அவரது நீண்டகால தேசிய சேவையின் ஆரம்பத்தை குறித்தது.
மைத்திரிபால சிறிசேன 1994 பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக பதவி ஏற்ற பின்னரும் அவரது முன்னேற்றம் தொடர்ந்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவிச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு, 2000 இல், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001 ஆம் ஆண்டில் 12 வது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதே ஆண்டு ஜூலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 2015 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக போட்டியிட முடிவு செய்யும் வரை அப்பதவியை வகித்தார்.
2004 பெப்ரவரியில், மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டார். பொதுத் தேர்தலில் இலங்கையின் 13வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள மகாவலி கங்கை பள்ளத்தாக்கு மற்றும் ரஜரட்ட அபிவிருத்தி அமைச்சராகவும் பாராளுமன்றச் சபை முதல்வராகவும் பதவி வகித்தார்.
2005 நவம்பரில் விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
2006 ஆம் ஆண்டில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத பயங்கரவாதத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆயுத நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (ஐ.தே.க.) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அவர் கைச்சாத்திட்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் மகாவலி பிரதான திட்டத்தின் கீழ் 2007 ஜனவரி 25 ஆம் திகதி 90 பில்லியன் ரூபா பெறுமதியான மொரகஹகந்த – களு கங்கை திட்டத்தை அவர் ஆரம்பித்தார்.
வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு நீர் வழங்குவதற்கு மேலதிகமாக, மொரகஹகந்த திட்டத்தின் ஊடாக மின்சாரத்தின் நீண்டகால தேவைகளை பூர்த்தி செய்ய 25 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது.
2007 மார்ச்சில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வெலிகந்தையில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தார்.
அத்துடன் அக்டோபர் 9, 2008 அன்று, அவர் “வாப் மகுல் திருவிழாவில்” கலந்து கொண்டு பண்டாரகமவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகளின் மற்றுமொரு தாக்குதலில் இருந்தும் அவர் உயிர் தப்பினார்.
இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தபோது, 2005 முதல் மைத்ரிபால சிறிசேன ஐந்து முறை பதில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியதுடன், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியிருந்த போது போரின் இறுதி நாட்களில் மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார்.
2010 ஆம் ஆண்டில், மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அக்காலப் பகுதியில் நாட்டில் தரமான மற்றும் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக டாக்டர் சேனக பிபிலே அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஔடதக் கொள்கையை நடைமுறைப்படுத்த அவர் நடவடிக்கை எடுத்தார்.
புகையிலை தயாரிப்பு பக்கட்டுகளில் பட எச்சரிக்கைகளை சேர்ப்பதற்கான சட்ட தேவைகளை அறிமுகப்படுத்த அவர் விரிவான முயற்சிகளை எடுத்ததுடன் அவரது இந்த நடவடிக்கைக்கு நீதிமன்ற உத்தரவைப் பெற்றதன் மூலம் வெற்றி பெற்றன. இது புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
சுகாதார அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவின் சேவைகள் உலக சுகாதார ஸ்தாபனத்தால் பெரிதும் பாராட்டப்பட்டன.
சுகாதார அமைச்சராக, இலங்கையில் புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான அவரது நடவடிக்கைகாக உலக சுகாதார அமைப்பின் “2013 உலக புகையிலை நிறுத்த விருது” அவருக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இலங்கையர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கையின் சுகாதார அமைச்சராக அவரது ஆக்கபூர்வமான தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்காவின் பொது சுகாதாரத்திற்கான ஹார்வர்ட் கல்லூரி மற்றும் கென்னடி அரசியலமைப்பு கல்லூரி ஆகியவை அவருக்கு “2013 ஹார்வர்ட் அமைச்சுகால தலைமைத்துவ சுகாதார விருது” வழங்கி கௌரவித்து.
ஜெனீவாவில் நடந்த 2013 ஜி -15 உலக சுகாதார மாநாட்டில், சுகாதாரத்திற்கான ஜி -15 பிரகடனத்தை முன்வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துடன், இதன் விளைவாக அவர் 2014 உலக சுகாதார சபையின் நான்கு துணைத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
நவம்பர் 2014 இல், அவர் துனிச்சலான நடவடிக்கையை எடுத்து ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக போட்டியிட ஒப்புக்கொண்டார். மூன்றாவது தடவையாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்துப் அவர் போட்டியிட்டார்.
அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கும், சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறைக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கும், இலஞ்ச ஊழலிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கும் ‘மைத்திரி ஆட்சி, நிலையான நாடு’ எனும் தொனிப்பொருளில் நாடு முழுவதும் வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2015 ஜனவரி மாதம் 09 ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் முதல் முறையாக, இலங்கையின் பாரம்பரிய அரசியல் எதிரிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.மு.) ஆகியவை இணைந்து அரசாங்கத்தை அமைத்தன.
இதன் விளைவாக, “நல்லாட்சி அரசாங்கம்” 19 வது திருத்தம் போன்ற பல முக்கியமான கட்டளைச் சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடிந்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுதல், புதிய அரசியலமைப்புக்கான அடித்தளத்தை அமைத்தல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் முன்னேற்றம் கண்டது.
2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், 19 வது அரசியலமைப்பு திருத்தத்தின் படி, பாரளமன்றம் கலைக்கப்பட்டது இலங்கை அரசியலமைப்பிற்கு முரணானது அத்துடன் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்று உயர் நீதிமன்றத்தின் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு 2018 டிசம்பர் 13 அன்று ஏகமனதாக தீர்ப்பளித்தது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, அவர் டிசம்பர் 16 அன்று ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்தார்.
தான் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் ஊழல்வாதிகளை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தும் அதை நிறைவேற்ற தவறியதாக மக்கள் தொடர்தும் குற்றம்சாட்டி வந்தனர்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல்களை தடுப்பதற்கும் அதன் பின்னர் கூட உரிய முறையில் விசாரனைகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இவை மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி கவிழ்வதற்கு பிரதானமான காரணங்களாகக் காணப்பட்டன.
இலங்கையின் 8வது ஜனாதிபதித் தேர்தல் 2019-11-16 திகதி நடைபெற்றதுடன் இலங்கையில் பதவியில் இருந்த ஜனாதிபதியோ, பிரதமரோ, எதிர்க்கட்சித் தலைவரோ போட்டியிடாத முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத் தேர்தலில் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தகவல் – sarinigar.com
Follow us to get more useful articles like this soon. Subscribe to our Sarinigar website. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!