ரணசிங்க பிரேமதாச – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 2வது ஜனாதிபதி

ரணசிங்க பிரேமதாச - நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 2வது ஜனாதிபதி
ரணசிங்க பிரேமதாச (23 ஜூன் 1924 – 01 மே 1993) இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆவார். அதற்கு முன்னர், அவர் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் கீழ் பிரதமர் மற்றும் பாராளுமன்ற சபை முதல்வர் பதவியை வகித்தார்.

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் 50.43% வாக்குகளைப் பெற்று இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கண்டியில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மே 1, 1993 அன்று குண்டுத் தாக்குதலில் இறக்கும் வரை அவர் ஜனாதிபதியாக கடமையாற்றினார்.

ரிச்சர்ட் ரணசிங்க மற்றும் என்சினா ஹாமினே ஆகியோரின் மூத்த பிள்ளையாக ஜூன் 23, 1924 இல் டயஸ் பிளேஸ், கெசல்வத்தையில் பிறந்த ரணசிங்க பிரேமதாச இலங்கையின் ஒரு உன்னத மக்கள் தலைவராக விளங்கினார்.

பிரேமதாச கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். சிறுவயதிலிருந்தே ஒரு பத்திரிகை நிருபராக வேண்டும் என்று கனவு கண்ட அவர், ஜவஹர்லால் நேருவின் சுயசரிதையை சிங்களத்தில் எழுதினார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர் மிகவும் ஏழையாக இருந்தார்.

ஹேமா பிரேமதாசவை திருமணம் செய்து கொண்ட ரணசிங்க பிரேமதாச இரண்டு பிள்ளைகளின் தந்தையானர். அவரின் மூத்த பிள்ளையான சஜித் பிரேமதாச தற்போதை அரசியல் களத்தில் முக்கியமான அரசியல் தலைவராக திகழ்கின்றார்.

ஏ.ஈ. குணசிங்க தலைமையிலான தொழிலாளர் கட்சியில் சேர்ந்ததன் மூலம் ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. எவ்வாறாயினும், தொழிற்கட்சியின் எதிர்காலம் நிலையற்றது என்பது தெளிவாகத் தெரிந்ததால் பிரேமதாச 1950 களில் ஐக்கிய தேசியக் கட்சியில் இனைந்து கொண்டார்.

அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்கவின் அமைச்சரவையில் வானொலி தொடர்பாடல் அமைச்சராக இருந்த ரணசிங்க பிரேமதாச, தெற்காசியாவின் மிகப் பழமையான வானொலி நிறுவனமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை 1967 ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பித்தார்.

குறைந்த வருமானம் பெறும் ஏழை மக்களுக்காக தனது சேவைகளை அர்ப்பணித்த ரணசிங்க பிரேமதாச, ஜனசவிய, கம் உதாவ போன்ற திட்டங்களை உருவாக்கியதன் மூலம் அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

1987 சர்வதேச வீட்டு வசதி ஆண்டாகும். சர்வதேச வீட்டுவசதி ஆண்டிற்காக உலகின் அனைத்து நாடுகளிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதில் மிகவும் வெற்றிகரமான அபிவிருத்தி வேலைத் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக 1987 இல் இலங்கை சர்வதேச வீடமைப்பு விருதை வென்றது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெற்ற விசேட விழாவில் இந்த விருது பிரேமதாசவிற்கு வழங்கப்பட்டது.

செவன நிதியம், கிராமோதய திட்டம், செவன அரன பெற்றோர் பராமரிப்புத் திட்டம், 200 ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்குதல், பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு, இலவச பள்ளி சீருடை வழங்குதல் போன்றவை பிரேமதாசவால் தொடங்கப்பட்ட மக்கள் நல திட்டங்களாகும்.

பிரேமதாச காலத்தில் கட்டுமானத் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். பண்டைய மத வழிபாட்டு தலங்கள் மீட்டெடுக்கப்பட்டன. விளையாட்டுத் துறையில் புரட்சி ஏற்பட்டது.

1979 செவன நிதியம் இலங்கை வீடமைப்பு நிதி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பெரிதும் பங்களித்தது. தேசிய பேரிடர் காலங்களில் இந்த நிதி மூலம் உதவி செய்யப்பட்டுள்ளது. கந்தளாய் ஏரிக்கரை உடைந்ததில் அநாதையான குழந்தைகளின் குடும்பங்களுக்கு செவன நிதியம் வழங்கிய ஆதரவு இங்கு மிக முக்கியமாகும்.

மேலும் இந்த செவன நிதியம் நாட்டில் விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு மிகையான ஆதரவை வழங்கிது.

கெத்தாராம சர்வதேச கிரிக்கெட் மைதானம், சுகததாச மைதானம், எல்பின்ஸ்டோன் தியேட்டர், வறிய கலைஞர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட டவர் ஹோல் அரங்க மன்றம், போன்றவை செவன நிதியத்தின் ஆதரவுடன் பிரேமதாசவினால் செயல்படுத்தப்பட்ட மகத்தான சேவைகளாகும். அவரால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் வெற்றியடைந்துள்ளன.

1989 இல் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றபோது, நாட்டில் மூன்று பாரிய பிரச்சினைகள் காணப்பட்டன. நாட்டின் வடக்குப் பகுதியில் சுமார் 70,000 இந்திய அமைதி காக்கும் படையினர் நிலை கொண்டிருத்தல், வடக்கில் எல்.ரீ.ரீ.ஈ யின் உள்நாட்டுப் போர் மற்றும் தெற்கில் ஜே.வி.பி கிளர்ச்சி ஆகியவை இந்த மூன்றாகும்.

இவற்றில் முதல் முக்கிய பிரச்சனையாக இந்திய அமைதிப்படை காணப்பட்டது. பேச்சுவார்த்தைகளால் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடியவில்லை. இலங்கை இராணுவம் அவர்களை விரட்ட முயன்றால், தெற்கிலும் வடக்கிலும் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது என்பதை உணர்ந்த ரணசிங்க பிரேமதாசா, இந்த நோக்கத்திற்காக எல்.டி.டி.ஈ.யை பயன்படுத்த நினைத்தார்.

இதன் விளைவாக அவர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியப் படைகளை விரட்டியடிப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டியிருந்தது. விடுதலைப் புலிகள் இந்தியப் படைகளை வெளியேற்றிக் கொண்டிருந்த வேளையில், ஜே.வி.பி.யின் கிளர்ச்சியை நிறுத்த அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் பேச்சுவார்தைகள் தோல்வியுற்றதால், ஜே.வி.பி.யின் கிளர்ச்சியை இலங்கை இராணுவத்துடன் இணைந்து வலுவான நடவடிக்கைகளால் சில மாதங்களில் அடக்கப்பட்டது. அவர் ஜனாதிபதியானவுடன் நிலவிய மூன்று முக்கிய பிரச்சினைகளில் இரண்டு தீர்க்கப்பட்டன. ஆனால் புலிகளை தோற்கடிப்பதற்கு முன்னர் அவர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியான பின்னர், நாட்டில் அவருகென்று தனித்துவமான பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கையைக் கையான்டார்,

இது மிகவும் வெற்றிகரமாகவும் இருந்தது. நாட்டின் ஏழை மனிதனை பற்றி சிந்தித்த அவர் அந்த ஏழையை அரசனாக்குவதில் வெற்றி பெற்றார். நாட்டிற்கு இன்றும் வருவாய் வந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளும் தொழிற்பேட்டைகளும் அவரது எண்ணங்களின்படி கட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியானதில் இருந்து அவர் அரசியல் ரீதியாக தோல்வியடைந்த சந்தர்பங்களும் உண்டு. ஒன்று இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர். அத்துடன், தனது கட்சியில் இருந்த லலித் அத்துலத் முதலி மற்றும் காமினி திசாநாயக்க ஆகியோருடனான கருத்து வேறுபாடுகள் கட்சி பிளவுக்கும் நாட்டில் குழப்பத்திற்கும் வழிவகுத்தது.

அவரது பதவிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீதான பல்வேறு கொடுமைகள்  மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் காரணமாக அவர் மீது மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி காணப்பட்டது.

இன்றும் விவாதிக்கப்படும் “வெள்ளை வான் போபியா” முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் உருவாகியதொன்று என்பதை குறிப்பிடலாம்.

ரணசிங்க பிரேமதாசா 1993 மே 1 அன்று விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்டார்.

தகவல் – sarinigar.com

Follow us to get more useful articles like this soon. Subscribe to our Sarinigar website. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply