ரணில், சஜித், அநுர, நாமல் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு முக்கிய வேட்பாளர்கள்
இலங்கையின் மிக முக்கியமான தேர்தலான நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15-ம் திகதி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவர் ஆகஸ்ட் 22 இரவு காலம் சென்றதை அடுத்து வேட்பாளர்களின் எண்ணிக்கை 38 ஆக குறைந்தது.
அந்த வேட்பாளர்கள் பட்டியலில் இரண்டு பௌத்த பிக்குகள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு எந்த பெண்ணும் போட்டியிடவில்லை.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு முக்கிய வேட்பாளர்களின் விவரங்களின் கண்ணோட்டம் இது.
ரணில் விக்கிரமசிங்க
75 வயதாகும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
முன்னதாக ஜனாதிபதியாக பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, மக்களால் வெளியேற்றப்பட்ட பின்னர், 2022 ஜூலை 21 அன்று அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு, அவர் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் பிரதமராக பணியாற்றினார்.
சனாதிபதித் தேர்தல்கள் (1981 இன் 2 ஆம் இலக்கம்) கீழ் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பல்கலைக்கழகக் கல்வி கற்றதிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, 1977 இல் தனது 28 வயதில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 47 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் அரசியல்வாதியாக இருந்து வருகின்றார்.
ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விரிவான வரலாற்று கட்டுரையை கீழ் உள்ள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ரணில் விக்கிரமசிங்க – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 8வது ஜனாதிபதி
சஜித் பிரேமதாச
தற்போது 57 வயதாகும் சஜித் பிரேமதாசா இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
இவர் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். ஆனால் அவர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார்.
இவர் நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக 1993 இல் படுகொலை செய்யப்பட்ட ரணசிங்க பிரேமதாசவின் மகனாவார்.
தனிப்பட்ட தகவல்
ரணசிங்க பிரேமதாச மற்றும் ஹேமா பிரேமதாச ஆகியோருக்கு 1967 ஜனவரி 12 இல் கொழும்பில் பிறந்த சஜித் பிரேமதாசவுக்கு ஒரு சகோதரி உள்ளார். இவரது மனைவி ஜலானி பிரேமதாசா.
கல்வி
கொலுப்பிட்டி புனித தோமையர் பிரெப் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், லண்டன் மில் ஹில் பாடசாலையில் பொது தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளை தோற்றினார்.
லண்டன் பல்கலைக்கழகம், லண்டன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸ் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர் என்று அவரது தகவல்கள் அடங்கிய வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் போது அவரது கல்வித் தகுதி குறித்து நிறைய விவாதங்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியலின் பாதை
இவர் சிறு வயது முதல் அரசியல் சூழலில் வளர்ந்தாலும், சஜித் பிரேமதாச தனது தந்தை கொலை செய்யப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர், 1994 இல் அரசியலில் நுழைந்தார்.
அப்போது அவர் அம்பாந்தோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டார்.
சஜித் பிரேமதாச 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளையும் இலங்கையில் அதிகூடிய சதவீத வாக்குகளையும் பெற்றார்.
ஒரு வருடத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அவர் சுகாதார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய நல்லாட்சி தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
ஜனவரி 2015 முதல் நவம்பர் 2019 வரை, ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக பணியாற்றினார்.
24 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் அரசியல்வாதியாக இருந்து வருகின்றார்.
சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்
நவம்பர் 16, 2019 அன்று நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், கோட்டாபய ராஜபக்ஷவிடம் தோல்வியடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அதே ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி சிறிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் சஜித் பிரேமதாச தலைமையிலான 2020 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வௌியேறி ஐக்கிய மக்கள் கட்சியை உருவாக்கினார்.
இது சஜித் பிரேமதாசவின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கான நீண்டகால அதிகாரப் போட்டியின் முடிவாக காணப்பட்டது.
ஒரு சமயம், மாத்தறையில் நடைபெற்ற “ரணில் எதிர்ப்பு” மற்றும் “சஜித் ஆதரவு” ஊர்வலம் தாக்கப்பட்டு அது நீதிமன்ற விசாரனை வரை சென்றது. இது சமூகத்தில் “குருது பொலு நடுவ” என்று பிரசித்தி பெற்ற வழக்காக மாறியது.
காட்டு விலங்குகளை புகைப்படம் எடுப்பது, கிரிக்கெட் விளையாடுவது, இசைக்கருவிகளை வாசிப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் போன்றவை சமூக வலைதளங்களில் இன்றும் தீவிர விவாதப் பொருளாக காணப்படுகின்றது. அத்துடன் “உயரமானவர் என்றால் சிகுருடி, குட்டையானவர் என்றால் தொழிலாளி” என்ற அவரது வேலை வாய்ப்பு கொடுக்கும் நிலைப்பாடும் பிரசித்தி பெற்ற விவாத பொருளாக உள்ளது.
அவரது சில அறிக்கைகளும் கடந்த காலங்களில் ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டன.
ஒரு இஸ்லாமியர் தன்னிடம் “யானைகளை அடக்கி கட்டுப்படுத்தக் கூடிய குர்ஆனில் உள்ள ஒரு வசனம்” சொல்லி தந்ததாக சஜித பிரேமதாச ஒருமுறை கூறிய கருத்து அந்த காலத்தில் அது சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட தலைப்பாக காணப்பட்டது.
அது மாத்திரமின்றி, அவரால் நிர்மாணிக்கப்பட்ட “சதா லோக பூஜித குமார் சங்கக்கார கம” மற்றும் “சத லோக பூஜித அரவிந்த டி சில்வ கம” ஆகிய இரண்டு புதிய கிராமங்களும் அந்த நேரத்தில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளாக இருந்தன.
அனுர குமார திசாநாயக்க
தற்போது 55 வயதாகும் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
இவர் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவராவார். 2014 பெப்ரவரி மாதம் 2ம் திகதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னனியின் 7 வது தேசிய மாநாட்டில் அதன் தலைவராக அனுரகுமார திசாநாயக்க ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜே.வி.பி.யின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர மற்றும் அவரது வாரிசு தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆகியோருக்குப் பிறகு ஜே.வி.பி.யை வழிநடத்திய மூன்றாவது நபராக அவர் காணப்படுகின்றார்.
தனிப்பட்ட தகவல்
திஸாநாயக்க முதியன்சலாகே அனுர குமார திஸாநாயக்க 1968 நவம்பர் மாதம் 24 அன்று கலேவெல, தேவஹுவவில் பிறந்தார்.
அனுர குமார திசாநாயக்கவின் குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் தெரியவில்லை, ஆனால் அவரது மகனின் திருமணத்தில் அவரது மனைவியை காண முடிந்ததாக சில வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்த அவர், தனது மகன் “எயார் லங்கா நிறுவனத்தில் பணிபுரிகிறார்” என்று கூறியிருந்தார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் டியூஷன் ஆசிரியராகவும் பணியாற்றியதாக கூறியுள்ளார்.
கல்வி
அவர் தம்புத்தேகம ஆரம்ப பாடசாலை (முன்னர் தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் என அழைக்கப்பட்டது) மற்றும் தம்புத்தேகம மத்திய பாடசாலையில் கல்வி பயின்றார்.
உயர்தரத்தில் கணித பிரிவில் கல்வி பயின்ற அவர், 1992 ஆம் ஆண்டில், களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இயற்பியல் இளங்கலைப் பட்டத்திற்காக நுழைந்து 1995 இல் அதற்கான பட்டம் பெற்றார்.
அரசியலின் பாதை
1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போது ஒரு மாணவராக அரசியலில் நுழைந்த அவர், சோசலிச மாணவர் ஒன்றியத்தின் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
1997 இல், அவர் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக ஆனார். அதே ஆண்டில், அவர் ஜே.வி.பி.யின் மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஒரு வருடத்தின் பின்னர், 1998 இல், அவர் அதன் அரசியல் குழுவில் நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டில், மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டார்.
அனுரகுமார திசாநாயக்க 2000 ஆம் ஆண்டில் முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் 2001 இல் அமைக்கப்பட்ட தகுதிகாண் அரசாங்கத்தை அமைப்பதில் அவர் பங்களிப்பு செய்தார்.
2004 ஆம் ஆண்டில், மக்கள் முன்னணியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியை உருவாக்கிய ஜே.வி.பி, அதே ஆண்டு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டடதுடன் அந்த அரசாங்கத்தில், அவர் விவசாயம், நிலம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சராக பணியாற்றினார்.
2008 ஆம் ஆண்டில், அவர் ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015 ஆகத்து பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 முதல் டிசம்பர் 17, 2018 வரை எதிர்க்கட்சியின் முக்கிய அமைப்பாளராக பணியாற்றினார்.
24 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் அரசியல்வாதியாக செயலாற்றுகின்றார்.
சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்
1980 களின் பிற்பகுதியில் நடந்த கலவரங்களின் போது ஜே.வி.பி செய்ததாக குற்றம் சாட்டப்படும் படுகொலைகள் உட்பட “நடந்திருக்கக் கூடாத நடவடிக்கைகளுக்கு” அனுர குமார திசாநாயக்க மன்னிப்பு கோரினார், 2014 இல் பிரிட்டனுக்கு விஜயம் செய்த போது பிபிசிக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரி இருந்தார்.
2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அவருக்கு பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 3% வாக்குகளையே பெற முடிந்தது.
2022 ஆம் ஆண்டில் கட்சி அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் மற்றும் பிறரால் செய்த ஊழல் மோசடிகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை அனுர குமார வெளிப்படுத்தியது அந்த நேரத்தில் சமூகத்தில் ஒரு சூடான விவாதப் பொருளாக இருந்தது.
மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு அனுரகுமார திஸாநாயக்க தன்னுடனும் மற்றவர்களுடனும் இணைந்து செயற்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா ஊடகங்களுக்கு ஒரு முறை தெரிவித்திருந்தார்.
ஒரு முறை அவர் வெளிநாட்டு ஒன்றில் பணத்தை முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதுடன், அதற்கு அவர் “நானும் , எங்கள் கட்சியைச் சேர்ந்த யாரும் இந் நாட்டு பொதுமக்களின் ஒரு சதத்தைக் கூட திருடவில்லை.” என்று பதிலளித்திருந்தார்.
அவருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நெருங்கிய அரசியல் உறவு இருப்பதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அவரை “சிவப்பு யானை” என்று அரசியல் மேடைகளில் அழைத்தனர்.
2004 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பிரதான நோக்கத்துடன் ஜே.வி.பி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தது.
சில வருடங்களின் பின்னர் யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க, “பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், குறிப்பாக, ஓயா கபிதிகொல்லாவ பிரச்சினை எழுப்பப்பட்டது. அந்த நேரத்தில், எங்கள் சகோதரர்கள், எங்கள் நிவாரண சேவை ஊழியர்கள், அந்த இரானுவத்தினரிடம் சென்று முகாம்களை, பதுங்கு குழிகளை அமைத்துக் கொடுத்தனர்.
அது மாத்திரமல்ல, பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேசத்தில் எவரும் செல்லாத கிராமங்களுக்குச் சென்று, பதுங்கு குழிகளை அமைத்து, வீதிகளை அமைத்து இராணுவ வீரர்களுக்கு முடியுமான அனைத்து தைரியத்தையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.
அந்த காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட “மானெல் மலர் இயக்கம்” இராணுவ அதிகாரிகள் “பெருமைமிக்க மக்களாக வாழ” ஒரு சூழலை உருவாக்கியது என்று அவர் மேலும் கூறினார்.
நாமல் ராஜபக்ச
தற்போது 38 வயதாகும் நாமல் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுகிறார். இவர் இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் ஆவார்.
தனிப்பட்ட தகவல்
நாமல் ராஜபக்ச 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முன்னாள் பிரதமரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிறிந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு மகனாக பிறந்தார். நாமல் 2019 ஆம் ஆண்டு லிமினி வீரசிங்கவை திருமணம் செய்து கொண்டார்.
கல்வி
கல்கிசை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பாடசாலை காலத்திலிருந்தே ரக்பி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றார். கல்லூரியின் சிரேஷ்ட ரக்பி அணி மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியின் தலைவராகவும் இருந்தார்.
தொழில் ரீதியாக சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ, லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைப் பெற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டத்தரணியாக தகுதி பெற்றார், அங்கு அவர் இறுதித் தேர்வுக்கு தோற்றிய விதம் குறித்து பல்வேறு தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டார். அவரது சட்டத்தரணி பட்டம் சர்சைக்குறிய விடயமாகவே காணப்படுகின்றது.
அரசியலின் பாதை
2010 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ அன்றிலிருந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினராக இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், தற்போது இலங்கை மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில், அவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்த துறை அமைச்சராகவும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன அபிவிருத்தி அமைச்சராகவும் பணியாற்றினார்.
நாமல் ராஜபக்ஷ ரக்பி விளையாட்டின் தீவிர ஆர்வலர் என்றும், பாடசாலை காலம் முதல் அவர் அதில் தீவிர ஈடுபாடுள்ளவராக காணப்பட்டார் என்று அவருடைய வலைத்தளத்தில் பதியப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில் தேசிய ரக்பி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் இலங்கை கடற்படை அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார்.
14 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் அரசியல்வாதியாக இருந்து வருகின்றார்.
சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்
ராஜபக்ச ஆட்சியின் போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய கார்ல்டன் விளையாட்டு வலையமைப்பு (சி.எஸ்.என்) முன்னால் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களுக்கு சொந்தமானது என்று இலங்கை கிரிக்கெட் சபை (எஸ்.எல்.சி) ஒப்புக் கொண்டதாக 2012 ஆம் ஆண்டில் பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.
சி.எஸ்.என் தொலைக்காட்சியின் நடவடிக்கைகளுக்காக பொதுச் சொத்துக்களைப் பயன்படுத்தியது உட்பட பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து நாமல் ராஜபக்சவின் சகோதரர் யோஷித ராஜபக்ஷ உட்பட நான்கு பேர் 2016 இல் கைது செய்யப்பட்டனர்.
2016 ஆம் ஆண்டில், நாமல் ராஜபக்ஷ பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டார், மேலும் அவருக்கு சொந்தமானது என்று கூறப்படும் ‘ஙவர்ஸ் கார்ப்பரேஷன்’ மற்றும் ‘என்ஆர் கன்சல்டேஷன்’ ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
எவ்வாறாயினும், நவம்பர் 2, 2023 அன்று, கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அவரையும் மற்ற ஐவரையும் சாட்சியங்களை அழைக்காமல் விடுவித்தது.
அதே ஆண்டு ஆகஸ்டில், ‘ஹெலோகார்ப்’ நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பாக ராஜபக்ச குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது, மேலும் 2015 இல் பிபிசி சிங்கள சேவைற்கு அளித்த பேட்டியில், இந்த குற்றச்சாட்டுகளை “கடுமையாக மறுப்பதாக” நாமல் ராஜபக்ஷ கூறினார்.
2019 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்தின் 2.6 மில்லியன் ரூபாவுக்கான மின் கட்டணத்தை வீதி விபத்தில் இறந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது சொந்த பணத்தில் கட்டியதாக வௌியான செய்திம் மக்களிடம் பரவலாக பேசப்பட்டது.
கடந்த வருடம் பிபிசி சிங்களத்திற்கு வழங்கிய பேட்டியில் , “எங்கோ தவறுகள் நடந்துள்ளன, அவற்றை அடையாளம் கண்டு, அவற்றைத் திருத்தி அரசியலில் முன்னோக்கிச் செல்வதே தனது குறிக்கோள்” என்று நாமல் ராஜபக்ச கூறினார்.
– Reezah Jessmin
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!
அநுரவுக்கு தான் வெற்றி