ரமளானின் சிறப்புமிக்க மூன்று பகுதிகள்

ரமளானின் சிறப்புமிக்க மூன்று பகுதிகள்
கண்ணியமும் புனிதமும்  மிக்க அருள் மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற எமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் முப்பது நாட்களும் அல்லாஹ்வின் (ﷻ) பொருத்தத்தைப் பெற வேண்டிம் என்ற நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் உலகெங்கும் வாழும் முஸ்லிம்களினது உள்ளங்களிலும் வாழ்வினிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றது.

நோன்பு நோற்றல், அல் குர்ஆன் ஓதுதல், படைத்து பரிபாலிக்கும் இறைவனை நினைவு கூர்தல், தான தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணம்ங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என்று நிம்மதியும் சாந்தமும் நிறைந்த ஒரு சூழலை ரமளான் எம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது.

ரமளானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயற்சிக்கும் விதத்தில் ஒவ்வோர் வருடமும் கழிகின்றது, அல் ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை எமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே (ﷻ) உரித்தாகட்டும்.

தினமும் கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், மஸ்ஜித்களுக்குச் சென்று ஜமாத்தோடு தொழாமல் தமது வீடுகளில், தொழில் செய்யும் இடங்களில் தொழுது கொண்டிருந்தவர்கள்,

உரிய நேரத்தில் மஸ்ஜிதுக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் மஸ்ஜிதுக்கு அதான் சொன்ன உடன் அல்லது அதான் சொல்வதற்கு முன்னரே வருகை தந்து தொழுகைக்குக் காத்திருந்து, மஸ்ஜிதில் குர்ஆன் ஓதிக் கொண்டும் சுன்னத்தான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமையான தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.

இந்தப் பக்திப் பரவச நிலை புனித ரமளான் ஒரு மாதத்தில் மாத்திரமின்றி தினந்தோரும் இருப்பது போல் அனைவரின் உள்ளங்களிலும் இவ்வுணர்வு குடிகொண்டு, அதன் மூலம் வெளிப்படும் இறை வழிபாடுகளும் ஏனைய அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்து விட்டால், இம்மைக்கும் மறுமைக்கும் சிறப்பானதாக இருக்கும் எனும் எண்ணமும் ஆவலும் நமக்கு ஏற்படுகின்றது. இந்நிலையை நமது வாழ்க்கையில் ரமளானில் மட்டுமின்றி ரமளானுக்கு பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் (ﷻ) அருள் புரியவேண்டும்.

இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி (ﷺ) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் (ﷻ) மூன்று முக்கிய விடயங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் பார்க்க முடிகின்றது: நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள் :

    ரமளானின் முதல் பத்து நாட்கள்

அல்லாஹ்வின் (ﷻ) ‘ரஹ்மத்’ எனும் அருட் கொடையாகவும் அடுத்து வரும் நடுப் பத்து நாட்கள் ‘மக்ஃபிரத்’ எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் அடுத்து வரும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து ‘நஜாத்’ விடுதலையளிக்கக் கூடியதாகவும் உள்ளது. ( ஆதாரம் – இப்னு குஜைமா – பாகம் 3 எண் 191)

இந்த ஹதீஸின் அடிப்படைய நாம் கவனத்தில் எடுத்து ரமளானின் முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் (ﷻ) துவாஆச் செய்து அவனால் எமக்கு வழங்கப்பட்ட உயிர், பொருள், செல்வம், சொத்துக்கள், அறிவு, திறமைகள், ஆற்றல்கள், பார்வை, செவி, புலன், உணர்தல், நுகர்தல்,  போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூறவும் அவற்றிற்காக முறையாக அழகிய முறையில் நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் (ﷻ) திருப் பொருத்தத்தையும் இன்னும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயற்சிக்க வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் (ﷻ) சிறப்பாக வழங்கப்பட்ட (ஈமான்) எனும் இறை நம்பிக்கை என்ற அருட்கொடைக்கு மாத்திரமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலம் முழுதும் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது.

ஏனெனில் ஈமான் எனும் இணையற்ற அருட்கொடை இல்லையெனில் நாம் பெற்றுள்ள ஏனைய எந்த வளமும், சொத்துக்களும், செல்வமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம்.

இறை நம்பிக்கை அற்ற நிலையில் சொத்து செல்வம் எனும் அருட் கொடை அதிகமானால் அவனை அது வழி கேட்டிற்கும் தீமைகளுக்கும் இட்டு சென்று விடும் வாய்ப்புகள் உண்டு.

கல்வியறிவு எனும் அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரித்துணராமல் பாரதூரமான விளைவுகள் ஏற்பட வழிவகுக்கும் அபாயம் உண்டு. வலிமை, திறமை, உடல் அழகு, ஆற்றல்கள், அதிகாரம் போன்றவையும் ஈமான் எனும் இறை நம்பிக்கையில்லாத நிலையில் கிடைக்கப் பெற்றால் அவற்றைத் தவறான முறையற்ற வழியில் மனோ இச்சையின்படி பயன்படுத்தி அதன் மூலம் தனக்கும் தன்னை சுற்றியிள்ளோருக்கும் தீங்கும் இழப்பும் ஏற்படுத்திட வாய்ப்புகள் அதிகம்.

உண்மையில் ஈமான் (இறை நம்பிக்கை) மற்றும் இறையச்சம் என்பதுதான் அருட்கொடை.

    ரமளானின் இரண்டாவது பத்தில்

முறையாக எம்மை படைத்த அல்லாஹ்விடம் (ﷻ) மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நடந்த அமல்களின், நற்காரியங்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைத்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதிபூண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவ மன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்விடம் உதவியும் கேட்க வேண்டும்.

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும். அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக் உரிய பிரதி பலன்கள் முழுமையாக வழங்கப்படும்.

எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை.’ (அல் குர் ஆன் 3 : 185)

இம்மை எனும் நிலையில்லா இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே வாழ்க்கை எனும் போக்கில்  மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை கட்டளைகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும், புகழும் சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மையான வெற்றியாகாது.

நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற் கண்ட இறை வசனத்தை எந்நேரமும் உள்ளத்தில் நிறுத்தி மறுமையின் வெற்றியை பெற்றிட அயராத தியாகங்கள் அர்ப்பணிப்புகள் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

“எவர் ஒருவர் ரமளான் மாதத்தைப் அடைந்து அல்லாஹ்விடமிருந்து (ﷻ) பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் (ﷻ) அருளிலிருந்து தூரமாகட்டும்” என்று ஜிப்ரீல் (عَلَيْهِ ٱلسَّلَامُ) அவர்கள் துவா செய்தபோது நபி (ﷺ) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ் வரும் ஹதீஸில் காண முடிகிறது.

இதுவும் நமக்கு ரமளானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது:

“நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ﷺ) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல் படியில் ஏறிய போது ‘ஆமீன்” என்று கூறினார்கள், இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்” என்று கூறினார்கள், மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்” என்று கூறினார்கள்.

இது வரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ﷺ) அவர்கள் ‘என்னிடம் ஜிப்ரீல் (عَلَيْهِ ٱلسَّلَامُ) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட (க்கோர) வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்” என்றார்கள், நான் ஆமீன் என்று கூறினேன்.

உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்” என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன்.

தனது பெற்றோர்கள் இருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்” என்றார்கள் நான் ஆமீன் என்று கூறினேன். என நபி (ﷺ) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (رضي الله عنه) நூல்: ஹாகிம்)

    ரமளானின் மூன்றாவது பத்து நாட்கள்

நரக வேதனைகளில் இருந்து பாதுகாப்பு தேட வேண்டும் என்று கூறும் இந்த நபி மொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் (ﷻ) எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமை, தண்டனையை உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கலாம்.

அல்லாஹ் (ﷻ) அல் குர்ஆனில்,

“யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.” ( அல் குர் ஆன் 4 : 56 )

என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமை, வேதனையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் பாதுகாப்பு தேடும் விதமாக வாழ வேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.

“நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாக வீழ்ந்து கிடப்பர்கள். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.

கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர். அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.

நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம். “ஆகவே சுவையுங்கள் – வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்)”. (அல் குர்ஆன் 78:21-30)

நபி மொழி

“இறைவனை அஞ்ச வேண்டிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி (ﷺ) ஓதினார்கள்.

பிறகு (நரக வாதிகளுக்குக் வழங்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டு விட்டால் உலக மக்களின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே நரகவாதிகளுக்கு உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (رضي الله عنه) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா)

நரகவாசிகளில் இலகுவான தண்டனைக்கு உரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதன் வெப்பத்தால் அவரது மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (رضي الله عنه) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ)

நீங்கள் பயன்படுத்தும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (رضي الله عنه) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ)

இவற்றை எந்நேரமும் நினைவில்  நிறுத்தி அல்லாஹ் (ﷻ) எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் எனும் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை உடன் கைவிட வேண்டும்.

மேலும் நரகத்தின்பால் இட்டுச் செல்லும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களிலிருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் தம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள உறுதி பூண்டு,(17 : 28-31) முன் செய்த பாவங்களை நினைத்து வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின்  கொடும் வேதனைகளிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும்.

குர்ஆனில் வசனங்களைப் பார்க்க. மேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:

“முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள்.” (அல் குர்ஆன் 66 : 6)

மனிதர்களையும் கற்களையும் தீ பொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத கொடூரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நமது பொறுப்பில் உள்ள நமது குடும்பத்தினரும் உலக மக்கள் அனைவரும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக் கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும், நற்பண்புகளுடனும் இஸ்லாமிய இறை வரம்பிற்குள் அவற்றின் அடிப்படைக்குச் சற்றும் மாற்றமில்லாத விதத்திலும் தெளிவுடனும் மன உறுதியுடனும்  செயல்பட முனைய வேண்டும்.

“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” (அல்குர்ஆன் 2 :201)

அதே போன்று ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர் அந்தஸ்து உடைய சுவர்க்கத்தில் இடம் வேண்டி, நம்பிக்கையுடன் பிராத்திக்க வேண்டும்.

ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் விஷேடமான ஒரு நாளாகிய லைலத்துல் கத்ர் இரவின் மகத்துவத்தைப் பற்றி நாம் அறிவோம். எனினும் அதன் பெறுமதியை, முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும்.

இதைப்பற்றி அல் குர் ஆனில் அல்லாஹ் (ﷻ) தன் அடியானுக்கு கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் (ﷻ) லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப் பற்றி குறிப்பிடும் போது,

“அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)

அதாவது ரமளான் மாதத்தின் அந்த ஓர் இரவின் நன்மையின் பாக்கியம் ஆயிரம் மாதங்களின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான்.

ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் என்பத்தி மூன்று வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மை என்பது சராசரி மனித ஆயுளையும் விட அதிகமானதாகும்.

நமது வாழ் நாளில் 10 லைலத்துல் கத்ரு இரவுகளின் நன்மைகளை முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை எமக்குப் பெற்றுத்தரும்.

நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த ரமளான்களில் கடந்து சென்ற லைலத்துல் கத்ர் இரவுகளின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே (ﷻ) நன்கறிவான்.

எனினும் அதைப் பெற்றுக் கொள்ள நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி (ﷺ) வழியில் முயன்றுள்ளோமா? அந்தப் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மிடமே கேட்டு பதில் பெற வேண்டும்.

இதற்கு அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் நபி (ﷺ) அவர்கள் நமக்கு காட்டித் த தந்த வழியில் முயல வேண்டும்.

நபி (ﷺ) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ‘இஃதிகாப்’ இருந்தார்கள் என்று நபி (ﷺ) வழியில் காண முடிகின்றது.

அபூ ஸஈத் அல் குத்ரீ (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி (ﷺ) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாப் இருந்தார்கள். பிறகு அடுத்த நடுப் பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பிறகு கூறினார்கள்:

நிச்சயமாக நான் ரமளானின் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெற்றுக் கொள்வதற்காக இஃதிகாப் இருந்தேன். அதன் பிறகு நடுப் பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த பாக்கியமிக்க இரவு ரமளானின் கடைசிப் பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார்கள். உங்களில் எவர் இந்தக் கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஆகையால் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை அதிகமதிகம் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பிப்பார்கள்; அத்துடன் தங்கள் குடும்பத்தினர்களுக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுமாறு ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபி (ﷺ) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் கண் விழித்திருந்து லைலத்துல் கத்ர் இரவைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாமும் முயற்சிக்க வேண்டும். முடிந்தால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் மஸ்ஜிதில் ‘இஃதிகாப்’ இருந்ததைப் போல் நாமும் இஃதிகாப் இருக்க வேண்டும்.

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள் :

‘எவர்கள் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள். ‘

ஆனால் நம்மில் சிலர் இந்த புனிதமிக்க லைலத்துல் கத்ர் எனும் இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமளானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரு இரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகின்றது.

நபி (ﷺ) அவர்கள் இவ்வாறு ரமளானின் 27 வது ஒரே இரவை மட்டும் சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்களது வாழ்க்கையில் இது 21,23,25,27,29 ஆகிய வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் ரமளானின் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நபி (ﷺ) அவர்கள் வணக்க வழிபாடு விஷயத்தில்  மற்ற மாதங்களில் ஆர்வம் காட்டாத அளவுக்கு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها), நூல்: முஸ்லிம்.

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ﷺ) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள். இரவுகளை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்த நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக தம் குடும்பத்தினரையும் எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

    லைலத்துல் கத்ரில் பிரார்த்தனை:

லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி (ﷺ) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல் கத்ர் இரவை நான் அடைந்து கொண்டால் அந்த இரவில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி (ﷺ) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புள் அஃப்வ பஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பாளன். மன்னிப்பையே விரும்புகின்றவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (رضي الله عنها), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.

இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிகமான வணக்க வழிபாடுகளில், நற்காறியங்களில் ஈடுபட்டு ஏக வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!

அல்லாஹ் (ﷻ) நமக்குப் புனித ரமளானின் சிறப்புமிக்க நாட்களின் அமல்களை முறையாக முழுமையாக நிறைவேற்ற உதவிடவும் நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரியவும் நமக்கு பாவமன்னிப்பளித்திடவும் நம் அனைவரையும் பயங்கரமான நரகில் இருந்து பாதுகாத்திடவும் புனித ரமளானின் அனைத்து நன்மைகளையும் பெற்றிடும் விதத்தில் இந்த புனித ரமளான் முதல் என்றென்றும் பிராத்திப்போமாக.

நன்றி : இப்னு ஹனீஃப்
சத்திய மார்க்கம்.காம்

Assalamu Alaikkum!
Subscribe to our Sarinigar site to get more useful articles like this soon.
 Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!