ரமளானை முழுமையாக அடைந்து கொள்வதற்கு 15 எளிய வழிகள்

ரமளானை முழுமையாய் அடைய 15 எளிய வழிகள்
ரமளானை அடைந்தும் அதை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளாதவன் மீது இறைவனின் சாபத்தை நபி (ﷺ) அவர்கள் வேண்டிய ஹதீதை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் இம்மாதத்தை முழுமையாய் பயன்படுத்துகின்றோமா?

ஏனைய மாதங்களை விட 70 மடங்கு அதிக நன்மைகளை தரக் கூடிய இம்மாதத்தின் ஒவ்வொரு விநாடியும் வீண் போகாமல் பயன்படுத்துகின்றோமா?

நம்மில் பலர் ரமளானின் ஆரம்பத்தில் இருந்ததை போன்றே ரமளானின் இறுதியிலும் இருக்கிறோம். ஒவ்வொரு ரமளானிலும் நாம் “இன்-ஷா அல்லாஹ் அடுத்த ரமளானில் இருந்தாவது என்னை திருத்தி கொள்வேன்” என்பதே.

கடந்து செல்லும் ரமளான்கள் நம்மிடையே எவ்வித பாதிப்பையும், மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எதிர்வரும் ரமளான் அதிலிருந்து மாறுபட்டு நம்மை மாற்றக் கூடிய ஒன்றாக மாற நாம் முழுமையாக ரமளானின் பலனை அடைந்து கொள்ள எளிமையான பதினைந்து வழிகளை பட்டியலிட்டுள்ளேன்.

படிப்பதோடு மட்டும் நின்று விடாமல் இன்ஷா அல்லாஹ் இதனை அமுல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள். பட்டியலிடும் விடயங்கள் மிக அடிப்படையான ஒன்றாக கூட இருக்கலாம்.

பெரும்பாலும் அடிப்படைகளில் தானே நாம் கோட்டை விடுகின்றோம். இல்லையென்றால் நம்முடைய மஸ்ஜித்களில் பஜ்ர் தொழுகைக்கும் ஜும்மாவுக்கும் வரக்கூடிய மக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்குமா என்ன?

01. சிதறடிக்கும் செயல்கள்

கடந்த தலைமுறையை விட  ரமளானில் நமது நோக்கத்தை அடைய விடாமல் தடுக்கும் செயல்கள் ஏராளமாக உள்ளன.

அனுமதிக்கப்பட்ட ஆகுமான செயல்களாக இருப்பினும் ரமளான் மாதத்தின் ஒவ்வொரு விநாடியையும் வீணாக்கி விடக் கூடாது எனும் அடிப்படையில் சில செயல்களிலிருந்து நம்மை விலக்கி கொள்ளவோ அல்லது குறைத்து கொள்ளவோ முயற்சிக்க வேண்டும்.

(உதாரணமாக) தொலைக்காட்சியபை் பார்த்தல், பத்திரிகைகள் சஞ்சிகைகளைப் படித்தல், முகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களை உபயோகித்தல், அதிகமான நேரம் உறங்கி காலத்தை கழித்தல்.

02. தக்வா (இறையச்சம்)

அல்லாஹ் (ﷻ) நோன்பின் நோக்கத்தை பற்றி கூறும் போது ‘தக்வா’ உடையவர்களாக மாறவே உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றான்.

நோன்பு நோற்கும் போது யார் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் (ﷻ) பார்க்கின்றான் எனும் உள்ளச்சத்துடன் உண்ணாமல், பருகாமல் இருக்கும் நாம் எமது வாழ்வின் எல்லா காலங்களிலும் அனைத்து செயல்களையும் இறைவன் கண்காணிக்கிறான் எனும் உணர்வை உள்ளச்சத்தைப் பெற்று கொள்ள வேண்டும்.

03. அறிவு

இஸ்லாம் மார்க்கம் பற்றிய அறிவை பெறுவதில் அதிக முனைப்பு காட்டுவது. குறிப்பாக ரமளான் மாதத்தின் சிறப்புகள், நோன்பின் சிறப்புகள், நோன்பின் சட்டங்கள், கியாமுல் லைல், ஸதகா, நற்காரியங்கள் குறித்த விடயங்களை அறிந்து தெரிந்து கொள்வது ரமளானை முழுமையாக அடைய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.

04. பாவங்களை விட சிறந்த காலம்

நம்மிடையே விட்டுவிட முடியாத பாவங்கள், கெட்ட செயல்கள் ஏதும் இருந்தால் அதை முழுமையாக களைவதற்கு சிறந்த காலம் ரமளானை விட வேறொன்றுமில்லை.

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள் “யார் பொய் சொல்வதையும், அவற்றை நடைமுறைபடுத்துவதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்துடனும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை” என்பது நாம் அறிந்த விடயமாகும்.

எனவே புகை பிடிப்பது, தீமையான விடயங்களைப் பார்ப்பது, புறம், பொய் பேசுதல் போன்ற அனைத்து தீய விடயங்களையும் ரமளானில் விடுவதன் மூலம் முற்று முழுதாக அவற்றை நம் வாழ்விலிருந்தும் களைய வேண்டும்.

05. தொழுகை

பொதுவாக நம்மில் எல்லோரும் ரமளானில் தொழுவோம் என்றாலும் எல்லா காலங்களிலும் இமாம் ஜமாத்துடன் தொழுகைகளை முறையாக பேண வேண்டும்.

பர்ளான தொழுகையுடன் மாத்திரம் நிறுத்தி கொள்ளாமல் சுன்னத்தான, நபில் வணக்கங்களையும் பேண வேண்டும். இப்பழக்கத்தை ரமளானுடை காலத்திற்குப் பிறகும் தொடர வேண்டும்.

06. குர்ஆனுடன் தொடர்பு

ரமளானில் அல்-குரான் இறக்கப்பட்டதன் காரணமாகவே ரமளான் மாதத்திற்கு இத்தகைய சிறப்பு உள்ளது.

மேலும் அல்-குரான் இறக்கப்பட்ட இரவே 1000 மாதங்களை விட சிறந்ததாக உள்ளது. ஜாஹிலிய்யத் எனும் அறியாமையில் கிடந்த மக்களை நபி (ﷺ) குர்ஆனை கொண்டே நேர்வழிபடுத்தினார்கள்.

எனவே குர் ஆனுடனான எமது தொடர்பை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் அல்-குர் ஆனை ஒரு முறையாவது முழுமையாக ஓதி முடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்-குர்ஆனை ஓத தெரியாதவர்கள் அல்-குர் ஆனை முறையாக ஓதுவதற்கு கற்று கொள்ள வேண்டும்.

07. தர்மம்

ரமளானில் வீசும் காற்றை விட வேகமாக தர்மம் செய்ய கூடியவராக நபி (ﷺ) அவர்கள் இருந்தார்கள் எனும் ஹதீஸின் மூலம் இம்மாதத்தில் அதிகம் தான தர்மங்கள் செய்ய முயற்சிக்க வேண்டும். குறிப்பாக ஸகாத் கடமையானவர்கள் அதை முறையாக நிறைவேற்ற வேண்டும்.

08. முப்பது நோன்புக்கும் அதிகமாக நோன்பிருக்க வேண்டும்.

முப்பது நோன்புக்கும் அதிகமாக நோன்பு நோற்பதற்கு முயற்சிக்க வேண்டும். எப்படி?

யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கின்றாரோ அவருக்கு நோன்பாளிக்கு கொடுக்கப்படும் நன்மையை இறைவன் தருகிறான் எனும் ஹதீதை நாம் அறிந்திருக்கிறோம்.

எனவே தினமும் குறைந்தது ஒரு நபருக்காவது நோன்பு திறக்க உதவி செய்தால் 60 நோன்பின் நன்மைகள் நமக்கு கிடைத்து விடும்.

09. துஆ

மூன்று நபர்களுடைய பிரார்தனையை அல்லாஹ் மறுக்க மாட்டான், அதில் நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளி கேட்கும் துஆவும் ஒன்றாகும்.

பெரும்பாலும் நம்மில் பலர் குறிப்பிட்ட அந்த பாக்கியமிக்க நேரத்தை விருந்து கொடுப்பதில், பள்ளிவாயிலில் இடம் பிடிப்பதில், பேசி கொண்டிருப்பதில் வீணடிக்கின்றோம். எனவே அந்நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

10. இரவு தொழுகைகள்

கியாமுல் லைல் எனப்படும் இரவு நேர தொழுகைகளை நிறைவேற்றுதல் வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த அவசரமான தொழுகைகளில் கலந்து கொள்ளாமல் நிதானமாக குர்ஆனை ஓதும் தொழுகைகளில் கலந்து கொள்வதோடு நாமும் முடியுமான விதத்தில் அதிகாலை நேரத்தில் தொழ வேண்டும்.

யார் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடனும் ரமளானின் இரவுகளில் நின்று வணங்கினாரோ அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நபி (ﷺ) அவர்களின் வார்த்தை நம் விடயத்தில் உண்மையாக வேண்டும்.

11. ஸஹர் உணவு

ஸஹர் செய்வதில் அபிவிருத்தி உள்ளது எனும் நபி (ﷺ) அவர்களின் கூற்றுக்கேற்ப ஸஹர் செய்வதை நிச்சயம் நாம் செய்ய வேண்டும். சிலர் இரவே உணவு சாப்பிட்டு விட்டு ஸஹர் செய்யாமல் தூங்கி விடுவதை போல் இருக்கக் கூடாது.

12. மிஸ்வாக்

எம்மில் பலர் தக்வா என்று நினைத்து கொண்டு ரமளானில் பல் விளக்காமல், குளிக்காமல் எந்த வேலைகளையும் செய்யாமல் இருக்கின்றனர்.

நோன்பு நோற்றிருக்கும் போது நபி (ﷺ) அவர்கள் பல தடவை மிஸ்வாக் செய்துள்ளார்கள் எனும் ஹதீஸின் அடிப்படையில் ரமளானிலும் சுத்தமாக இருக்க முயற்சிக்க வேண்டும்.

13. இஃதிகாப்

நபி (ﷺ) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். எனவே நாமும் முடிந்த வரை ரமளானின் கடைசி பத்து நாட்களோ அல்லது சில நாட்களாவது இஃதிகாப் இருக்க முயற்சிக்க வேண்டும்.

14. பிறருக்கு உதவி

ரமளானில் நாம் பிறருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதிலும் குறை வைத்து விடக் கூடாது.

நம்மால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்வதுடன் நம்து பெற்றோருக்கு, குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கு மற்றும் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை குறையின்றி செய்ய வேண்டும்.

15. நமது இல்லத்திலும் ரமளானுடைய சூழல்

நாம் முயற்சிக்கும் இந் நற்காரியங்களை நம்முடைய வீட்டு உறுப்பினர்களும் செய்ய கூடியவர்களாக மாறும் வகையில் நமது வீட்டு சூழல்கள் மாற்றப்பட வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் எனும் நபி (ﷺ) அவர்களின் ஹதீஸின் அடிப்படையில் நம்முடைய பொறுப்பில் உள்ள நம் மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள் ஆகியோரையும் இவ்வடிப்படையில் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

அன்பின் சகோதரர்களே, படித்து முடிந்தவுடன் இதை எழுதிய என்னையும் உங்களது பிராத்தனையில் இணைத்து கொள்ளுங்கள்.  மறுமையில் அல்லாஹ் (ﷻ) நம் அனைவரையும் நபி (ﷺ) அவர்களுடன் எழுப்புவானாக. ஆமீன்

– பெரோஸ்கான் –

Assalamu Alaikkum!
Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!