ரமளான் மாதத்தில் நாம் மிகவும் கவனக்குறைவாக இருப்பதால் பல விடயங்களில் கோட்டை விட்டு விடுகிறோம்.
இதன் காரணமாக ரமளானுடைய நன்மைகளை நாம் இழந்து விடுவதோடு இறைவனின் பார்வையில் குற்றவாளிகளாகவும் ஆகிவிடுகின்ற ஆபத்து இருக்கின்றது.
எனவே, கீழே குறிப்பிட்டுள்ள விடயங்களில் நாம் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்.
01. தராவீஹ் தொழுகைக்குப் பிறகு கண் விழித்தல்
இரவில் வெகு நேரம் தேவையில்லாமல் விழித்திருக்கிறோம். தராவீஹ் தொழுகைக்குப் பின்னரும் வெகு நேரம் அரட்டைகளில் நேரங் கழித்து விட்டு தூங்கச் செல்கின்றோம்.
இன்னும் சிலர் ஸஹர் நேரம் வரை தூங்காமல் இருந்து விட்டு ஸஹர் செய்த பின்பே தூங்கப் போகிறார்கள்.
அதே போல், பகல் முழுதும் தூங்குகின்றோம். நோன்பு நோற்கின்றோம் எனும் போர்வையில் பெரும் சோம்பேறிகளாக மாறிவிடுகின்றோம்.
இதே ரமளான் மாதத்தில் தான் பத்ர் யுத்தமும் மக்கா வெற்றியும் நடந்துள்ளன. நம்மைப் போன்ற சோம்பேறிகளால் இந்த யுத்தக் களங்களை எல்லாம் சந்திக்க முடியுமா? என்பதை கொஞ்சம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
02. லுஹர் தொழுகையை விடுதல்
பகலில் லுஹர் தொழுகையைக் கூட தொழாமல் சிலர் தூங்குகின்றார்கள். இன்னும் சிலர் சுபஹ் தொழுகையைக் கூட தொழாமல் ‘ஸஹ்ர்’ செய்தவுடன் தூங்கப் போய் விடுகின்றார்கள்.
நோன்புக் காலங்களில் லுஹர் மற்றும் அஸர் தொழுகைகள் பரிதாபமான நிலைக்கு ஆளாகி விடுகின்றன.
03. மஸ்ஜித்கள் ஏற்பாடு செய்யாத ஆன்மாவிற்கான விருந்து
உண்ணுவதிலும் பருகுவதிலும் பெரும் பணத்தைச் செலவு செய்கிறோம் என சொல்வதோடு அதற்காக ஏகப்பட்ட நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கின்றோம்.
மஸ்ஜிதுகளில் கூட நோன்பாளிகளுடைய ‘தர்பியா’ வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட அவர்களுக்கு சிறப்பான இஃப்தார் உணவுகளையும், பண்டங்களையும் தயாரிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன.
ஸஹாபாக்கள், தாபிஈன்கள் காலத்தில் ஈமானுக்கும் தக்வாவிற்கும் மஸ்ஜித்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுமாம்.
ரமளான் மாதம் வந்துவிட்டால் இஃப்தார் விருந்துகள் களைகட்டி விடுகின்றன. இப்போது நிலைமை ஸஹ்ரு விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அளவுக்கு சென்றுவிட்டது.
இரவின் கடைசிப் பகுதியில் படைத்து பரிபாளிக்கும் இறைவனுக்கு முன்னால் மண்டியிட்டு தொழுது, பிரார்தனைகள் செய்து வேண்டுகோள்களை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக விருந்துகளை ஏற்பாடு செய்வதிலும் அத்தகைய விருந்துக்கு போவதிலும் வருவதிலும் நாம் நேரத்தைச் செலவிடுகின்றோம்.
ரமளான் மாதத்தில் ஏனைய மாதங்களை விட நமக்கு உணவுச் செலவுகள் சற்று அதிக மாகவே செலவாகின்றமை கவலையுடன் கவனத்தைப் பதிக்க வேண்டிய விடயமாகும்.
04. பொழுதை கழிக்கும் நேரங்களா ரமளான்?
ரமளான் மாதம் இபாதத்துக்கான மாதம் என்பது நமது நினைவில் இருப்பதில்லை. நோன்பிருந்து பட்டினி கிடக்கின்றோம் என்பதையே பெரிதாக நினைத்துக்கொண்டு அதிகளவான நேரத்தை வீணடித்து விடுகின்றோம்.
தூக்கம், அலட்சியம், அநாவசியமான பொழுதுபோக்குகள், டிவி, அரட்டை, விளையாட்டுக்கள், சமூக ஊடகங்கள் என பல வழிகளிலில் நம்முடைய ரமளான் மாதத்தின் பாக்கியமிக்க பொன்னான நேரம் கழிந்து விடுகின்றது.
‘நோன்பு பிடித்துக் கொண்டு தூங்கினாலும் நன்மை’ என அதற்கும் ஒரு நியாயத்தை நாம் கற்பித்துக் கொள்கின்றோம். மற்ற காலங்களில் அளவுக்கதிமாக சாப்பிடுவதால் ரமளானில் சாப்பிடாமல் இருப்பதே பெரும் கஷ்டமாக இருக்கின்றது.
‘தொழுவது என்பது பிரச்சனையே இல்லை. நோன்பு பிடிப்பதுதான் பிரச்சனை’ என பலரும் சர்வ சாதாரணமாகச் சொல்வதைப் பார்க்கலாம்.
05. சமையல் களைப்பில் பெண்கள்
நம்முடைய பெண்களின் நிலையும் படுமோசமாக காணப்படுகின்றது. அவர்களை நாம் சமையலறை வாசிகளாக மாற்றி விட்டோம்.
இஃப்தாருக்கான ஏற்பாடுகள், பின்னர் ஸஹருக்கான ஏற்பாடுகள் என உணவு தயாரிப்பதிலேயே அவர்கள் களைத்துப் போய்விடுகிறார்கள்.
இஃப்தார் முடிந்ததவுடன் இரவு உணவிற்கான தயாரிப்புகள் வேறு அவர்களை படுத்துகின்றன. கடைசியில் அவர்களுக்கு இஷா தொழுவதே பெரும் சாதனையாக மாறி விடுகின்றது. ரமளானின் இரவுத் தொழுகைகளைப் பற்றி அவர்களுக்கு நினைப்பதற்கு கூட நேரமில்லை.
06. ஊர் சுற்றும் வாலிபர்கள்
பெருமபாலான இடங்களில் ரமளான் மாதத்தில் இளைஞர்கள் ஊர் சுற்றுவதிலும் கூடி நின்று அரட்டை அடிப்பதிலும் காலத்தைக் கழித்துவிடுகிறார்கள்.
ரமளான் மாதம் மறுபடியும் ஒருமுறை நமக்குக் கிடைப்பது என்பது சந்தேகம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்னும் சிந்தனையுடன் விவேகமாக செயல்படுபவர்கள் யாருமில்லை.
07. அமல்களை மறக்கடிக்கும் வியாபாரம்
இறைவன் ஈமானைப் பற்றியும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியைப் பற்றியும் கூறும் போது அது ‘சிறப்பான, நஷ்டம் ஏற்படாத வியாபாரம்’ என கூறுகின்றான். இதை விட பெரிய வியாபாரம் வேறு எதுவும் கிடையாது.
நமது சமூகத்தின் வியாபாரிகளுக்கு இது உறைப்பதே கிடையாது. அதுவும் குறிப்பாக ரமளான் மாதத்தின் கடைசி இரவுகளில் அதிகமதிகம் நன்மைகளைக் கொள்ளையடிப்பதை விட்டுவிட்டு உலக லாபங்களை ஈட்டுவதிலேயே அதிக முனைப்பு காட்டுகின்றார்கள்.
லைலத்துல் கத்ரு இரவை விட அன்றைய தினம் வியாபாரத்தில் கிடைக்கும் தொகை அவர்களுக்கு பெரிதாகவும் முக்கியமானதாகவும் மாறிவிட்டது.
08. புறம் பேசுதல்
ரமளானின் பகல் பொழுதுகளில் நாம் அரட்டை அடிப்பதில் பலபேருடைய ‘கறி’யைச் சாப்பிடுகின்றோம். ஆம், பலரைப் பற்றி புறம் பேசுகின்றோம். அவதூறுகளை பேசித் திரிகின்றோம்.
இதனால் சாப்பிடாமல் பட்டினி கிடந்தும் நமக்கு நோன்புக்கான நன்மைகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக, பாவமும் இறைவனுடைய கோபமும்தான் கிடைக்கின்றது.
09. அலட்சியம் செய்யப்படும் தொழுகைகள்
ரமளான் மாத இரவுத் தொழுகையில் நாம் அதிகம் கவனம் செலுத்துவதே இல்லை. பொடுபோக்காக இருந்து விடுகின்றோம். வழக்கமாக மஸ்ஜித்துக்கு வருவோர் கூட நேர காலத்துடன் வருவதில்லை. ஒன்றிரண்டு ரகஅத்துகள் தொழுதுவிட்டு போய்விடுகிறோம்.
10.அமல்களை மறக்கடிக்கும் சஹர் நேர டிவி நிகழ்ச்சிகள்
ரமளான் காலத்தில் தொலைக் காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள், அறிஞர்களின் பயான்கள் ஒளிபரப்பாகின்றன. தயவுசெய்து இதில் எதனையும் பார்க்காதீர்கள்.
என்னதான் மிகப்பெரிய அறிஞர் உரையாற்றினாலும் தொலைக் காட்சியை ஆன் செய்யாதீர்கள்.
உலகிலேயே மிகப் பெரும் அறிஞர்களின் உரைகளைக் கேட்பதை விடவும் என்னையும் உங்களையும் படைத்த ஏக இறைவனுக்கு முன்னால் புனிதமிக்க ஸஹ்ரு நேரத்தில் நாம் கேட்கும் பிரார்தனைகளுக்கு பெரும் சிறப்பு இருக்கின்றது.
ஆகையால், ஸஹர் உணவு உண்பதற்காகக எழுந்திருக்கும் போது முடிந்த வரை இரண்டு ரகஅத்களாவது தொழுது கொள்ளுங்கள். நாம் தான் முன்னிரவில் தராவீஹ் தொழுது விட்டோமே என அசட்டையாக இருந்து விடாதீர்கள்.
என்ன தான் தராவீஹ் தொழுதாலும் பின்னிரவில் எழுந்து ஸஹருக்கு முன் இரண்டு ரகஅத் தொழுது துஆ கேட்பதன் சிறப்புக்கு வேறு எதுவுமே ஈடாகாது.
– அப்துர் ரஹ்மான் உமரி –