ரமழான் மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு

ரமழான் மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு
அல்லாஹ் (ﷻ) கூறுகிறான்…

”விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (அல்-குர்ஆன் 2:183)

(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- (அல்-குர்ஆன் 2:184)

ரமழான் மாதம் எத்தகையதென்றால்அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாடகளின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்க வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை, குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே. (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்- (அல்-குர்ஆன் 2:185)

நோன்பு கால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியுடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது, அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள், நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொணடிருந்ததை அல்லாஹ் நன்கறிவான், அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக்கொள்ளுங்கள், இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள், இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள், இவையே அல்லாஹ் விதித்த வரும்புகளாகும், அந்த வரம்புகளை (த் தாண்ட) முற்படாதீர்கள், இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகிறான். (அல்-குர்ஆன் 2:187)

    பிறை பார்த்து நோன்பு…

“நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமழானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர், இப்னு உமர் (رضي الله عنه) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னு-மாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னு-ஹிப்பான், இப்னு-குஸைமா, ஹாகீம்.)

    தகவலறிந்து நோன்பு…

“மக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள், நான் நபி (ﷺ) அவர்களிடம் ‘நான் பிறையைப் பார்த்தேன்’ என்று கூறினேன், நபி (ﷺ) அவர்கள் தானும் நோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள்.” அறிவிப்பவர், உமர் (رضي الله عنه), நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னு-ஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ.
ரமழானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள், (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி (ﷺ) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள், உடனே நபி (ﷺ) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு அறிவித்தார்கள், மறுநாள் பெருநாள் தொழுகைக்காக தொழுகை நடாத்தும் இடத்திற்கு வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர், ரிப்யீ இப்னு- கிராஷ் (رضي الله عنه) நூல்கள்- அபூதாவூத், அஹ்மத்.

    நோன்பு வைக்கும் எண்ணம் வேண்டும்…

“பஜ்ரு நேரத்திற்க்கு முன்பே நோன்பை வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது, என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர், இப்னு- உமர் (رضي الله عنه), நூல்கள்- அஹ்மத், நஸயீ, இப்னு-மாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னு-ஹிப்பான், இப்னு-குஸைமா.

    ஸஹ்ர் செய்வதில் பரகத் உண்டு…

“நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள் ஏன் என்றால் ஸஹ்ரில் பரகத் உண்டு, என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர், அனஸ் இப்னு- மாலிக் (رضي الله عنه), புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், திர்மிதீ, இப்னு-மாஜா.

    வேண்டுமென்றே நோன்பு திறப்பதைத் தாமதித்தல் கூடாது…

”என் அடியார்களில் எனக்கு மிகவம் விருப்பமானவர் (சூரியன் மறைந்தவுடன்) விரைந்து நோன்பு துறப்பவர்களாவர், என்று அல்லாஹ் (ﷻ) கூறுவதாக நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்,” அறிவிப்பவர், அபூஹூரைரா (رضي الله عنه), நூல்கள்- திர்மிதீ, அஹ்மத்.
“இரவை முன்னோக்கி பகல் பின் சென்று சூரியன் மறைந்து விட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார், என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பவர், இப்னு- உமர் (رضي الله عنه), நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
“நோன்பு துறப்பதை (தாமதமின்றி) அவசரமாக செய்யும் வரை மக்கள் நன்மையைச் செய்தவர்களாகிறார்கள்,” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர், ஸஹ்ல் இப்னு- ஸஹ்து (رضي الله عنه), நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

    பிரயாணத்தில், மற்றும் கர்ப்பிணி, தாய்மார்களின் நோன்பு…

“அல்லாஹ்வின் தூதரே! பிரயாணம் செய்யும் போதும் நோன்பு நோற்பதற்கு எனக்கு சக்தி உள்ளது, அப்போது நோன்பை நோற்பது குற்றமாகுமா? என்று நான் கேட்ட போது ”இது அல்லாஹ் (ﷻ) வழங்கிய சலுகையாகும் இதை யார் பயன்படுத்திக் கொள்கின்றாரோ அது நல்லது, யார் நோற்க விரும்புகின்றாரோ, அவர் மீது குற்றம் இல்லை” என்ற நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர், ஹம்ஸா இப்னு- அம்ரு அல் அஸ்லமீ (رضي الله عنه), நூல்கள்- முஸ்லிம், நஸயீ.
“(நான்கு ரக்-ஆத் தொழுகைகளில்) பாதியைக் குறைத்துக் கொள்வதற்கும், நோன்பை தள்ளி வைப்பதற்கும் அல்லாஹ் பிரயாணிகளுக்கு சலுகை வழங்கியுள்ளான், கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய், ஆகியோருக்கும் நோன்பிலிருந்து விலக்களித்துள்ளான்.” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர், அனஸ் இப்னு- மாலிக் (رضي الله عنه), நூல்கள்- அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னு-மாஜா.

    சக்தி பெற்றவருக்கே நோன்பு…

“யார் சக்தி பெறுகின்றார்களோ அவர்கள் ஒரு ஏழைக்கு உணவு அளிக்க வேண்டும், என்ற வசனம் பற்றி இப்னு- அப்பாஸ் (ரலி) குறிப்பிடும் போது இந்த வசனம் மாற்றப் படவில்லை, நோன்பு நோற்பதற்கு சக்தியற்ற முதியவர்கள் விடயத்தில் இந்தச் சட்டம் இன்னும் உள்ளது, என்றார்கள் அதாவது அவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பார்கள்.” என்றார்கள். அறிவிப்பவர், அதாவு, நூல்- புகாரி.

    நோன்பாளி மறந்து விட்டால்…

“நோன்பாளி மறதியினால் உண்ணவோ, பருகவோ செய்தால் (நினைவு வந்ததும்) தன் நோன்பை தொடரந்து நோற்கட்டும், அவரை அல்லாஹ்தான் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான்”, என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர், அபூஹூரைரா (رضي الله عنه), நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னு-மாஜா.

    நோன்பாளி என்று கூறி விட வேண்டும்…

“உங்களில் ஒருவர் நோன்பு வைத்திருக்கும் போது தீய பேச்சுக்கள் பேசக் கூடாது, வீண் சண்டைகளில் ஈடுபடக் கூடாது, யாரேனும் அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு அழைத்தால், நான் ஒரு நோன்பாளி என்று கூறிவிட வேண்டும்.” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர், அபூஹூரைரா (رضي الله عنه), நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

    பொய் சொல்லலாகாது…

“(நோன்பு நோற்றிருக்கும் போது) பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும் விடவில்லையோ அவர் பசியோடும், தாகத்துடனும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை”, என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர், அபூஹூரைரா (رضي الله عنه), நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னு-மாஜா.

    தண்ணீர் தூய்மைப் படுத்தும்…

“உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தை கொண்டு நோன்பு துறக்கவும், அது கிடைக்கா விடின் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும், ஏனெனில் தண்ணீர் தூய்மைப் படுத்தக் கூடியதாகும்.” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர், ஸல்மான் இப்னு- ஆமிர் (رضي الله عنه), நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்.

    உணவிற்கே முதலிடம்…

“இரவு உணவு வைக்கப்பட்டால், மஃக்ரிப் தொழுவதற்கு முன் உணவிற்கு முதலிடம் கொடுங்கள், உணவு உண்பதை தாமதிக்க வேண்டாம்,” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர், அனஸ் இப்னு- மாலிக் (رضي الله عنه), நூல்- புகாரி.
இமாம் தொழுகையைத் ஆரம்பித்து குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பதை செவியுற்றாலும் இப்னு- உமர் (رضي الله عنه) சாப்பாட்டை முடித்து விட்டே தொழுகையில் கலந்து கொள்வார்கள். நூல்- புகாரி.

    விடுபட்ட நோன்புகள்…

‘ரமழானில் சில நோன்புகள் (மாதவிடாய் போன்ற காரணங்களால்) எனக்கு விடுபட்டு (களாவாகி) விடும், (11 மாதங்கள் கழித்து) ஷாஃபானில் தவிர அதை என்னால் நோற்க இயலாது, நபி (ﷺ) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளே இதற்கு காரணம்.” அறிவிப்பவர், ஆயிஷா (رضي الله عنها), நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத். திர்மிதீ, இப்னு-மாஜா.

    நோன்பாளி தன் மனைவியிடத்தில்…

“நபி (ﷺ) அவர்கள் நோன்பு வைத்திருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுபவர்களாகவும், கட்டி அணைப்பவர்களாகவும் இருந்தனர், எனினும் நபி (ﷺ) அவர்கள் உங்களையெல்லாம் விட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர்”. அறிவிப்பவர், ஆயிஷா (رضي الله عنها), நூல்கள்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், இப்னு-மாஜா.
ஒரு மனிதர் நபி (ﷺ) அவர்களிடம் நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றிக் கேட்டார், அவருக்கு நபி (ﷺ) அவர்கள் அனுமதி வழங்கினார்கள், பின்பு மற்றெருவரும் வந்து கேட்ட போது, அவருக்குத் தடை விதித்தார்கள், நபி (ﷺ) அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். அறிவிப்பவர், அபூஹூரைரா (رضي الله عنه), நூல்- அபூதாவூத்.
(இளைஞர்- இள மனைவி இருவருமே சுலபத்தில் உணர்ச்சி வசப்பட்டு இறை வரம்பை மீறி விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப் படுகின்றது)

    நோன்பாளி தன் மனைவியுடன் கூடிவிட்டால்…?

ஒரு மனிதர் நபி (ﷺ) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் நாசமாகி விட்டேன்’ என்றார்,”என்ன நாசமாகி விட்டீர்?” என்று நபி (ﷺ) அவர்கள் கேட்டபோது,
 
‘ரமளானில் (பகல் பொழுதில்) என் மனைவியுடன் சேர்ந்து விட்டேன்’ என்றார்,
 
”ஒரு அடிமையை விடுதலை செய்யும் அளவிற்கு உம்மிடம் வசதி இருக்கின்றதா?” என்று நபி (ﷺ) அவர்கள் கேட்க, அவர் ‘இல்லை’ என்றார்,”தொடர்ந்து இரண்டு மாதங்கள் தொடர்து நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கின்றதா?” என்று நபி (ﷺ) அவர்கள் கேட்க, அவர் ‘இல்லை’ என்றார், அவ்வாறெனின் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு இயலுமா? என்று நபி (ﷺ) அவர்கள் கேட்க, அவர் ‘இயலாது’ என்றார்,
 
பின்பு நபி (ﷺ) அவர்கள் சற்று நேரம் (அமைதியாக) உடகார்ந்து இருந்தார்கள் பதினைந்து ஸாவு கொள்ளவு உள்ள பாத்திரத்தில் பேரீத்தம் பழம் நபி (ﷺ) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது, (அதை அவரிடம் கொடுத்து) ”இதை தர்மம் செய்வீராக” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்,
 
அதற்கு அவர் ‘என்னை விட ஏழைக்கா தர்மம் செய்யச் சொல்கின்றீர்கள்..? இந்த மதீனா முழுவதும் எம்மை விட ஏழைகள் எவருமில்லை..’ என்று அவர் கூறியதும், தனது கடைவாய் பற்கள் தெரியும் அளவுக்கு நபி (ﷺ) அவர்கள் சிரித்தார்கள்,
 
பின்பு ”இதைக் எடுத்துச் சென்று உமது குடும்பத்தினருக்கு கொடுப்பீராக” என்று கூறினார்கள். அறிவிப்பவர், அபூஹூரைரா (رضي الله عنه), நூல்கள்- புகார், முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னு-மாஜா.
அப்படியெனில் நீர் முறித்த நோன்பிற்குப் பகரமாக ஒரு நோன்பு நோற்று விடுவீராக” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள், என்று மேலதிக விளக்கமாக இப்னு-மாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

    குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா…?

நபி (ﷺ) அவர்கள் இல்லற உறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்புக் கடமையான நிலையில் ரமழான் நோன்பை நோற்பார்கள். அறிவிப்பவர்கள், ஆயிஷா (رضي الله عنها), உம்மு ஸல்மா (رضي الله عنها), நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
Assalamu Alaikkum!
Subscribe to our Sarinigar site to get more useful articles like this soon.
 Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!