வரி (Tax) கட்டினால் ஸகாத் கொடுக்கத் தேவையில்லையா?

வரி (Tax) கட்டினால் ஸகாத் கொடுக்கத் தேவையில்லையா?
இன்று சில முஸ்லிம் சகோதர, சகோதரிள் ஸகாத் மற்றும் உள்நாட்டு வரிகள் (Tax) தொடர்பாக போதிய தெளிவின்மையில் இருப்பதாக அறிய முடிகின்றது.

அவர்களது எண்ணம் யாதெனில் ‘நாங்கள் எங்களின் வருமானத்தில் குறிப்பிடத் தக்க ஒரு பெரும் தொகையினை தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு வரியாகச் செலுத்துகின்றோம்.

அந்தப் பணம் அரசாங்கம் மூலமாக அந்நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் அந்நாட்டின் மேம்பாட்டிற்காக செலவிடப்படுகின்றது. ஸகாத் பணமும் அதற்காகத் தானே செலவிடப்படுகின்றது.

எனவே அரசாங்கம் மூலமாக நாமும் அதே பணியைச் செய்வதால் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை‘ என்பது அவர்களது எண்ணமக உள்ளது.

இவ்வாறு எண்ணம் கொள்வதற்கு காரணம் அவர்களுக்கு ஸகாத் பற்றிய போதிய அடிப்படை அறிவு இல்லாமையே ஆகும். ஸகாத் என்பது  நமது இறைவனாகிய அல்லாஹ்வால் முஸ்லிம்களின் மீது விதிக்கப்பட்ட கடமையாகும்.

வரி (Tax) என்பது குறிப்பிட்ட ஒரு நாட்டை நிர்வகித்து அதை மேம்படுத்துவதற்காகவும் சேவைகளை வழங்குவதற்காகவும் அந்நாட்டின் அரசாங்கத்தால் அதன் மக்களின் மீது விதிக்கப்ட்ட ஒரு கட்டணமாகும்.

இவ்வாறு பெறப்படும் வரிப்பணங்களினால் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் பலன் அளிக்கின்றது என்பதில் எத்தகைய சந்தேகமும் கிடையாது.

ஆனால் ஸகாத் என்பது இறைவனால் வசதியுடையவர்கள் மீது விதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டிய தொகை என்பது வலியுறத்தப்பட்ட ஒன்றாகும்.

ஒருவன் வரி செலுத்துகிறான் என்றால் அவன் அந்த நாட்டில் தங்கியிருப்பதற்காவும் பொதுச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காவும் வரிப்பணம் கட்டுகின்றானே தவிர அல்லாஹ்வின் அன்பையும் நன்மையையும் பெறுவதற்காக அந்த வரியை கட்டுவதில்லை.

ஆனால் முறையானதொரு இஸ்லாமிய நாடாக இருக்குமானால் அங்கு இவ்வாறு வரிவிதிக்காமல் ஸகாத்தை பணத்தை வசூலித்து அதை அதற்குரிய முறையில் இறைவனது கட்டளைப்படி செலவு செய்யும்.

எனவே ஒருவர் ஸகாத் செலுத்துவது என்பது இறைவனுடைய அன்பையும் நன்மையும் பெறுவதற்காக இது இறைவனது கட்டளை என்று உணர்ந்து இறைவன் காட்டிய வழியில் இறைவனுக்காகவே அதனை செலவு செய்வதாகும்.

அந்த ஸகாத் பணத்தை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என இறைவன் கட்டளையிட்டிருக்கின்றானோ அவர்களுக்காக மட்டுமே அது செலவிடப்பட வேண்டிய தொகையாகும்.

அல்லாஹ் “ﷻ” கூறுகிறான்: –

ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார். (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார். மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும். மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்). (அல்-குர்ஆன் 92:17-21)

    ஸகாத் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும்?

யாரெல்லாம் ஸகாத் பெற தகுதியுடையோர் என்பதை அல்லாஹ் “ﷻ” தன்னுடைய திருமறையில் எட்டு வகையினரைக் பட்டியலிட்டு கூறுகிறான்.

அல்லாஹ் “ﷻ” கூறுகிறான்: –

(ஸகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)

இவர்கள் தான் ஸகாத் பெற தகுதியுடையவர்கள் என்று அல்லாஹ் “ﷻ” கூறுகின்றான். ஆனால் எம்மில் சிலர் அறியாமையின் காரணமாக மஸ்ஜிதிகள் கட்டுதல், பள்ளிக் கூடங்கள் கட்டுதல் மற்றும் பலதரப்பட்ட பொது சேவைகளுக்காகவும் மற்றும் அல்லாஹ் விதித்த எட்டு கூட்டத்தினரல்லாத பிறருக்கும் தமது ஸகாத் பணத்திலிருந்து செலவழித்து விட்டு தாம் ஸகாத் கொடுத்துவிட்டதாக கருதுகின்றனர்.

இவர்கள் மேற்கண்ட அல்-குர்ஆன் வசனத்திலிருந்து தெளிவு பெற கடமைப்பட்டுள்ளார்கள்.

“Jazaakallaahu khairan” சுவனத்தென்றல்

Follow us to get more useful articles like this soon. Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply