வாகன விபத்து ஏற்பட்டால் பதற்றமடையாமல் இதனையும் சற்று சிந்தியுங்கள்

வாகன விபத்து ஏற்பட்டால் பதற்றமடையாமல் இதனையும் சற்று சிந்தியுங்கள்
(வாகன விபத்து ) நீங்கள் எவ்வளவு சிறந்த வாகன ஓட்டுனராக இருந்தாலும், வீதிக்கு சென்றதும் பலதரப்பட்ட வாகன ஓட்டுனர்களுடன் தான் உங்களது வானத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
அதனிடையே சிலர் தீடீரென பாதையை மாற்றுவார்கள், சிலர் சிக்னலே போட மாட்மார்கள், இன்னும் சிலர் நடு வீதியிலேயே ரிவர்ஸ் பண்ணுவார்கள், திடீரென்று வாகனத்தை நிறுத்துவார்கள். எனவே, அங்கு விபத்து ஏற்பட அதிக நேரம் எடுக்காது.
இது போன்ற பிரச்சனையின் போது பதற்றப்பட்டால், உங்கள் நேரமும் பணமும் விரயமாகி, தேவையற்ற பிரச்சனைகளும் வரலாம். எனவே தெளிவான சிந்தனையுடன், பதற்றப்படாமல், இவ்வாறான ஒரு விபத்து சூழலில் பிரச்சனையை எதிர்கொள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

1. சண்டை என்றால் சண்டை

அலுவலகத்தில் பேனாவை தொலைத்தாலும் சண்டைக்குப் போகும் நாங்கள், நடு வீதியில் வாகனம் விபத்துக்குள்ளானவுடன் கதவைத் திறந்து, ஆயிரத்தெட்டு வார்த்தைகளை நினைத்துக் கொண்டு தான் வெளியே வருவோம்.
அப்படியிருக்கும் போது மறுபக்கத்தில் இருப்பவரும் அதே போல் சண்டித்தனத்துடன் வௌியே வந்தால் அங்கு சொல்லவே தேவையில்லை தேவையற்ற வீண் பிரச்சினைதான் ஆரம்பமாகும்.
அக்கம் பக்கத்திலிருந்து சண்டைக்கு வழு சேர்க்கும் விதமாக மக்கள் கூடினால் நிலமை இன்னும் மோசமானதாக மாறிவிடும்.
உண்மையில் இங்கே தவறை செய்த நபர்கள் தங்களின் தவறை மறைக்க முற்படுவதுடன், எப்படியும் தங்கள் தவறை மறுபக்கம் உள்ள நபர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்து அதனை நிரூபிக்க முற்படுவார்கள்.
இதைச் செய்வதற்கான எளிதான வழி தான் உரத்த குரலில் சண்டையிடுவது. இருந்தாலும் கோபத்தை ஒதுக்கி வைத்து எப்படியும் வீதியில் விபத்துகள் நடப்பது சகஜம் என்பதால் திட்டி தீர்த்து சண்டையிட்டு தீர்வை எதிர்பார்க்காமல், எதிர் தரப்பினர் சண்டைக்கு வந்தாலும் அமைதியாக இருந்து அடுத்து என்ன பண்ணலாம் என திட்டமிடுங்கள்.

2. வாகனங்களுக்கு முன் மக்கள்

நமது மக்கள் விபத்து நேரிட்டால், முதல் வேலையாக சண்டைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு தான் யாருக்காவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை தேடிப்பார்ப்பாரகள்.
எனவே இதனை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விபத்தில் ஓட்டுநரின் அதிர்ஷ்டம் மற்றும் திறமையைப் பொறுத்து வாகனத்துக்கு மட்டும் சேதத்துடன் நின்று விடலாம். ஆனால் சில சமயங்களில் வாகனத்தில் இருந்த ஒருவருக்கு அல்லது சாலையில் சென்ற ஒருவருக்கு காயம் அல்லது ஆபத்து ஏற்படலாம்.
இங்கு காயமடைந்தவர்களுக்கு நீங்கள் சிகிச்சை அளிக்கக் கடமைப்பட்டுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலுதவி செய்ய வேண்டும் என்றால் அதனை செய்யுங்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அந்தப் பொறுப்புகளை உடனடியாக நிறைவேற்றுங்கள்.
வாகனங்களுக்கு முன் மனித உயிர்களை பற்றி நினைத்துப் பாருங்கள். வெளிப்புற காயங்கள் அல்லது பிற கோளாறுகள் இல்லாவிட்டாலும், வலி ​​இருந்தால், உடனடியாக அதனை கவனித்துக் கொள்ளுங்கள்.

3. உங்களது விபத்தால் அடுத்தவர்கள் பாதிப்டையாமல் இருக்க வேண்டும்

வாகனம் விபத்துக்குள்ளானவுடன் முதலில் சண்டையிடுவதும், பின்னர் சிறு இடைவேளை எடுத்து போலீஸை அழைப்பதும், போலீஸ் வரும் வரை மீண்டும் சண்டை போடுவதும் முறையல்ல. இதனால், உங்கள் விபத்தின் காரணமாக அதிக போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் அதே போல் அதிக விபத்துக்கள் நடக்கலாம்.
எனவே அவ்வாறு இல்லாமல் இப்படி செய்து பாருங்கள். முதலில் வாகனங்களின் சக்கரங்களின் நிலை மற்றும் வாகனத்தின் முன் மற்றும் பின் நிலைகள் மற்றும் தரையில் உள்ள பிற விஷயங்களைக் குறிக்கவும்.
இன்று ஒவ்வொரு கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால், போன் கேமரா மூலம் இரு வாகனங்களையும் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் படம் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த புகைப்படங்களில் வாகன நம்பர் பிளேட்கள் படும்படி படங்களை எடுக்கவும்.
அதன் பின் இரண்டு வாகனங்களையும் சாலையின் ஓரத்திற்கு கொண்டு சென்றதன் பின் 119 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கவும் அல்லது அருகிலுள்ள போக்குவரத்து காவல்துறை அதிகாரியை அழைக்கவும்.

4. நியாயம் பக்கம் உறுதியாக நில்லுங்கள்

இதனையும் மனதில் கொள்ளுங்கள். விபத்திற்கு காரணம் மற்ற தரப்பினராக இருந்தால், அவர் வாழ்க்கையைப் படிக்காதவரோ அல்லது நியாயத்தை மதிக்காதவர் என்றால், அவர் நிச்சயமாக உங்களை வாயால் மிரட்டி சம்பவத்தை சமரசம் பண்ண முயற்சிப்பார்.
அல்லது லய்சன் உரிமம் இல்லாத நபர் வாகனத்தை ஓட்டியுள்ளார். அப்படியாக இருந்தால் ஓட்டுனர்களை மாற்ற முயற்சி செய்யலாம். ஒன்று போலீஸ் வருவதற்குள் ஓடிவிட முயற்சி செய்யலாம். அதே போல் தெரிந்த பெரிய பெரிய அதிகாரிகளுக்கு பேசவும் வாய்ப்பு உள்ளது.
நாங்கள் ஆரம்பத்தில் கூறியது போல் சண்டையிட்டு பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என சொல்வது முட்டாள் போல் அநியாயத்திற்கு தலை குனிந்து இருங்கள் என்பதல்ல.
அதனால், மற்ற தரப்பினர் இது போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்தால் அல்லது பலாத்காரமாக வேலையை மூடிவிடப் போனால், அதை உடனடியாக எதிர்த்து உங்கள் கருத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு.
சம்பந்தப்பட்ட சட்ட அதிகாரிகள் அங்கு வரும் வரை உங்கள் நிலைப்பாட்டிற்கு இடையூறு உண்டாக்க விட வேண்டாம்.

5. தவறு நம் கையில் இருந்தால்

ஒரு வாகன விபத்தின் போது உங்கள் பக்கம் தவறு என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை ஒப்புக் கொள்ளுங்கள். அதே போல் தவறை ஏற்றுக் கொண்டதற்காக மற்ற தரப்பினரின் மேள தாளத்திற்கு ஆடத் தயாராகவும் வேண்டாம்.
அவர்கள் கேட்கும் இழப்பீட்டுத் தொகையை கொடுக்கச் செல்லாதீர்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில், தவறிழைத்த தரப்பினரை பயமுறுத்த, “இப்போது எனக்கு காயமும் ஏற்பட்டுள்ளதால் பொலிஸ் அதிகாரிகள் வந்தால் உங்களை கைதும் செய்வார்கள் எனவே, இந்த இடத்திலேயே விடயத்தை முடித்துக் கொள்வோம்.” என்று கூறுவார்கள்.
இவ்வாறான சம்பவங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாகன விபத்தில் மரணம் ஏற்பட்டாலன்றி, அப்படி கைது செய்ய முடியாது.
அதுமட்டுமின்றி நாட்டில் சட்ட அமைப்பு இருக்கும் போது இவ்வாறு தீர்வு காண்பதற்கு முயற்ச்சிக்க வேண்டாம், பின்னர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவும் வாய்ப்புள்ளது. எனவே காவல்துறை மூலம் விஷயங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
தம் பக்கம் தவறு இருப்பின் தெளிவாக எடுத்துக் கூறவும். அதே போல் தன்னிச்சையாக, குறுக்கு வழியிலான தீர்வுகளுக்குப் பின்னால் செல்ல வேண்டாம்.

6. உங்கள் காப்பீட்டு முகவருடன் பேசுங்கள்

யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்திது கொண்ட பின், சரி தவறுகளை தீர்த்துக் கொண்டதன் பின், விபத்தில் வாகனத்திற்கு ஏற்பட்ட குறைபாடுகளுக்கு இழப்பீடு கோரவும் வேண்டுமல்லவா.
இதற்கு தான் (insurance) காப்பீடு ஒன்றை போடுமாறு கூறப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் வாகனத்திற்கு அதன் முழு மதிப்பை அடைவதற்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தால் அது உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
வாகன இன்சூரன்ஸ் மூலம் பணம் பெறுவது என்பது ஒழுங்கு முறைப்படி நடைபெறும் ஒரு விடயமாகும். இது காப்பீட்டு முகவருடன் பேசுவதில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து அதனை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்வார்கள்.
ஒரு விபத்து நடந்தால் இவ்வாறன முறையில் எமக்கு செயல்பட முடியும் என்றாலும், விபத்துக்கள் பற்றி நாம் தயாராகவும் இருக்க வேண்டும். அதற்கு இரண்டு விடயங்கள் இருக்கின்றது.
அதாவது மிகவும் கவனமாக வாகனத்தை ஓட்டுவது, அடுத்து உங்களுக்கு ஏற்ற பலன்களைத் தரும் காப்பீட்டுக் கொள்கையை உங்கள் வாகனத்திற்குத் தேர்வு செய்ய வேண்டும்.
– ரீஸாஹ் ஜஸ்மின் –

Leave a Reply