கோவை: கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2000 வரை குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே விலை குறைந்துள்ளது. இது தற்காலிகமானது தான் விரைவில் மீண்டும் உயரும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு பிறகு படிப்படியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை புதிய வரலாறு படைத்து வருகிறது. மத்திய அரசு இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. இதை நினைத்து மக்கள் மகிழ்ச்சியடைந்த சூழலில் மீண்டும் கிடுகிடுவென உயர தொடங்கியது தங்கத்தின் விலை.
கடந்த வாரம் ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களில் ரூ.2,000 வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் குறையுமா? – இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது: அமெரிக்க அதிபர் பல்வேறு உலக நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலகெங்கும் மத்திய வங்கிகள் வெளிநாடுகளில் வைத்திருந்த தங்கத்தை மீண்டும் தங்கள் நாடுகளுக்கு கொண்டு செல்ல தொடங்கியுள்ளன. தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. இதனால் தங்கத்தின் விலை தற்போது குறைந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஒரு சவரன் ரூ.68,480-ஆக இருந்த நிலையில் சனிக்கிழமை ரூ.66,480-ஆக குறைந்தது. இது தற்காலிகமானது தான்.
விரைவில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்க தொடங்கும். இதனால் விலை மேலும் உயரும். ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்தை விரைவில் கடந்து விடும். விலை உயர்வு காரணமாக கோவையில் தங்க நகை வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 30 சதவீதம் மட்டுமே வணிகம் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.