முதன் முறையாக வேலைக்கு செல்வது என்பது பெரும் திண்டாட்டமான விடயம் தான். எந்த வேலையும் பழகிக் கொள்ளும் வரை, அது ஒரு தொல்லையாகவே நமக்கு தோன்றும்.
அத்துடன் சும்மா நாற்காலியை சூடாக்கிட்டு இருந்தால் பணம் கிடைக்கும் என்றல்லவா நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
இவையெல்லாம் கடந்த காலத்திற்கு பொருத்தமானதாக இருந்தாலும் இன்று அவையெல்லாம் செல்லுபடியாகாது. எனவே, நீங்கள் முதன் முறையாக ஒரு வேலைக்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் முகங்கொடுக்க வேண்டிய ஏழு சிரமங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
01. அதிக வேலை
எந்த வேலைக்குச் சென்றாலும் முதலில் நினைவுக்கு வருவது “இங்கு வேலை அதிகம்” என்று தான். உண்மையில் வேலையை செய்யும் போது அதிகமான வேலைகள் இருப்பதைப் போன்று நாம் காண்கிறோம்.
காரணம் நாம் வீட்டில் சும்மா இருந்து விட்டு திடீரென வேலைக்குப் போனதால் இப்படி தோன்றுகின்றது. அதனால் வேலை அதிகம் என்று நினைத்தாலும் கவலை வேண்டாம். அது உங்கள் மனத் தோன்றலே அன்றி உண்மையில்லை.
02. வேலை புரியவில்லை
வேலை அதிகம் என்பதைப் போல் சில நேரம் வேலை என்னவென்று தெரியாமல் அல்லது புரியாமலும் இருக்கலாம். சில சமயம் பேசும் வார்த்தைகள் கூட புரியாமல் போகலாம்.
உதாரணத்திற்கு உயர் தரத்தில் கணிதம் அல்லது விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற ஒருவர் வங்கியொன்றிற்கு வேலைக்கு சென்றார் என்று வைத்துக் கொள்வோம். சாதாரன தர வகுப்பில் கூட வணிகக் கல்வியை கற்காத அந்த நபர் உடனே எப்படி வங்கியில் சொல்லப்படும் விடயங்களை புரிந்து கொள்வது.
இது உண்மையில் பெரும் திண்டாட்டமான விடயம் தான். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தெரியாத விடயங்களை குறிப்பேட்டில் எழுதி வைப்பதே சிறந்தது. இல்லையெனில் சில விடயங்கள் ஒரு போதும் புரியாமலயே போய்விடும்.
03. மெதுவான வேலை
அதே போல் எந்தவொரு வேலையையும் ஆரம்பத்தில் செய்யும் போது அதைக் கற்றுக் கொள்வதற்கு சில காலம் போகும்.
அதனால் தான் உங்கள் வேலையின் முதல் சில நாட்களில் உங்கள் “மெதுவான வேலைக்காக” நீங்கள் திட்டு வாங்கவும் நேரலாம். அந்த திட்டுகளை அதிகம் பொருட்படுத்த வேண்டாம்.
நிச்சயமாக காலப்போக்கில், உங்கள் கையின் பரிச்சயத்தாலும், உங்கள் மனதின் பரிச்சயத்தாலும் வேலை வேகமாகிறது. துரிதப்படுத்துகிறது.
04. ஏச்சு பேச்சு திட்டு
வீட்டில் சர்க்கரை உருண்டை போல் வளர்ந்த ஒரு பெண்ணையோ, பையனையோ, அவர்களை விட சில வயது மூத்த முதலாளி அல்லது மேலாளர் திட்டுவது மனதை புண்படுத்தும் விடயமாக இருக்கும்.
ஆனால் சிறிது காலம் சென்றதும் அதுவும் பழகிவிடும். உண்மையில் ஆரம்ப காலத்தில் நீங்கள் திட்டு வாங்குவது உங்களின் தவறுகளுக்காக மட்டுமன்றி அங்குள்ள நடைமுறை சிஸ்டத்திற்கு உங்களை பழக்கப்படுத்திக் கொள்வதற்காவும் தான்.
எனவே வேலை செய்யும் இடத்தின் நடைமுறைகளைப் பழகிக் கொள்ளுங்கள். விமர்சிப்பவர்களுடன், திட்டுபவர்களுடன் நட்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
05. நேரமில்லை
வேலைக்கு சென்ற முதல் நாட்களில் மனதில் தோன்றும் இன்னொரு விடயம் தான் “சுதந்திரமாக இருந்த என் வாழ்க்கை எங்கே..?” என்பது.
இது உண்மையான விடயம் தான். வேலைக்குச் செல்லத் தொடங்கினால் நாம் வழக்கமாக வாழ்ந்த சுதந்திரமான வாழ்க்கையிலிருந்து விடுபட வேண்டியிருக்கும்.
ஆனால் அதற்குச் சிறந்த வழி, அலுவலக நேரத்தை தவிர ஏனைய நேரத்தை அர்த்தமுள்ளதாகவும் சுதந்திரமாகவும் செலவிடுவது தான். உறக்கத்திற்கா ஆறு மணித்தியாலத்தை ஒதுக்கி விட்டு, மீதி நேரத்தை உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு நேரத்தை சரியாக நிர்வகிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
06. மற்றவர்கள் ..?
இந்த பிரச்சினையானது ஒரு பையனை விட ஒரு பெண்ணுக்குத் தான் அதிகம் வரும். பொதுவாக, முதல் முறையாக வேலைக்குச் செல்லும் பெண்னிற்கு அங்கு வேலை செய்பவர்களை உடனே செட் ஆக மாட்டார்கள்.
ஒரு இளைஞன் வேலைக்கு சென்றால் அங்குள்ள இளைஞர்களுடன் செட் ஆகுவதற்கு அதிக நேரம் தேவைபடாது. ஆனால் பெண்களைப் பற்றி தெரியாதா என்ன? அவர்களுக்கு அங்கு வேலை செய்பவர்கள் செட் ஆகுவதற்கு சில நாட்கள் போகும்.
அது சில பல வாரங்களாவும் இருக்கலாம். பரவாயில்லை. எல்லோரிடமும் பொறுமையாக இருங்கள். அனைவரும் சரியான நேரத்தில் செட் ஆகுவார்கள்.
07. அன்பு செலுத்துபவர்கள்
ஆம். நீங்கள் ஒரு வேலைக்குச் செல்ல தொடங்கும் போது, உங்கள் அன்புக்குரியவர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே முதலில் அது மிகவும் வித்தியாசமாக, கஷ்டமாக இருக்கும். சில வேளை உங்களுக்கு உங்களது வேலையை தூக்கி எறிந்து விட்டு பழைய வாழ்க்கைக்கு செல்லத் தோன்றும்.
ஆனால் அதுதான் இயல்பு. இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் உங்களது புதிய வேலையை விருப்பத்துடன் செய்வதற்கு பழகிக் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் செய்யக்கூடிய சிறந்த காரியமாக இந்த வேலையைச் சரியாகச் செய்வதை நினைத்துக் கொள்ளுங்கள்.
எனவே முதல் முறையாக வேலைக்குச் செல்லும் போது ஏற்படும் சிரமங்கள் தான் இவை. எனவே இவற்றை சிரமத்துடன் தாங்கிக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்…!
Reezah Jasmin
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!