இஹ்திகாப் சட்டங்கள்

இஹ்திகாப் சட்டங்கள்
இஹ்திகாப் சட்டங்கள் – இஹ்திகாப் என்ற அரபு வார்த்தைக்கு ‘தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கத்தில் மஸ்ஜிதில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஹ்திகாப் என்று கூறப்படும்.

ரமளானை முழுமையாக அடைந்து கொள்வதற்கான வழிகளில் இஃதிகாப் இருப்பதும் முக்கியமானதாகும்

நபி (ﷺ) அவர்கள் ரமளான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஹ்திகாப் இருந்துள்ளார்கள். அதே போல் நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.

ரமளானில் இஹ்திகாப் எதற்காக?

1000 மாதங்களை விடவும் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ர் இரவை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய முயற்சிக்க வேண்டும்,

வேறு எண்ணங்கள், செயல்களுக்கு இடம் கொடுத்து வணக்க வழிபாடுகளைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் 10 நாட்கள் நபி (ﷺ) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 வது ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

இஹ்திகாப் ஆரம்பம்

இஃதிகாப் இருக்க நாடுபவர்கள், ரமளானின் 20வது நாள் காலையில் பஜ்ரு தொழுகையை தொழுது விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.

நபி (ﷺ) அவர்கள் இஹ்திகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை தொழுது விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007)

ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ர் இரவை தேடுமாறு நபி (ﷺ) அவர்கள் கூறியுள்ளதை நாம் ஏலவே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுகையை தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் ஆரம்பிப்பார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.

அப்படியாக இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 வது நாள் தொழுது விட்டு இஃதிகாப் இருப்பார்கள் என்று விளங்குவதே ஏற்றதாக இருக்கும்.

இஹ்திகாப் முடிவு நேரம்

இஃதிகாப் இருப்பவர்கள் ரமளான் மாதம் பிறை 29ல் முடிந்தால் அன்றைய மஹ்ரிபில் (அதாவது ஷவ்வால் தலை பிறை தென்பட்ட இரவில்) வீடு திரும்பலாம்.

ரமளான் மாதம் 30 நாட்கள் பூர்த்தியடைந்து விட்டால் அன்றைய மஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் தான் வீடு திரும்பலாம்.

அபூஸயீத் (رضي الله عنه) கூறியதாவது: நபி (ﷺ) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுப் பகுதியில் உள்ள 10 நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். 20தாம் இரவு கழிந்து மாலையாகி 21ம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018)

நபி (ﷺ) அவர்கள் நடுப் 10ல் இஃதிகாப் இருக்கும் போது 20ம் இரவு கழிந்து மாலையாகி 21ம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற அறிவிப்பிலிருந்து, கடைசிப் 10ல் இஃதிகாப் இருப்பவர்கள் 29 வது இரவு கழிந்து அல்லது 30 வது இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் ஆரம்பிக்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.

சிலர் பெருநாள் தொழுகையை முடித்து விட்டுத் தான் வீட்டுக்கு திரும்ப வேண்டும் எனக் கூறினாலும் அதற்கு ‌ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.

மஸ்ஜிதில் கூடாரம் அமைக்கலாமா?

நபி (ﷺ) அவர்கள் ரமளானில் கடைசிப்10ல் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (رضي الله عنها) கூறினார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2033)

மேற்படி ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் ஆராயும் போது இது நபி (ﷺ) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.

நபி (ﷺ) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்ற போது ஆயிஷா (رضي الله عنها) அவர்களின் கூடாரம், ஹப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். “இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகின்றீர்களா?” என்று கேட்டு விட்டு இஹ்திகாப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் 10 நாட்கள் இஹ்திகாப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها), நூல்: புகாரீ (2034)

“நீங்கள் நன்மைத் தான் நாடுகின்றீர்களா?” என்ற கேள்வியும், நபி (ﷺ) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் நபி (ﷺ) அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகின்றது.

மேலும் பின்வரும் ஹதீஸை பார்க்கும் போது மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.

நபி (ﷺ) அவர்கள் ஸுப்ஹ் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய போது 4 கூடாரங்களைக் கண்டு இவை என்ன? என்று கேட்டார்கள். அவர்களுக்கு விபரம் கூறப்பட்டது. (புகாரீ 2041)

நபி (ﷺ) அவர்களுடன் ஸஹாபா தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற் கூறிய ஹதீஸை கவனியுங்கள்.

காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ﷺ) அவர்கள் மஸ்ஜிதில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் 4. ஒன்று நபி (ﷺ) அவர்களுக்குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (رضي الله عنها) அவர்களுக்குரியது. மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (رضي الله عنها) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (رضي الله عنها) அவர்களுக்குரியது.

இஹ்திகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் ஸஹாபா தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு அமைத்திருந்தால் அங்கு நான்கிற்கும் அதிகமான கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அங்கு இருந்ததோ மொத்தம் 4 கூடாரங்கள் மட்டுமே! எனவே ஸஹாபா தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ﷺ) அவர்கள் ஸஹாபா தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் இதன் மூலம் அறியலாம். எனவே இஹ்திகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.

இஹ்திகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள்

மஸ்ஜிதில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.

மஸ்ஜித்களில் இஃதிகாப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187)

அவசிய தேவைகளின்றி மஸ்ஜிதை விட்டு வெளியே செல்லக்கூடாது

ஆயிஷா (رضي الله عنها) கூறியதாவது: நபி (ﷺ) அவர்கள் மஸ்ஜிதில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்: புகாரி 2029)

இதன் மூலம் தேவையில்லாமல் வெளியில் செல்லலாகாது என்பதையும் அவசியத் தேவைக்காக மட்டும் வெளியே செல்லாம் என்பதையும் அறியலாம்.

பெண்கள் இஹ்திகாப் இருக்கலாமா?

பெண்கள் மஸ்ஜிதில் இஃதிகாப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.

நபி (ﷺ) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது அவர்களின் மனைவியரில் ஒருவரும் இஃதிகாப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها), நூல்: புகாரீ 309)

நபி (ﷺ) அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாப் இருந்ததாக நாம் அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.

நபி (ﷺ) அவர்களின் மனைவிமார்கள் இஹ்திகாப் இருந்ததிலிருந்து அதிக பட்சமாக பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.

மஸ்ஜிதில்களில் பெண்கள் இஹ்திகாப் இருப்பதற்கு வசதிகள் இருக்குமானால் தமது கணவனுடன் அவர்கள் இஹ்திகாப் இருக்கலாம். ஏனெனில் நபி (ﷺ) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான் அவர்களினது மனைவிமார்கள் இஹ்திகாப் இருந்துள்ளார்கள்.

பெண்கள் இஹ்திகாப் இருப்பது தொடர்பாக அறிஞர்களிடையே காணப்படும் கருத்துக்களில் மேலே நாம் கூறிய கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.


Sarinigar Main Logo, About Us, Contact Us, Privacy Policytumblr


Discover more from SARINIGAR

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “இஹ்திகாப் சட்டங்கள்

Leave a Reply

error: Content is protected !!