ஆஸ்த்மாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி

Medical, தடுப்பூசிதீவிர ஆஸ்த்மா மற்றும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை (chronic obstructive pulmonary disease COPD) குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சிகிச்சை முறையை நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். நவீன சிகிச்சைகள் எதுவும் இல்லாத இந்த உடல் நலப் பிரச்சனைகளுக்கு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தடுப்பூசி ஊசிமருந்து, இப்பிரிவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு பெரிய திருப்பம் என்று கருதப்படுகிறது.

இந்நோய்களை குணப்படுத்த இப்போது கொடுக்கப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகளை விட புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊசி மருந்து அதிக பயன் தருகிறது. மேலும் இந்த ஊசி மருந்து பிந்தைய சிகிச்சையின் தேவையை 30% குறைக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகில் ஆஸ்த்மா மற்றும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வில் இது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று லான்செட் சுவாசம் தொடர்பான மருத்துவ இதழில் (Lancet Respiratory Medicine journal) வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் முடிவுகள் கூறுகின்றன.

மோனோ க்ளோனல் ஆண்டிபாடி (monoclonal antibody) வகையைச் சேர்ந்த பென்ரலிஸுமாஃப் (Benralizumab) என்ற இந்த ஊசி மருந்து நுரையீரல் வீக்கத்தை ஏற்படுத்தும் இயசினபில் (Eosinophil) என்ற குறிப்பிட்ட இரத்த வெள்ளை அணுக்களை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மோனோ க்ளோனல் ஆண்டிபாடிகள் என்பவை ஓரின எதிர்ப்பான்கள் அல்லது ஒற்றை வகை பிறபொருளெதிரிகள்.

இவை ஒரே பரம்பரையைச் சார்ந்த பி வெள்ளையணுக்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. தீவிர ஆஸ்த்மா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மருந்து குறைந்த அளவில் கொடுக்கப்படுகிறது. நோய் பாதிப்பு தீவிரமாகும்போது அதிக அளவு மருந்து கொடுக்கப்பட்டால் அதிக பயன் ஏற்படுகிறது என்று பரிசோதனை முடிவு கூறுகிறது.

“கடந்த ஐம்பதாண்டுகளில் இந்த இரண்டு தீவிர நோய்களுக்கான சிகிச்சையில் எந்த புதிய கண்டுபிடிப்பும் ஏற்படவில்லை. இந்த இரு நோய்களால் ஆண்டுதோறும் 3.8 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். நோய் கட்டுக்கடங்காமல் தீவிரமாகும்போது இப்போது பயன்படுத்தப்படும் ஒரே ஒரு சிகிச்சை முறையான ஸ்டீராய்டு மருந்துகளை விட புதிய மருந்து சிறந்த பலனளிக்கிறது என்பதை எடுத்துக்காட்ட வேறொரு வகையில் பயன்படுத்தப்படுகிறது. இது பாதுகாப்பான மருந்து” என்று இலண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளரும் ஆய்வின் முதன்மை விஞ்ஞானியுமான பேராசிரியர் மோனா ஃபாஃபாடெல் (Prof Mona Bafadhel) கூறுகிறார். ஆஸ்த்மா மற்றும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கு செயல்திறன் மிகுந்த மருத்துவமனையின் அவசரநிலைப் பிரிவு உதவி தேவைப்படும் 158 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

நோய் பாதிப்பின் வகையைக் கண்டறிய பங்கேற்பாளர்களுக்கு உடனடி இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இயசினொஃப்பிலிக் பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சைக்குத் தகுதியானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். இயசினொஃபிபிலிக் தீவிரமாவதால் நோயாளிகளில் 50% பேருக்கு ஆஸ்த்மாவும், 30% பேருக்கு நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயும் ஏற்படுகிறது.

கிங்ஸ் கல்லூரியின் தலைமையில் இந்த ஆய்வுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் (Guy’s and St Thomas) தேசிய மருத்துவ சேவை (NHS) அறக்கட்டளை மையங்களில் நடந்தன. ஆய்வில் பங்கேற்பாளர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவினருக்கு பென்ரலிஸுமாஃப் ஊசி மருந்தும் வெறுமையான (dummy) மாத்திரையும் கொடுக்கப்பட்டது.

மற்றொரு குழுவினருக்கு ஒரு நாளைக்கு 30 மில்லி கிராம் என்ற விகிதத்தில் ஐந்து நாட்களுக்கு வழக்கமான ப்ரிக்னிஸலோன் (prednisolone) ஸ்டீராய்டு மாத்திரையும் வெறுமையான ஊசியும் கொடுக்கப்பட்டது. மூன்றாவது குழுவினர் பென்ரலிஸுமாஃப் மருந்தையும் ஸ்டீராய்டு மாத்திரையையும் பெற்றனர்.

28 நாட்களுக்கு பிறகு ஸ்டீராய்டு மாத்திரையைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்தாத நிலையில் ஊசிமருந்து கொடுக்கப்பட்டவர்களில் சுவாச பாதிப்பின் அறிகுறிகளான இருமல், இரைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சளி பாதிப்புகள் குறைந்தன. 90 நாட்களுக்குப் பிறகு ஸ்டீராய்டு பயன்படுத்தியவர்களைக் காட்டிலும் ஊசிமருந்து எடுத்துக் கொண்டவர்களில் நோய் தாக்கம் நான்கு மடங்கு குறைந்தது.

ஊசிமருந்தின் பயன் நீண்ட நாட்கள் இருந்தது. அதனால் ஊசி போடப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பொது மருத்துவரிடம் அல்லது மருத்துவமனைக்கு வந்தனர். மேலும் ஊசி எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது என்று கூறினர். ஸ்டீராய்டுகள் சர்க்கரை நோய், எலும்புப்புரை போன்ற தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஐம்பதாண்டில் புதிய சிகிச்சை முறை

புதிய மருந்தை வீடு, பொதுமருத்துவர் அல்லது மருத்துவமனையின் அவசரப் பிரிவில் எடுத்துக் கொள்ளலாம். ஊசிக்கான மருந்து மற்றும் நிதியுதவியை ஆஸ்ட்ரோசெனகர் (AstraZeneca) என்ற மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனம் வழங்கியுள்ளது. “ஆஸ்த்மா மற்றும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் சிகிச்சையில் எங்கள் கண்டுபிடிப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு நோய்களே உலகளவில் அதிக உயிரிழப்புகளுக்கான மூன்றாவது முக்கிய காரணம்.

இருந்தாலும் இந்த நோயை குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் 20ம் நூற்றாண்டிலேயே உள்ளது. நோயாளிகளின் காலம் முடியும் முன்பு அவர்களின் வாழ்வைக் காப்பாற்றுவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்று மேற்கு ஆஸ்திரேலியாவின் மூத்த க்ளினிக்கல் ஆய்வாளர் சஞ்சய் ராமகிருஷ்ணன் (Dr Sanjay Ramakrishnan) கூறுகிறார்.

“இக்கண்டுபிடிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளில் இந்த நோய்களுக்கான தீர்வாக இப்போதே புதிய சிகிச்சைமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது பயங்கரமானது. இது பற்றிய ஆய்வுகளுக்கு மிகக் குறைந்த நிதியுதவியே ஒதுக்கப்படுகிறது என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது” என்று இங்கிலாந்து ஆஸ்த்மா மற்றும் நுரையீரல் நோய்களுக்கான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு பிரிவின் இயக்குனர் டாக்ட சமந்தா வாக்கர் (Dr Samantha Walker) கூறுகிறார்.

உலகம் முழுவதும் பகலும் இரவும் உயிர் மூச்சுக்காக அவதிப்படும் கோடிக்கணக்கான ஆஸ்த்மா நோயாளிகளின் வாழ்வில் இக்கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/society/2024/nov/27/doctors-hail-first-breakthrough-in-asthma-and-copd-treatment-in-50-years?

– சிதம்பரம் இரவிச்சந்திரன்

நன்றி


Discover more from SARINIGAR

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

error: Content is protected !!